Published : 20 Feb 2021 02:44 PM
Last Updated : 20 Feb 2021 02:44 PM
மைக்ரோ ஊடகங்களின் வருகையினால் தொழில்நுட்பப் புரட்சி நடந்ததோ இல்லையோ மக்களை தங்கள் நோக்கத்தின் வலையில் சிக்கவைக்கும் சூழ்ச்சிக்காரர்களின் தந்திரம் சிறப்பாகவே நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம்.
உண்மைச் செய்திகளை விட வதந்திகள் வேகமாக பரவுகின்றன. இத்தகைய வதந்திக்கு காரணமானவர்கள் ஒரே மாதிரியான அரசியல் பிரச்சாரத்தை செய்யும் ஒரே இயக்கத்தின் பல்வேறு ட்விட்டர் கணக்குகளைக் கையாளுபவர்கள் என்பதை ஒரு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
நாட்டில் ஒருபக்கம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மளமளவென்று ஏறிக்கொண்டே போகிறது என்றால் இன்னொரு பக்கம் அவற்றைப் பற்றிய விவாதத்துக்கே இடமில்லாத வகையில் மதவெறியைத் தூண்டும்வகையில் வதந்திகளும் பரவத் தொடங்குகிறது. இது எப்படி? இது ஒரு உதாரணம் அவ்வளவுதான்.
இந்த எளிய கணக்கைப் புரிந்துகொண்டால் நாட்டின் புற்றீசலாகப் பரவும் ஃபேக் செய்திகளின் பெருக்கத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
சாதாரண செய்திகளைவிட உள்நோக்கத்தோடு இட்டுக் கட்டி வெளியிடப்படும் செய்திகளுக்கு வேகமாக பரவும் வலிமை உண்டு. எங்கோ உள்ளவர்களின் காதுகளுக்கு சென்றுசேரும் ஃபேக் செய்திகள் அவர்களை ஒருகணம்கூட சிந்திக்கவிடாமல் செய்துவிடுகிறது. இந்த வதந்திகள் ஆத்திரமூட்டும் வகையில் கட்டமைக்கபபடுகின்றன.
உதாரணமாக ''பாகிஸ்தானின் கிரிக்கெட்டின் வெற்றியைக் கொண்டாடும் இந்திய முஸ்லிம்கள்'' என்றொரு செய்தி. இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும், எந்த விளையாட்டை யார் ரசிக்க வேண்டும் யார் விளையாடும் ஆட்டத்திற்கு யார் கைத்தட்டக் கூடாது என்பதெல்லாம் யாரும் தீர்மானிக்க முடியாது. அதுதான் ஒரு உண்மையான விளையாட்டு ரசனைக்கு அடிப்படை தகுதி. எதிரி நன்றாக ஆடினால் கூட ஒருநல்ல ரசிகன் அதனை கைதட்டி வரவேற்கவே செய்வான். ஆட்டத்தில் தனது அபிமான நட்சத்திரம் சொதப்பினாலும் அதற்காக முகதாட்சண்யம் பார்க்காமல் திட்டித் தீர்ப்பதையும் காணமுடியும். இதில் தேசவிரோதமோ தேசபக்தியோ எதுவாகவும் முத்திரை குத்துவதைவிட முட்டாள்தனம் வேறொன்றுமில்லை.
இரண்டாவது, இவர்கள் வைரல் என்று பரப்பியுள்ள அந்த வீடியோவை நன்கு கவனித்தால் தெரியும், அதில் அப்படி ஒரு சம்பவமே இந்தியாவில் நடந்தது அல்ல என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் இருக்கும் திரையை உற்றுநோக்கினால் அதில் பிடிவி ஸ்போர்ட்ஸ் என்ற பாகிஸ்தான் தொலைக்காட்சிதான் ஓடிக்கொண்டிருக்கிறது. ''சேம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதற்கு பாகிஸ்தானில் தாவுத் பொஹ்ரா மக்கள் கொண்டாட்டம்'' என்கிற தலைப்பில் அந்த வீடியோ யூட்டியூப்பில் பதிவேற்றப்பட்டிருக்கிறது என்ற உண்மையினை ஆல்ட் நியூஸ் எனப்படும் ஃபேக்செய்திகளை சரிபார்க்கும் ஆன்லைன் போர்ட்டல் ஒன்று இதனைக் கண்டறிந்துள்ளது.
இதனை மிக கவனமாக சரிபார்த்த ஆல்ட் நியூஸ் உடனடியாக செய்தியாகவும் வெளியிட்டது. ஆனால் அதற்குள் ஃபேக் செய்திதான் முந்திக்கொண்டு மக்களை சென்றடைந்தது.
ஒரு சாரார்தான் இதை செய்கிறார்கள் என்றில்லை. நீ அப்படி செய்கிறாயா, சரி நானும் செய்கிறேன் என்று இன்னொரு சாராரும் இப்படி கிளம்பியதுதான் வேடிக்கை. ''நாதுராம் கோட்சேவிற்கு மாலை அணிவிக்கும் மோடி'' என்றொரு ஃபேக் செய்தி. அதில் இச்செய்தியின் தலைப்பின்கீழ் இரண்டு படங்களை பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இரண்டிலுமே வெவ்வேறு சிலைகளுக்கு மோடி மாலை அணிவிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு படத்தின் கீழே Gandhi என்றும் இன்னொரு படத்திற்குக் கீழ் killer of Gandhi என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் படத்தை பார்த்ததுமே நமக்கு தெரிவது இது காந்திதான் என்று. ஆனால் இரண்டாவது படத்தில் உள்ளதை அவ்வாறு உறுதியாக சொல்லமுடியவிலலை. ஆனால் அதன் கீழே உள்ள வாசகமான Killer of Gandhi என்பது இது நாதுராம் கோட்சே என புரிந்துகொள்ளச் சொல்கிறது. ஆனால் இது உண்மை இல்லை என ஆல்ட் நியூஸ் கண்டுபிடித்து உடனடியாக செய்தி வெளியிட்டது.
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரும் சங்பரிவார் தத்துவத்தின் முக்கியமானவருமான தீன்தயாள் உபாத்யாயாவின் மார்பளவு சிலைக்கு மாலைபோட்ட புகைப்படத்தைத்தான் நாதுராம் கோட்சேவின் சிலைக்கு மாலைபோட்டதாக திரித்து பகிர்ந்துள்ளதாக தெரிவித்தது ஆல்ட் நியூஸ்.
மேலும், இதன் உண்மையான புகைப்படத்தை, 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ஆம் தேதியன்று, 'பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்'' என்ற செய்தியினைக் கொண்ட கட்டுரையை இண்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளதை ஆல்ட் நியூஸ் சுட்டிக்காட்டியது. ஆனால் பொய்ச்செய்திகளுக்கே உண்டான வேகத்தோடு உண்மையான செய்தியைக் காட்டிலும் கோட்சேவுக்கு மோடி மாலை அணிவிக்கும் காட்சி என்ற செய்தியே வலைதளங்களில் உலவத் தொடங்கியது.
''இந்தியா ஏமாற்றப்படுகிறது'' என்ற இந்த நூலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படி வெளியான கிட்டத்தட்ட 82 போலிச் செய்திகளை இனங்காட்டப்பட்டுள்ளது. இவற்றில் பல செய்திகள் ஏற்கெனவே ஊரறிந்த வதந்திகளாக உலா வந்தவை. ஆனால் அப்பாவி மக்களால் நம்பப்பட்டவை.
ஃபேக் செய்திகளை சரிபார்க்கும் ஆல்ட் நியூஸ் பத்திரிகையின் ஆசிரியரான பிரதீக் சின்ஹா இந்நூலைத் தொகுத்தவர்களில் முதன்மையானவர். கடந்த இரண்டாண்டுகளில் வெளியாகியுள்ள பெரும்பாலான பொய்ச்செய்திகளையெல்லாம் எடுத்துக்கொண்டுள்ளார். அத்தகைய ஃபேக்செய்திகளின் உண்மையான மூலச்செய்தி எத்தகைய தருணததில் வெளியானது, அதன் உண்மையான செய்தி என்ன என்பதையெல்லாம் விரிவாக விளக்கிக் கூறியுள்ளார். ஒருவகையில் ஃபேக் செய்திகளை தோலுரித்துக் காட்டியுள்ளார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தமிழில் கவனிக்கத்தக்க வகையிலான புத்தகங்களை வெளியிட்டுவரும் எதிர் வெளியீடு இப்புத்தகத்தை இ.பா.சிந்தனின் எளிய மொழிபெயர்ப்பில் சிறப்பாக கொண்டுவந்துள்ளது.
''இந்தியா ஏமாற்றப்படுகிறது'' என்ற இந்த நூலில் இடம்பெற்றுள்ள மதவெறியைப் பரப்புதல் என்ற பிரிவில் வெவ்வேறு தரப்புகளின் பொய்ச்செய்திகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய செய்திகள் பலமுனைகளிலிருந்து வந்துள்ளன.
எனினும் முஸ்லிம்களுக்கு தேசப்பக்தி இல்லை என்ற பொய்யான பிரச்சாரத்தைக் கட்டமைக்க ஒரு சாரார் இதற்கு பின்னால் கடுமையாக வேலை செய்துள்ளதைப் பார்க்கமுடிகிறது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள பல்வேறு எதிர்க்கட்சியினரையும் இந்துவிரோதியாக சித்தரிக்கும் வேலைகள் செய்யப்பட்டன. தற்போது நாடு முழுவதும் பரவிவரும் பிரச்சாரங்களுக்குப் பின்னால் இந்த போலி செய்திகளுக்கு எவ்வளவு பங்கு உள்ளது என்பதை ஆராயப் புகுந்தால் நாம் மிகப்பெரிய அளவில் முட்டாளாக்கப்பட்டுள்ளதை உணரலாம். அதற்காகத்தான் இந்நூலுக்கு இந்தியா ஏமாற்றபபடுகிறது என்று பெயர் வைத்துள்ளனர் போலும்.
எது உண்மை, எது பொய் என்பதை அறிவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளாமல் செய்திகளை ஆவலோடு கேட்டு அதைப் பரப்புவது தனிநபர்கள் மட்டுமல்ல, ஊடகங்களும்தான் என்கிறது இந்நூல்.
ராகுலை மட்டம் தட்டுவதற்கான செய்திகள், அவமானப்படுத்தப்படும் ஜவஹர்லால் நேரு போன்ற பிரிவுகளில் உள்ள செய்திகள் பற்றிய கேவலமான பதிவுகளும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் ஒன்று 1962ல் சீனாவுடனான போரில் தோற்றதற்காக நேருவை பொதுமக்கள் நையப்புடைத்தனர் என்றொரு தலைப்பு.
இத்தகைய உள்நோக்கமுள்ள பொய்ச்செய்திகளை பரப்புபவர்களுக்கு மனசாட்சிகூட இல்லை என்பதை இதன்மூலம் அறிந்துகொள்ளலாம். இந்திய விடுதலைக்காக நேரு 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததை இங்கே நினைவுகூர்வது நிச்சயம் பொருத்தமாக இருக்கும். ஆனால் இச்செய்திகள் பரவும் அதேநேரத்தில்தான் வளர்த்தெடுக்கப்படும் மோடி என்ற மாயபிம்பம் உருவாக்கப்பட்டதை குறிப்பிட்டும் சில செய்திகள் சுட்டிக்கப்பட்டப்பட்டுள்ளன.
உண்மையில், ஃபேக் செய்திகளை பரப்பி ஏதாவது சாதித்துவிடமுடியுமா என்றால் நிச்சயம் முடியும், மக்களைப் பிளவுபடுத்தி வெறுப்பரசியலை மட்டுமே அறுவடை செய்ய முடியும். மக்களின் இதயங்களை ஒருபோதும் வெல்லமுடியாது.
பொய்ச்செய்திகளை மைக்ரோ ஊடகங்களில் ஒரு சாரார்தான் பரப்புகிறார்கள் என்றில்லை, மேலே குறிப்பிட்டதைப் போல இன்னொரு சாராரும் இத்தகைய வேலைகளில் ஈடுபடவும் செய்கின்றனர். ஆனால் இதில் நடப்பது என்னவென்றால், ''முள்ளு மேல சேலப்பட்டாலும் சேலமேல முள்ளுபபடடாலும் சேலைக்குத்தான் நாசம்'' என்பதுதான். நாட்டை ஒருவழிப் பாதையில் கொண்டுசெல்ல நினைப்பவர்களுக்கும் இங்கு வாழும் அனைவருக்குமான தேசம் இந்தியா என்ற தாத்பர்யத்தை புரிந்துகொண்டவர்களுக்குமான வித்தியாசம் அது.
இந்தியா ஏமாற்றப்படுகிறது
தொகுப்பு: பிரதீக் சின்ஹா / டாக்டர் சுமையா ஷேக் / அர்ஜூன் சித்தார்த்
தமிழில்: இ.பா.சிந்தன்
முதல் பதிப்பு: ஜனவரி 2020
எதிர் வெளியீடு,
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002
பக்.328, விலை ரூ.320
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT