Last Updated : 24 Nov, 2015 11:25 AM

 

Published : 24 Nov 2015 11:25 AM
Last Updated : 24 Nov 2015 11:25 AM

மனுசங்க.. 30: அதுவும் மழைக்காலம்!

கோடையிலும் கடுங்கோடை என்று உண்டு. கூரை வீட்டுக்காரர்கள் பாடுதான் திண்டாட்டம்.

தகர வீட்டுக்காரரை சம்மந்தகாரர்கள் ரொம்பத்தான் கேலி பண்ணுவார்கள். தூறல் விழுந்தால் கூட பலமாகச் சத்தம் கேட்கும். காலையில் வீட்டுக்காரரைப் பார்த்ததும் ‘‘மாமோவ், ராத்திரி செம மழை’’ என்பார்கள்.

சில கோடையில் கல்மழையும் பெய் யும். அவர்கள் காதுபட ‘‘எந்தப் பயல் வொளோ கல்லெவிட்டு எறிஞ்சாங் கப்போ’’ என்பார்கள்.

இந்த வீடுகளின் பெரியாட்கள் காலைக் கஞ்சி குடிச்சி முடிஞ்சதும் பொடிமட்டையும் கையுமாக கம்மாய்க் கரை மரத்து நிழலைப் பார்த்து வந்து, அங்கே தட்டிநிறவியிருக்கும் மணலே சரணம் என்று வந்து படுத்துவிடுவார்கள்.

இந்த வயசாளிகளுக்குப் பெரும் பாலும் வயித்துக்கு ரெண்டுவேளைதான். காலையில் கஞ்சிதான். ராத்திரி என்பது சாயந்திரம் தீபம் பொருந்தியவுடன் வந்து விடும். அதோடு ராத்திரிச் சாப்பாடும் கிடைத்துவிடும். பகல்பொழுதில் குடிப் பது கஞ்சி என்றும் ராத்திரிக்குச் சோறும் என்றும் பெயர் வைத்திருக்கிறார்கள்.

வீடு தவறாமல் வந்து கேட்டு வாங்கும் தொள்ளாலிமார் காலையில் ‘‘கஞ்சி ஊத்துக்கம்மா’’ என்றும், தீபம் பொருந்திய பிறகு வந்து வாங்குவதை ‘‘சோறு போடுங்கம்மா’’ என்றும்தான் கேட்பார்கள். இவை இப்போது முடிந்து போன காலமாகிவிட்டது.

சிலசில வீடுகளில் மத்தியானம் கருப்பட்டிக் காப்பி பால் விட்டும் அல்லது பால்விடாமலும் கிடைக்கும் காப்பி வருவதுக்கு முன்னால் அந்த இடத்தை ‘பானக்கரம்’ என்கிற ‘பானகம்’ பிடித்திருந்தது.

சோற்றில் மக்காஞ்சோறாய் இருந்தா லும், அதில் ஊறிய தண்ணீருக்கு எப்பவும் மவுசுதாம். கொஞ்சம் பசை யுள்ளவர்கள் வீட்டில் மோர் கிடைக் கும். இவையெல்லாம் நான் சொல்லு கிற மரத்தடி மகராசன்களான கிழவ னார்களுக்குத்தான்.

‘உபயோகி; உபயோகித்து முடிந்ததும் தூற எறி’ என்கிற காலம் இல்லை அது. தேய்ந்துப்ப்பொன கலப்பைக்குத்தி ஆனாலும் வீட்டின் ஒரு மூலையில் பத்திரப்படுத்தி வைத்திருப்பார்கள். இந்த வயசானவர்கள் எல்லோரும் தேய்ந்துபோன கலப்பைக்குத்திகள். அவர்களுக்கே அவர்களைத் தூரப்போட எப்படி மனசு வரும்?

இந்த கடும் வெயில் காய்ப்பு சித்திரை பத்தாம் தேதிவரை இருக்கும். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் வானத் தில் ஒரு நைய்ப்பு பிறக்கும். மக்கள் சொல்லுவார்கள் உடனே ‘சித்ரை பத்தினில் சீராடும் மேல்காத்து’ என்று.

காற்று தூரத்தில் புறப்பட்டு வரும் போதே அதன் ஓசை முதலில் வந்துவிடும். வைக்கோல் பாரவண்டி தென்கிழக்காக இருந்தால் உடனே அதை கீழ்மேலாக நிறுத்தி வைத்துவிடுவார்கள். அப்படி வைக்கவில்லை என்றால் அந்த பார வண்டியை மேல்காற்று புரட்டிப் போட்டுவிடுமாம்.

மேல்காற்று இந்த மனுசனோடு ரொம்பவே ஆட்டம் காட்டும். அதனு டைய அதிகாரம் ஐப்பசி பத்து வரை இருக்கும்.

குளத்தங்கரை மரத்தடி வயசாளி களை இந்த மேல்காற்றுப் பருவத்தில் அங்கே பார்க்க முடியாது. வீடுகளினுள் அடங்கிவிடுவார்கள்.

மேல்காற்றுப் பருவத்தின் அதிகாலை நேரங்கள் காலை 7 மணிவரை இன்பமானது. அவ்வளவு சுகமானதாக இருக்கும்.

மேல்காற்றுப் பருவத்தின் காலத்தில் பதநீரின் தித்திப்புக் கூடியிருக்கும்.

மேல்காற்று ஆளுகைக்கு உட்பட்ட ஊர்களில் எல்லாம் மாடுகள் உட் கொள்ளும் தீவனப்படப்புகள் எல்லா முமே கீழ்மேலாகத்தான் அமைந் திருக்கும்.

மரங்களின் ‘தலைமுடி’களைப் பிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டும்.

‘‘செய், காத்து என்ன இப்படி அடிக்கி’’ என்று கேட்பவர்களுக்கு, வீட்டி னுள் இருக்கும் கிழவி, கிழவன்மார்கள், ‘‘அடிக்கட்டும் அடிக்கட்டும் எவ்வளவுக் கெவ்வளவு பலமாக அடிக்கோ அவ் வளவுக்கு மழை நல்லாப் பெய்யும்’’ என்பார்கள்.

தரையில் சரியாக நடக்கவிடாமல் மனுசனைத் தள்ளுவது போலவே காகங்களையும் ஒழுங்காக பறக்க விடாமல் காற்று தள்ளும்.

இந்த மரத்தடி வயசாளிகளில் பலவகை இருந்தார்கள்.

அந்தக் காலத்தில் ஆண்கள் எல்லோருமே பெண்களைப் போல தலைமுடி வளர்த்து கொண்டைப் போட் டுக்கொண்டிருப்பார்கள். சிலருக்கு மட்டும் பெண்களே பார்த்து பெருமைப் படும்படியாகவும் பொறாமைப் படும்படியாகவும் தலைமுடி அமைந் திருக்கும்.

போலய்யா தாத்தாவுக்கு மட்டும் இவ்வளவு வயசாகியும் காதோரம் கூட ஒரு முடியும் நரைக்கவில்லை. அவரிடம் இன்னொரு அதிசயம் தலையில் சொட்டு எண்ணெய் வைத்துக்கொள்ள மாட்டார். சனி, புதன் எண்ணெய் தேய்த்தும் தலை மூழ்கவும் மாட்டார்.

தலைமுடி அதிகமாக இருப்பவர் களுக்கு ஏகப்பட்ட நல்லெண்ணெய் செல்லும். இந்தப் பெரியக் கொண்டைத் தாத்தா சொல்லுவார்: ‘‘தலைக்குத் தேய்த்துக்கொள்ற எண்ணெய சோத்தில் விட்டுத் திங்கலாமே!’’ என்று.

கும்பா நிறைய்ய கம்மஞ்சோறு வைத்து அதன் மத்தியில் குழி செய்து கருப்பட்டியை நுணிக்கிப் போட்டு நிறைய்ய நல்லெண்ணெய்யை விட்டு குழப்பித் தொட்டுத் தொட்டு தின்பது என்கிற வழக்கம் இருந்தது.

வேற தொடுகறி எதுவும் வேண்டாம். வீட்டில் உள்ள ஆண், பெண்கள், வேலையாட்கள், குழந்தைகள் என்று நல்லெண்ணெய் புழங்கினால் ஓராண்டுக்குக் குடம்குடமாக எண்ணெய் செல்லுமெ.

அவர்களது காடுகளில் எள் விளைந்து வருவதினால்தான் ஈடுகொடுத்து முடிகிறது.

‘எண்ணெய்’ என்பதே எள்நெய் என்பதில் இருந்து வந்தது என்பார்கள் தமிழ்ப் படித்த பெரியவர்கள்.

மூதாதையர்களுக்கு அவர்கள் காலமான பிறகு எள்ளும் தண்ணியும் இடுவதில் இருந்தே எள்ளின் மகத் துவத்தை அறிந்துகொள்ளலாம்.

வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் கிளம்பிவிட்டால் செய்யும் முதல் காரியம் நல்லெண்ணெய் கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொண்டு, நுனிநகங்கள் மட்டும் முங்கத் தொட்டுத் தொட்டு முகம், கை, கால் என்று எண்ணெய் தெரியாமல் எண்ணெய் விட்டுக்கொள்ளுதல் என்கிற சடங்கை முடிக்காமல் கிளம்ப மாட்டார்கள்.

- இன்னும் வருவாங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x