Published : 13 Feb 2021 08:29 AM
Last Updated : 13 Feb 2021 08:29 AM
அஞ்சலை அம்மாளுக்கு நம் தமிழக வரலாற்றில் நிறைய முக்கியத்துவங்கள் இருக்கின்றன. தனது வாழ்க்கையையும் சொத்துக்களையும் இந்தியாவின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர். சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சிறைவாசம் ஏற்றவர். வயிற்றில் பிள்ளையைச் சுமந்தபடியும், பெற்றெடுத்த பிள்ளையோடும் சிறையில் இருந்த அனுபவங்கள் இவருக்கு உண்டு. காந்தி, ராஜாஜி, பெரியார், ஓமந்தூர் ராமசாமி, காமராஜர் என முக்கியமான தலைவர்களோடு அரசியல் ஆலோசனை நடத்தியவர். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
இப்படி அஞ்சலை அம்மாளைப் பற்றி சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் அஞ்சலை அம்மாளைத் தமிழகம் அறிந்தது குறைவுதான். அஞ்சலை அம்மாளைப் பற்றி வெவ்வேறு புத்தகங்களில் குறிப்புகள் இருந்தாலும் அவருடைய முழுமையான வரலாற்றைப் பேசும் புத்தகம் ஒன்று வெளியாவது இதுதான் முதன்முறை. ஊடகத் துறையில் நெடுங்காலமாகப் பணியாற்றிவரும் ராஜா வாசுதேவன் இந்த முக்கியமான பணியைச் செய்திருக்கிறார்.
புத்தகங்களிலிருந்து கிடைத்த தகவல்களோடு மட்டுமல்லாமல் அஞ்சலை அம்மாளின் வாரிசுகளோடு உரையாடியும் பல விஷயங்கள் திரட்டப்பட்டிருப்பதன் வழியாக அவருடைய வாழ்க்கையின் முழுமையான சித்திரம் இந்தப் புத்தகம் வழியாகக் கிடைக்கிறது. சில கற்பனைப் பாத்திரங்களையும் இந்தப் புத்தகத்தில் உலவவிட்டு, ஒரு நாவல்போல எழுதியிருப்பது புத்தகத்துக்குக் கூடுதல் சுவாரஸ்யம் தருகிறது.
- கதிரவன்
அஞ்சலை அம்மாள்
ராஜா வாசுதேவன்
தழல் வெளியீடு
அண்ணாநகர், சென்னை-40.
தொடர்புக்கு: 93608 60699
விலை: ரூ.250
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT