Published : 06 Feb 2021 03:16 AM
Last Updated : 06 Feb 2021 03:16 AM

மேன்மையும் மதிப்பும் துலங்கும் கனவு

என் இலக்கிய நண்பர்கள்

எம்.வி.வெங்கட்ராம்

டிஸ்கவரி புக் பேலஸ்

கே.கே.நகர் மேற்கு, சென்னை-600078.

தொடர்புக்கு: 87545 07070

விலை: ரூ.150

தாய்மொழி தமிழாக இல்லாத பட்டு நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் எம்.வி.வெங்கட்ராம். தமிழ் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபாடு ஏற்பட்டு, பள்ளிப் படிப்பு முடிவதற்கு முன்னரே நிறைய கதைகளை எழுதிப் பயின்று, தமிழில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய லட்சியப் பத்திரிகையான ‘மணிக்கொடி’யில் 18 வயதில் முதல் கதை பிரசுரத்தைப் பார்த்தவர். முதிரா வயதில் அந்த இளைஞன் எழுத்தில் நடத்திய சாதனைக்கு லௌகீக வாழ்க்கையில் மிகப் பெரிய பலியைக் கொடுக்க வேண்டியிருந்தது. பெரியவனான பிறகும் உணவூட்டுவதற்கு, ஒப்பனை செய்வதற்கு உதவியாளர்கள் இருந்த செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் கும்பகோணத்தில் பிறந்த எம்.வி.வி., குடும்ப வியாபாரத்தில் படிப்படியாக ஈடுபாட்டை இழந்து, பெரும் கனவுடன் தொடங்கிய இலக்கியப் பத்திரிகையில் நஷ்டப்பட்டு, மன ஆரோக்கியத்தையும் இழந்து வாழ்ந்தவர்.

விழிப்பிலும் கனவுகளும் அமானுஷ்யக் குரல்களும் துரத்த, குடும்பத்தினர் வறுமையின் பாழுங்கிணற்றுக்குள் விழுந்துவிடாமல் காப்பாற்ற தான் இலக்கியம் என்று நம்பியதற்கு எதிரான எழுத்துகளைச் சலிக்க அலுக்க எழுதியவர். இத்தனை துயரங்களையும் மீறி தமிழின் அழியாத படைப்புகள் என்று சொல்லக்கூடிய ‘வேள்வித்தீ’, ‘நித்யகன்னி’, ‘காதுகள்’ போன்ற நாவல்களையும், ‘பைத்தியக்காரப் பிள்ளை’ போன்ற சிறுகதைகளையும் படைத்தவர். அவலம் என்று சொல்லத்தக்க அன்றாட வாழ்வை சில பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தாலும் அவரிடம் தேயாமல் இருந்த கனிவையும் மேன்மையையும் நேர்மையையும் காண்பிக்கும் நூலாக ‘என் இலக்கிய நண்பர்கள்’ என்ற இந்தச் சிறிய நூல் விளங்குகிறது. தி.ஜானகிராமன், க.நா.சு, மௌனி மூன்று பேரைப் பற்றி அவர் எழுதியிருக்கும் இந்த நூல், ஒரு காலகட்டத்தில் இருந்த இலக்கியச் சூழல், மனிதர்கள் கொண்டிருந்த மேலான விழுமியங்களின் ஆவணமும்கூட.

இந்தப் புத்தகம் ஒரு கனவோடு தொடங்குகிறது. அந்தக் கனவில் ஒரு அரச மரத்துக்கு அடியில் க.நா.சு., தி.ஜானகிராமன் வருவதற்காக வெற்றிலைச் செல்லத்தோடு எம்.வி.வி. காத்திருக்கிறார். அந்தக் கனவில் எம்.வி.வி. தனது வெற்றிலைச் செல்லத்தையும் அதில் வைத்திருந்த சில நூறு ரூபாய் நோட்டுகளையும் தொலைக்கிறார். அந்தக் கனவிலேயே எம்.வி.வி.யின் வாழ்க்கையும் விதியும் துலங்கிவிடுகிறது.

தி.ஜானகிராமனிடம் கொண்ட உறவு ஆத்மார்த்தமும் மதிப்பும் நன்றியும் கொண்டதாகத் தெரிகிறது. தி.ஜானகிராமனுக்கு எம்.வி.வி. மேல் ஒருவிதக் குருமதிப்பு இருந்திருப்பதை உணர முடிகிறது. ‘மோக முள்’ நாவலில் கதாபாத்திரமாகவே இடம்பெறும் அளவுக்கு அவர் மனத்தில் எம்.வி.வி. இடம்பெற்றிருந்திருக்கிறார். எம்.வி.வி.யின் ‘காதுகள்’ நாவலில் கதாநாயகன் மகாலிங்கம் அனுபவிக்கும் அத்தனை சோதனைகளும் எம்.வி.வி. அனுபவித்தது. தனக்குள்ளேயும் தான் வாழ்ந்த சமூகத்திலும் தன்னைத் தொலைத்த எம்.வி.வி., சென்னைக்கு வந்து தி.ஜா. வீட்டில் அடைக்கலம் இருந்தபோது, எம்.வி.வி.யின் அக, புற நெருக்கடிகளைக் குணப்படுத்த தி.ஜா. செய்யும் முயற்சிகள் அவரை மேலான ஒரு மனிதனாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இயற்கையிலேயே சங்கோஜ குணம் கொண்ட வெங்கட்ராமை மனவாதைகள் வேறு கூடுதலாக அல்லலுக்குள்ளாக்கிக் கிழித்துப்போட்ட அந்த மனிதனை தி.ஜா. மட்டுமின்றி அவரது குடும்பமே சேர்ந்து போஷிக்கிறது.

சிறுகதையின் அற்புதம் என்ற அந்தஸ்தையும் நட்சத்திர மதிப்பையும் அடைந்திருந்த மௌனி, தனது 30-வது வயதில், எம்.வி.வி.யை அவரது வீட்டுக்குப் போய்ச் சந்தித்தபோது 17 வயது வாலிபனாக எம்.வி.வி. இருக்கிறார். மௌனியோடு எம்.வி.வி. கொள்ளும் உறவு தி.ஜானகிராமனைப் போன்றதல்ல. விமர்சனமும் மதிப்பும் கொண்ட உறவாகத் தெரிகிறது. மிகப் பெரிய ஆச்சரியமும் மௌனியின் மொழி மீதான வழிபாட்டுணர்வும் சேர்ந்துதான் அந்த உறவு ஆரம்பமாகிறது. போகிற போக்கில் காட்சிகளைத் தோற்றுவிப்பதும் பிம்பங்களை உயிர்ப்பிப்பதும் அவரது வலிமை என்று மௌனியின் சிறுகதைக் கலையை நாடிபிடித்துவிடுகிறார். அதே வேளையில், மௌனிக்கு க.நா.சு.வும் புதுமைப்பித்தனும் அளித்த மதிப்பு அதீதம் என்ற விமர்சனமும் நூல் முழுக்க இருக்கிறது. சிறுகதையில் அத்தனை ஆளுமையைக் கொண்ட மௌனிக்கு மொழியைக் கையாள்வதில் சிக்கல் இருந்ததற்கான உதாரணங்களையும் தருகிறார். இத்தனை விமர்சனங்களுக்கு இடையிலும் மௌனியின் கடைசிக் காலம் வரை எம்.வி.வி. அவரைத் தொடர்ந்த சித்திரம் இந்தப் புத்தகத்தில் உள்ளது. கடைசிக் காலத்தில் மௌனியிடம் ஊடுருவிவிட்ட வைதிகரையும் இனம்கண்டு சொல்கிறார்.

இந்த நூலின் நெடிய பதிவு க.நா.சு. பற்றியதுதான். பிரியம், விமர்சனம், மதிப்பு என்று அந்த உறவைச் சொல்லலாம். நேசம் நீங்காமல் தெருவிலும் வீட்டிலும் சந்தித்தவுடன் சண்டை போடுகிறார்கள். க.நா.சு. என்ற படைப்பாளி மீதுதான் எம்.வி.வி.க்கு மரியாதை அதிகம் உள்ளது. அத்துடன் க.நா.சு. சொல்லும் சின்னச் சின்னப் பொய்களையும் தொடர்கதை எழுதுவதாக உறுதிதந்துவிட்டு இழுத்தடித்த கதையையும் வாஞ்சையுடனேயே விவரிக்கிறார். க.நா.சு.வையும் கடைசி வரை தொடர்ந்திருக்கிறார் எம்.வி.வி.

கரிச்சான் குஞ்சு, ச.து.சு.யோகியார், திரிலோக சீதாராம் போன்ற ஆளுமைகளின் முகங்களும் குணங்களும் இந்த நூலில் பதிவாகியுள்ளன. திரிலோக சீதாராம், பெருமழை பெய்யும் நடுச்சாமத்தில் எம்.வி.வி.யின் வீட்டுக்கு வந்து, அப்படியே மழையில் இறங்கிப் போய் மௌனியிடம் சென்று ‘சிவாஜி’ பத்திரிகைக்குக் கதை வாங்கலாம் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அந்தக் காட்சி கனவுபோல உள்ளது. சில மகத்தான ஆளுமைகள் சேர்ந்து கண்ட கனவும், அவை ஏற்படுத்திய கோலமும்போலத்தான் இந்த நூல் தொனிக்கிறது!

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x