Published : 14 Jun 2014 11:00 AM
Last Updated : 14 Jun 2014 11:00 AM
சென்னையில் கடந்த ஏழாம் தேதி(சனிக்கிழமை) நடத்தப்பட்ட ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்னும் கருத்தரங்கில் எழுத்தாளர்கள் பெருந்தேவி, ராஜன்குறை, ராமானுஜம் வாசித்த கட்டுரைகளின் சில பகுதிகள் இங்கே அளிக்கப்படுகின்றன.
பெருந்தேவி
அசோகமித்திரனின் மானசரோவர் என்னும் கதை, நவீனமயமாக்கத்தின் விசைகள் கட்டமைக்கும் நவீன வாழ்வின் வேகச்சுழலில் தவிக்கும் மனிதர்களைப் பற்றியது. சுழலில் நீந்தி அவர்கள் கரைசேர அவர்களின் யத்தனங்களை, யத்தனங்களின் பொருளற்றதன்மையைப் பற்றியது. சுழலின் வேகத்தைத் தமதாக்கத் தெரியாமல் அல்லது அதில் விருப்பமில்லாமல் விலகியிருப்பவர்கள் பற்றியது.
நவீன மனிதருக்கு இருப்பதாக முன்மொழியப்படும் ஓர்மையும் தன்னுறுதியும் புனையப்படுகிற சுயத்தை வியந்தோதுவதற்கு மாற்றாகத் துறத்தல், வாக்குமூலம் தருதல், தன்னையே தியாகம் செய்தல், மனநிலை பிறழ்தல் மற்றும் சுயம் மறுத்தலை நவீன வாழ்வின் அல்லல்களுக்கான தீர்வாக மட்டுமல்ல, நவீன வாழ்வு குறித்த நவீனத்துவ விமர்சனமாகவும் முன்வைப்பது.
ராஜன் குறை
மனித ஏற்பாடுகளின் குரூரமும், அபத்தமும், அர்த்தமின்மையும், சோகமும், அவலமும் சிறு, சிறு வாழ்க்கைச் சித்திரங்களாகப் பக்கத்திற்குப் பக்கம் திணற அடிக்கும் ‘இன்று’ நாவல்தான் நெருக்கடி நிலை என்று இந்திய வரலாற்றில் அறியப்பட்ட அரசியல் நிகழ்வின் பதிவு. இது எந்த அரசியலைப் பேசுகிறது? ஏன் டால்ஸ்டாயினைத் தொடர்ந்து சுட்டுகிறது?
நாவலின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கோட்பாட்டாளர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் அசம்பாவித மரணம் குறித்த குறிப்பொன்று வருகிறது. நாவலின் இறுதியில் ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தொடர்பு கொண்டவர்கள் இருவர் பேசிக்கொள்கிறார்கள். 1980 ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்து இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆவதற்கான சாத்தியங்கள் தென்படும் சூழலில் அவனிடம் மற்றவன் “அர்த்தம்! நாம் தேடத்தேட அது நழுவிக்கொண்டே போகிறது” என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கிச் செல்வதுடன் நாவல் முடிகிறது.
உண்மையில் இந்த நாவல் நெருக்கடி நிலை குறித்தது, என்றோ ஆர்.எஸ்.எஸ். குறித்தது என்றோ, ஏதோவொரு விதத்தில் இந்திய அரசியல் வரலாறு குறித்தது என்றோ சொல்ல முடியாது. அமைப்புகள், அதிகாரம், வன்மங்கள், ஆசாபாசங்கள், விபத்துகள், வன்முறை, என்று எந்த ஒரு பிரதேசத்திலும், எந்த ஒரு காலத்திலும் நிகழக்கூடியதாக இந்த சம்பவங்களை மாற்றியமைத்து விடலாம் என்பதுதான் உண்மை. தலைப்பின் ‘இன்று’ ஒரு கால அணுவாக நிரந்தர நீட்சி கொள்கிறது.
ஆனால் இவ்வளவு அவலச் சுவையிலும் இந்த நாவல் மனதை நெகிழ்த்தக் காரணம் நாவலின் பின்புலத்தில் அன்றாடத்தின் உயிர்ப் பற்று மங்காதிருக்கிறது. முகம் தெரியாத ஊர்களில் அந்நியர்களுடன் உறவுகள் ஏற்படுவதும், நட்பு ஏற்படுவதும் சாத்தியமாகிறது. எந்தச் சூழ்நிலையிலும் மனங்களில் ஆசாபாசங்கள், அபிலாஷைகள் நிறைந்துதானிருக்கின்றன. கல்லுக்குள் உயிர்த்துவிடும் தேரையைப் போல எவ்வளவு கடினமான சூழலிலும் வாழ்வை நோக்கிய ஈர்ப்பு துளிர்க்கிறது.
தன் மகனுக்குச் சொல்லும் அறிவுரையை முகமறியாத அவன் நண்பனுக்கும் சொல்லும் சீக்காளி அம்மாக்கள் இருக்கிறார்கள். வரலாற்றுவாதத்திலும், இலட்சியவாதத்திலும் வாழ்வின் உத்தரவாதங்கள் எதுவுமில்லை. அவை அலைகளின் மேற்பரப்பில் நுரைத்து அடங்கும் நீர்போல. அந்த அலைகள் மோதியடங்கும் நிலப்பரப்பாகிய, நெடுந்தோங்கி நிற்கும் கரும்பாறையாகிய அன்றாடத்தில்தான் இருக்கிறது வாழ்வின் உத்தரவாதம். அது தனி இருப்புகளான உயிரிகளை, அவற்றின் உயிர்ப் பற்றுக்களை உறவுகளாக மாற்றித்தருகிறது. எத்தனை வரலாற்று அலை அடித்தாலும் அந்தப் பற்றும், உறவுகளும் சிதறிவிடாது.
இலட்சியம் என்ற பித்த நிலைதான் வாழ்வுக்கு அப்பால் அர்த்தங்களைத் தேடுகிறது. அன்றாடம் உயிர் வாழ்வின்மீது கொள்ளும் பற்றின் இன்றியமையாமையின் விகசிப்பினைக் காட்டுகிறது. அசோகமித்திரனின் அழகியல் அந்த அன்றாடத்தின் காட்சிகளே.
ராமானுஜம்
இன்னும் வரலாறு என்ற தொழில்நுட்பம் எல்லா மனிதர்களையும் முற்று முழுவதுமாக ஆக்கிரமிக்கவில்லை. 18-வது அட்சக்கோடு நாவலின் சிறப்புப் பண்பு இதுதான்: மிகக் குறுகிய காலத்தில் சமூக அடையாளக் குறிகளும் சுயவரையறைகளும் காலச் சுழற்சியில் சிக்கிக்கொண்டு பெரும் மாற்றத்திற்கு உள்ளாகின்றன. நேற்றைய அடிப்படைகள் இன்று தலைகீழாகிப் போகின்றன.
இன்றைய அடிப்படைகள் நாளை தலைகீழாகிப் போகின்றன. இந்த மாற்றத்தில் தனிமனிதர்கள் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சிக்கலின் ஒரு பகுதியாக அசோகமித்திரன் வாழ நேர்ந்தது காலம் அவருக்குக் கொடுத்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஈடில்லா அனுபவத்தை அவர் இலக்கியமாக்கியதற்கு நாம் என்றும் அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், கால வெள்ளத்தில் மிகச் சுலபமான காணாமல் போயிருக்கக்கூடிய மனித அவலங்களை ஒரு வரலாற்று அனுபவமாக நமக்கு அளித்திருக்கிறார். ஒரு சிறந்த படைப்பாளியின் பண்பு இதுவாகத்தானே இருக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT