Published : 02 Mar 2021 01:43 PM
Last Updated : 02 Mar 2021 01:43 PM
44-வது சென்னை - புத்தகக் காட்சி அறிவுத் திருவிழாவாக நடந்து வருகிறது. வாசகருக்கும் படைப்பாளிக்குமான நூல்பந்தி போஜனம் இது.
புத்தகக் காட்சியில் யான் பெற்ற இன்பத்தை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது பகிர்தலின் காலமல்லவா… இதில் நான் வாசித்த புத்தகத்தைப் பற்றிய அறிமுகம்தான் இப்பதிவு:
***
‘அவயங்களின் சிம்ஃபொனி’ – இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் சுசித்ரா மாரன்.
இப்புத்தகத்தில் ‘இரவல் சிறகுகள்’ என்றொரு கவிதை. வர்த்தக வலை விரிக்கும் துணிக் கடைகளில், பேரங்காடிகளில் பணிபுரியும் சகோதரிகளின் வாழ்வியல் வலியை வார்த்தைகளுக்குள் மொண்டு வந்து தருகிறது.
விற்பனைப் பணிப் பெண்ணின் வேலையை துல்லியமாகக் கண்காணிக்கும் கேமராவுக்கு முன்னால் அவள் பகல், இயந்திரக் கண் சிமிட்டலானது என்பதைச் சொல்லும் சுசித்ராவின் மொழி சமூகப் பிழிவு.
***
இதேபோல் கைவிடப்பட்ட வீட்டைப் பற்றிய கவிதை… நினைவுகளின் சொல்வெட்டு. பழைய வீடு- அதில் வாழ்ந்தவர்களோடு அரூப உரையாடல் நடத்தும். அவ்வப்போது விழி கசக்கும். நினைவில் வீடிருக்கும் அனைவருக்குமான கவிதை இது. சரியும் சரித்திரம் சொல்கிறது.
***
‘இரவு’ எனும் கவிதையில்,
‘ஈருடலுள்ளும் இணைந்திசைக்கும்
இடைநில்லா அகப்பாடல்
அடர்மரக் கூகையின்
குழறும் யாமக் குரலிசை’
– என்றெழுதும்போது சுசித்ராவின் திருவாய்மொழி ஆப்பிள் பறிக்கிறது. நல்ல தமிழ்.
***
திங்கட்கிழமைகள்’ என்கிற கவிதையில்,
‘பருவத்தின் வாசலில்
வசந்தத்தின் முதல் பூவாக
மலந்த மண்டேக்கள்
மால்வேசி செம்பருத்திகள்
பாடம் செய்து பாகம் குறித்த
பக்கங்களில் எஞ்சி நிற்கிறது
திங்கள்களின் மிதமான குளிர்ச்சி’ - இக்கவிதை… கிழமைகளின் நற்றிணை.
***
ஒவ்வொரு மெட்ரோ பயணத்தின் எச்சத்திலும் ‘அன்பு கூர்ந்து இடைவெளியை கவனத்தில் கொள்ளவும்’ என்ற அறிவிப்பின் டிஜிட்டல் குரலைப் பின்தொடர்கிறது சுசித்ராவின் கவிதை லிபி இப்படி:
‘யாரேனும் சொல்லுங்கள்
இடைவெளி தரும் பெரும் வலியை
கவனத்தில் கொள்ளும்போது
அன்புகூர்வது இயலுமா என’
***
கல் தடுக்கி கல்லின் மேல் விழுந்து
சபிக்காதீர்கள்
உங்கள் சொல்லாலானது அது’
- என்கிற மின்வரிகள் ஒழுக்கத்தின் ஓடுபாதையில் அதிகாரப் புரணியின் காலிறுக்கி தடதடவென இழுத்துச் செல்கின்றன.
***
ஓர் எழுத்து
ஒரு மொழி ஆக்கியது
நம்மை அறிந்த மொழி’
- என்று நிறைவுறும் கவிதை… குவி மையத்தின் பெருவெளிச்ச ஒருங்கிணைப்பை சொல்லிவிடுகிறது.,
உலகின் மிக எளிமையானதும்… உலகின் கடினமானதும் ‘ஒன்றாதல்’தானே.
***
‘கிழமைகள் பிடிப்பதுபோல் தேதிகள் பிடிப்பதில்லை’ என்கிறபோது… இவரது ரசனையின் ருசி புரிகிறது. ஒரு மொழியின் அதிக மைலேஜ் என்பது இதுதான். முட்டுச்சந்தாகக் கூட இருக்கலாம். ஆனால் அது பிடித்தமானதாக இருக்க வேண்டும்.
***
’விளம்பர இடைவேளை’ எனும் கவிதையில்… நொடிப் பொழுதில் சட்டென்று ஒரு கமகம் நம்மை தொட்டுவிட்டுச் செல்கிறது.. தொலைக்காட்சி விளம்பரங்களை இனிதே நுகரும் கவிஞர்… பிராண்ட் புரொமோஷனாக விளங்கும் குட்டி குட்டி விளம்பரங்கள் ஒவ்வொன்றும் மென் கவிதைகளை உள்ளடக்கியது என்பதைச் சொல்லி நம்மை ஸ்வீட் எடு கொண்டாடு என்கிறார்.
***
பெருங்காட்டுச் சுனை
ஈரப் பதக் கண்கள்’
’இருளே தானன்று அரூபமாகி
பேருரு கொள்ளும்
நிழலின் மெளனம்
பேரச்சம்’
‘உனையாட்டி அந்நிணமூற்றி
புதியதோர் ஆரண்யம் செய்கிறேன்;
வா… வந்துகொண்டே இரு’
‘மிச்சமிருக்கும் பச்சயத்தால்
தோரணம் நாட்டி நிற்கிறது
முளறி’
‘அல்லியன் வளைக்க
பசுங்கிளை வளர்க்கிறது வல்லை’
’நோக்கக் குழையாமல்
விருந்தளிக்கும் அனிச்சங்களின்
அந்திமக் கால அடையாளமாகின்றன
எஞ்சியிருக்கும்
நமத்துப்போன பாப்கார்ன்கள்’
இப்படியாக சுசித்ராவின் கூட்டல் மொழி மின் விசிறியின் மூவிலைகளாக திசையெங்கும் சுழல்கிறது.
பழந்தமிழ் பரிச்சயத்துடன் நவீனக் கவிதை முடைகிற சுசித்ரா மாரனின் ‘அவயங்களின் சிம்ஃபொனி’ எனும் இத்தொகுப்பு… எல்லா விருதுகளுக்கும் உரிய சக்தி பீடமாக விளங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT