Published : 28 Nov 2015 10:09 AM
Last Updated : 28 Nov 2015 10:09 AM
ஜோகன் பிலிப் பெப்ரிசியஸ் என்ற பெயர் தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள், அகராதியியலாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று. ஏனெனில், பெப்ரிசியஸ்தான் தமிழின் முதல் ‘தமிழ்-ஆங்கிலம்’ அகராதியான ‘பெப்ரிசியஸின் தமிழ்-ஆங்கிலம் அகராதி’யை (Fabricius’s Tamil-English Dictionary) உருவாக்கினார்.
ஜெர்மனியில் பிறந்தவரும், லுத்தரன் சபையைச் சேர்ந்தவருமான பெப்ரிசியஸின் இந்த அகராதி, வீரமாமுனிவரின் சதுரகராதி வெளிவந்து 47 ஆண்டுகளுக்குப் பின் 1779-ல் வெளியானது. இந்த அகராதியின் முதல் பதிப்பில் 9,000 சொற்கள் இருந்தன. மரபுத் தொடர்களும் இந்த அகராதியின் முக்கியமான அம்சம். இந்த அகராதியைப் பின்பற்றித்தான் ‘ராட்லரின் தமிழ்-ஆங்கிலம் அகராதி’ (1834), ‘வின்சுலோவின் தமிழ்-ஆங்கில அகராதி’ (1862) போன்ற முக்கியமான அகராதிகள் வெளியாயின.
வையாபுரிப் பிள்ளை ஆசிரியராக இருந்து வெளியிட்டதும், தமிழின் முதன்மையான பேரகராதியுமான சென்னைப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் லெக்ஸிக’னுக்கு மேற்கண்ட அனைத்து அகராதிகளுமே உதவிபுரிந்திருக்கின்றன.
19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும் பெப்ரிசியஸின் அகராதி திருத்தியும் விரிவாக்கியும் வெளியிடப்பட்டது. காலத்தால் இப்போது பழையதாகிவிட்டாலும் ஆய்வு மாணவர்களுக்கும், அகராதியியலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் பயன்படக்கூடிய இந்த அகராதியை சந்தியா பதிப்பகம் மீள்பதிப்பு செய்திருக்கிறது. வரவேற்க வேண்டிய முயற்சி இது. அப்படியே மீள்பதிப்பு செய்யப்பட்டிருக்கும் இந்த அகராதியின் அட்டையில் பதிப்பாசிரியர் பெயரோ என்று தோன்றும் வண்ணம் ‘மீள்பதிப்பு: சந்தியா நடராஜன்’ என்று போட்டிருப்பது பெரும் உறுத்தல்!
- தம்பி
தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
(தமிழ்-ஆங்கில அகராதி)
விலை: ரூ. 900
வெளியீடு: சந்தியா பதிப்பகம், சென்னை-83.
தொலைபேசி: 044- 2489 6979,
மின்னஞ்சல்: sandhyapathippagam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT