Published : 07 Nov 2015 01:07 PM
Last Updated : 07 Nov 2015 01:07 PM
ஆர்.எஸ்.எஸ். பற்றிய சரித்திரபூர்வமான உண்மைகளை மக்கள் மறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில் அந்த இயக்கம் மீண்டும் தலைதூக்குகிற அபாயத்தைக் குறித்து நாம் எச்சரித்திருந்தோம். நமது அனுபவங்களையும் நாட்டின் அனுபவங்களையும் விலக்கிவைத்து விட்டுப் பல சமூகப் பெரியார்கள் ஆர்.எஸ்.எஸ். வகுப்புவாத ஸ்தாபனம் அல்ல என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் எவரே வேண்டுமாயினும் ஆகுக; எக்கேடும் கெடுக!
இந்து-முஸ்லீம் பகைமை என்பது இந்தியாவை அடிமை கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சார்பு நடவடிக்கையாகவே உருவாக்கப்பட்டது. அது காரணம் பற்றி அக்கால தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சே ஒற்றுமை என்பதாக ஒலித்தது. பாரதியாரின் பாடல்களும் கருத்துகளும், ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை உறுதிப்படுத்தியே நிற்பதைக் காண்கிறோம்.
மகாத்மா காந்தி அதன் மீதே ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டினார்.
ஒரு ஹிந்து என்பவன் தனக்கு சகோதரர்களாக ஒரு முஸ்லீமையும், ஒரு கிறிஸ்துவனையும், ஒரு சீக்கியனையும் ஒரு இன்னபிற மதத்தானையும் அணைத்துக் கொண்டு வாழ்கிறவன் என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது.
வீர சிவாஜியை இந்த ஆர்.எஸ்.எஸ். மூலம் சரித்திரப் புரட்டர்கள் முஸ்லீம்களின் பகைவன் என்றும் இஸ்லாத்தின் விரோதி என்றும் சித்திரம் தீட்டுவது சரித்திரம் பற்றிய தவறான அறிவின் விளைவே ஆகும்.
சிவாஜி அவுரங்கசீபின் கொடுங்கோன்மையை எதிர்த்த ஓர் மக்கள் கூட்டத்தின் தலைவன். அவனது சகாக்களாகவும் ஆலோசர்களாகவும் பல முஸ்லீம்கள் இருந்துள்ளனர். அவுரங்கசீபுக்கு சிவாஜி எழுதிய கடிதங்களில் சிவாஜி இஸ்லாத்தையும், குர்-ஆனையும் எவ்வளவு மதித்துப் போற்றினான் என்பதற்குச் சான்றுகள் நிறையவே உள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஜனநாயகத்தில் சிறிதும் நம்பிக்கையற்றவர்கள், சோஷலிஸத் தீராப் பகைமை கொண்ட, மதமான பேய் பிடித்த இந்த வகுப்பு வெறிக் கூட்டம் காந்திஜியின், திலகரின், பாரதியின் பெயர்களையெல்லாம் பயன்படுத்திப் பசப்பி நிற்கிறது.
இவர்கள் காந்திஜியின் கொலைக்குத் தாங்கள் பொறுப்பேற்க இன்று தயங்குகிறார்கள். இது காந்திஜியின் வெற்றியே ஆகும். ஆனால் தேசத்தில் ஊழல் மலிந்துவிட்டது என்றும் அரசியல்வாதிகள் அனைவருமே சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டைக் கைவிட்டு விட்டார்கள் என்றும் நீலிக்கண்ணீர் வடிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
ஆம், நமது ஒழுக்கத்துக்கும், தார்மீக நெறிகளுக்கும், சுதந்திர இந்தியாவின் புனருத்தாரணத்துக்கும் சரித்திரம் காண முடியாத ஒரு மாபெரும் தலைவனை நாம் பெற்றிருந்தோம். அவரை மிலேச்சத்தனமாகக் கொன்ற கூட்டமே இந்த விமோசனமற்ற நிலைக்குப் பொறுப்பாகும். அவரையும் கொன்றுவிட்டு, அவரது சீலங்கள் சிறக்கவில்லையென உள்ளூர மகிழ்கிற இக்கூட்டம் அதை மாற்றுவதற்காக ‘இந்துக்களிடையே ஒற்றுமை’ என்று பசப்புகிறது.
இந்தியாவின் பிரச்னைகளை அனைத்துப் பகுதி ஒற்றுமையினாலும் பேதமற்ற சமுதாயத்தை இங்கே கட்டுவதாலும் மட்டுமே தீர்க்கவும், நமது நாகரிகத்தைக் காப்பாற்றவும் முடியும். இதைச் செய்யாமல் ‘இந்துக்களின் ஒற்றுமை’ என்பது வெறும் மாயை ஆகும்.
(ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள் கேள்வி-பதில்கள் புத்தகத்திலிருந்து)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT