Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
காந்திஸ் பொலிட்டிக்கல் ஃபிலாஸஃபி: எ க்ரிட்டிக்கல் எக்ஸாமினேஷன்
பிக்கு பாரேக்
பால்கிரேவ் மேக்மில்லன் - 1989
விலை: ரூ.1,895
காந்திய ஆய்வுகளில் பிக்கு பாரேக் எழுதிய ‘காந்தியின் அரசியல் தத்துவம்: ஒரு நுண்ணாய்வு’ (Gandhi’s Political Philosophy: A Critical Examination) என்ற ஆங்கில நூல் குறிப்பிடத் தக்க ஒன்று. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் முன்வைத்த சில வாதங்கள் இன்றைய காலத்தில் கேள்விகளாக மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன. காந்தியின் அரசியல் தத்துவ நிலைப்பாடுகள் எவ்வகையில் காலனிய ஆதிக்கத்தை எதிர்கொண்டன, எவ்வகையில் இந்தியா குறித்த நம் கற்பனைகளைத் தீர்மானித்தன, எங்கெல்லாம் தேவைகளும் போதாமைகளும் உள்ளன என்பது பற்றிய விரிவான சித்திரத்தை இந்நூல் வழங்குகிறது.
பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிருந்து ஓர் அரசு இங்கு வந்து பல தலைமுறைகளுக்கு இயந்திரத்தனமாக உழைத்து, பல்வேறு அமைப்புகளை நிரந்தரத்தன்மையோடு அமைத்து வளங்களைச் சுரண்டுவது என்பது உலகில் இதுவரை நடைபெறாத ஒன்று. காந்தி டால்ஸ்டாயை வாசித்தார். தரக்நாத் தாஸுக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில் இந்தியர்களின் சம்மதம் இல்லாமல் இந்த அடக்குமுறை சாத்தியம் இல்லை என்றிருந்த வாதம் காந்தியின் மனதில் ஆழமாகப் பதிந்துபோனது. இதன் விளைவாக, காந்தி அக்கேள்விக்கு விடை தேட இந்திய சமூகத்தின் வீழ்ச்சி என்ற கோட்டில் சிந்திக்கத் தொடங்கினார். தீண்டாமை போன்ற சமூக நோய்கள் இந்திய சமூகத்தைப் பாதிக்கின்றன, இந்தியா தன்னைச் சுயபரிசோதனை செய்து மீட்டுருவாக்கிக்கொண்டால் மட்டுமே அதனால் சுதேசியாக இயங்க முடியும், அதற்கு காலனிய எதிர்ப்பு மட்டும் போதாது என்ற கருத்துக்கு காந்தி வந்தார். மற்ற உலகத் தலைவர்களைப் போல் அரசியல் அதிகாரம் நோக்கி மட்டும் முதன்மையாக இயங்காமல் சமூகம் நோக்கியும் தன் கவனத்தை காந்தி திருப்ப இது ஒரு காரணம். காந்தி இந்திய சமூகத்தின் மீள்கட்டமைப்பு என்று நம்பிய எவற்றையெல்லாம் செய்தார் என்று இந்நூல் அவற்றின் தத்துவப் பின்புலத்தோடு விரிவாக ஆராய்கிறது.
நவீன நாகரிகம்
காந்தியின் தனித்துவமாக பாரேக் ஒரு வாதத்தை முன்வைக்கிறார். பிரிட்டிஷ் ஆதிக்கம் மூன்று தளங்களில் இந்தியாவைப் பாதிக்கிறது என்று காந்திக்கு முந்தைய தலைவர்கள் ஏற்கெனவே வரைபடம் போட்டுவிட்டார்கள். இந்தியா அரசியல்-பொருளாதாரரீதியாக எவ்வாறு சுரண்டப்படுகிறது என்று நவ்ரோஜி, சுரேந்திரநாத், கோகலே போன்றவர்கள் எழுதினர். இந்தியாவின் பண்பாட்டுக்கு ஆபத்து வந்ததாக திலகர், விபின் சந்திரபால், விவேகானந்தர் போன்றவர்கள் பேசினர். காந்தி இம்மூன்றையும் முதலில் ஒன்றிணைத்து, அதோடு நிற்காமல் ஒரு படி மேலே சென்றார். காலனியாதிக்கம் செய்த நாடுகளில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி தொழிற்புரட்சிக்கு வித்திட்டது, அது சந்தையை உருவாக்கியது, அது அவர்களை இங்கே வரத் தூண்டியது, அவர்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் சில சமாதானங்களையும் அது வசதியாக ஏற்படுத்தித் தந்தது. எனவே, காந்தி காலனியாதிக்கத்தை பிரிட்டிஷ் அரசின் அரசியல் அடக்குமுறையாகவோ பிரிட்டிஷ் சமூகத்தின் பொருளாதார அடக்குமுறையாகவோ சுருக்கிவிட மறுத்தார். அதுமட்டுமின்றி, பிரிட்டிஷ் பண்பாட்டின் பண்பாட்டு அடக்குமுறையாகவும் இதை அவர் புரிந்துகொள்ளவில்லை. மாறாக, இது நவீன நாகரிகத்தின் விளைவு என்றார். காலனியாதிக்கத்திற்கு எதிரான இயக்கத்தைத் தனிநபர்கள் மீதான வெறுப்பாகவோ, இனத் தேசியமாகவோ கட்டமைக்காமல் இது நூற்றாண்டுகளாக நிகழ்ந்துவரும் நாகரிகம் சார்ந்த ஊடாட்டங்களின் விளைவு என்று புரிந்துகொண்டார்.
நவீன நாகரிகம் என்று தான் கருதியவற்றை காந்தி மிகக் கவனமாக அணுகினார். ஆனால், இந்திய நாகரிகம் என்று வந்தபோது, அதன் கொடிய செயல்களை அதன் இயல்பாகப் பார்க்காமல் நாகரிகத்துக்கு வந்த நோயாகப் புரிந்துகொண்டார். நவீன நாகரிகம் எவற்றையெல்லாம் பாதிக்கிறது, நவீன நாகரிகத்தின் விளைவான நவீன சட்டத் துறை எப்படிப்பட்டது, என்றவாறு அவரது சிந்தனைகள் விரிந்துகொண்டே சென்றன. அதன் ஒரு பகுதியாக ‘நவீன நாகரிகம் உருவாக்கியதுதான் நவீன அரசு’ என்ற கருத்துக்கு வந்தார். இன்று வரை அரசு என்றால் நம் கண்ணுக்குத் தெரியும் வடிவம் ஐரோப்பாவில் வெஸ்ட்பாலியா ஒப்பந்தத்துக்குப் பிறகு உருவான அரசமைப்பே. வேறொரு மாற்று அரசமைப்பைக் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு இன்றைய நவீன அரசு மிகச் சக்தி வாய்ந்த வடிவமாக இருக்கிறது. அரசியல் அதிகாரத்தைக் குவிக்கும் நவீன அரசு அத்துடன் சேர்த்து அறத்துக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டாடத் தொடங்கிவிடுகிறது. சதாம் உசேனைத் தூக்கில் போட்ட மறு வினாடி ‘கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும்’ என்று சொல்ல முடிகிறது. ஓர் அரசு தன் மக்களிடமிருந்து அதிகாரத்தை மட்டும் எடுத்துக்கொள்வதில்லை, அறத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்கிறது என்று காந்தி புரிந்துகொண்டார்.
மக்களிடம் எப்படிப் பேசினார்?
காந்தி ஊர் ஊராகச் சென்று மக்கள் இயக்கத்தை வளர்க்க என்ன காரணம்? பிரிட்டிஷ் அரசிடமிருந்து அரசியல் சுதந்திரம் வேண்டுமென்றால், காந்தி எதற்காகத் தெலங்கானாவில் ஏதோ ஒரு கிராமத்தில் ராட்டையைப் பற்றிப் பேச வேண்டும்? உலக அரசியல் இம்மக்களைப் பாதிக்கிறது, அதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார். பாரேக் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகிறார். பொதுவாக ஆள்பவரின் மொழியில்தான் அடக்கப்படுவோரும் எதிர்வினையாற்றுவார்கள். ஆள்பவரின் மொழியைப் புரிந்துகொள்வது அடக்கப்படுவோரின் வரலாற்றுக் கடமையாக இருக்கும், எதிரியை அறிந்து அதற்கேற்றாற்போல் எதிர்வினையாற்ற வேண்டும் என்று. ஆள்பவர் பெரும்பாலும் அடக்கப்படுவோரின் மொழியில் அக்கறை செலுத்த மாட்டார். ஆனால், காந்தியின் விஷயத்தில் நேர்மாறாக நடந்தது. எங்கோ ஒரு கிராமத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார், ராட்டையைச் சுற்றுவார், ஆனால் சுதேசி, சுயராஜ்யம் போன்ற விஷயங்களை உணர்த்திவிட்டு வந்திருப்பார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை இது குழப்பத்துக்கு உள்ளாக்கியது என்கிறார் பாரேக். வெறும் ராட்டையைச் சுற்றுகிறார். ஆனால், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு எப்படியோ வந்துவிடுகிறது, எப்படி என்று. ஜனநாயகப்படுத்துதலின் முக்கிய நோக்கம் குரல்களைப் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவது. எதற்காக எல்லோருக்கும் குரல் வேண்டும்? ஏனெனில், ஒரு பெரிய குரல் வெளியே சத்தமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அது நம்மைப் பற்றி எல்லாம் தெரிந்ததுபோலவே பேசுகிறது. நீ நாகரிகமற்றவள் என்கிறது, நீ தீண்டத்தகாதவன் என்கிறது, ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் காதலிப்பது இயற்கைக்கு எதிரானது என்கிறது. நாம் யார் என்று முடிவுசெய்வது நாமாக இருக்க வேண்டும், மேலும் நமக்கு என்ன தேவை என்பதில் நம் கருத்து கேட்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் அறிவும் அதிகாரமும் அவசியமானது. காந்தி அதிகாரப் பரவலை மிகத் தீவிரமான கொள்கையாக இறுதிவரை முன்மொழிந்தார்.
எனினும், 1930-களில் நவீன அரசின் தேவை பற்றி காந்திக்குக் கொஞ்சம் புரிதல் வந்தது என்கிறார் பாரேக். குறிப்பாக அம்பேத்கரோடும் நேருவோடும் காந்தி நிகழ்த்திய உரையாடல்கள் சமூகப் பிரச்சினைகளில் அரசின் தலையீடு பற்றிய அவசியத்தை உணர்த்தின. அம்பேத்கரின் பின்புலம் வேறு. காந்தியை லத்தியால் அடித்தது நவீன அரசு, ஆனால் அம்பேத்கரைத் தரையில் அமரவைத்தது நவீன அரசு அல்ல, அதைச் செய்தது இந்தியச் சமூகம். அதை நாகரிகத்துக்கு வந்த நோயாகப் பார்ப்பது ஒரு பக்கப் பார்வை மட்டுமே. நவீன அரசு கொடுக்கிற வடிவங்களும் சட்டங்களும் மிகத் தேவையானது என்று அம்பேத்கர் வாதிட்டார். இவற்றின் விளைவாக காந்தி பின்னாட்களில் நவீன அரசு பற்றிய தன் பார்வையைத் தளர்த்திக்கொண்டார் என்கிறார் பாரேக்.
காந்தியின் எழுத்துகள் முழுமையாகச் சேகரிக்கப்படாத காலகட்டத்தில் 250 பக்கங்களில் மிகச் செறிவுடன் எழுதப்பட்ட பிரமிக்க வைக்கும் ஆய்வு நூல் இது. மேற்கத்திய ஆதிக்கம் குறித்த பிரக்ஞை காந்திக்கு முன்பே நவ்ரோஜி, கோகலே, திலகர் என்று பல தலைவர்களுக்கு ஏற்பட்டுவிட்ட ஒன்றுதான். ஆனால், அதற்கான எதிர் இயக்கத்தை ஒரு மானுட சிந்தனையாக வார்த்தெடுத்தது காந்திதான் என்கிறார் பாரேக். மேற்கத்திய ஆதிக்கம் இருக்கிறது என்ற அறிவை வைத்து காலனியத்துக்கு எதிராக மட்டும் போராடாமல், அரசியல் சுதந்திரத்துக்கான இயக்கத்தை மட்டும் முன்னெடுக்காமல், மானுட இயல்பு எத்தகையது, வன்முறையின் பரிமாணங்கள் எவையெவை, ஆதிக்கத்தின் காரணங்கள் என்னென்ன என காந்தி ஆழமாகத் தேடினார். அதன் விளைவாக உருவான அரசியல் தத்துவம் காலனியத்துக்கு எதிரான இந்தியாவின் சிந்தனையாக மட்டும் இல்லாமல், மானுட விடுதலை பற்றிய கனவைக் கொண்டதாக இருந்தது. காந்தியின் போதாமைகளையும் தவறுகளையும் தாண்டி ஓர் அரசியல் தத்துவ அறிஞராக அவர் உலகுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறார் என்கிறார் பாரேக். இளைய தலைமுறையினரின் கவனம் பாரேக் முன்னிலைப்படுத்தும் காந்தியின் மீது திரும்ப வேண்டிய அவசியம் இருக்கிறது.
- விஷ்ணு வரதராஜன், இளம் காந்திய ஆர்வலர், தொடர்புக்கு: vishnuvaratharajan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT