Published : 23 Jan 2021 08:07 AM
Last Updated : 23 Jan 2021 08:07 AM
ஆண்ட்ரியாவின் கவிதைகள்
நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஒரு கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘ப்ரோக்கன் விங்க்’ (Broken Wing) என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆண்ட்ரியாவின் பயணத்தில் எதிர்கொண்ட காதல், இழப்பு, பாதிப்புகளை இந்தத் தொகுப்பில் கவிதைகளாக்கியிருக்கிறார். ‘ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே!’ என்கிறரீதியில் ஆண்ட்ரியாவின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
தஞ்சாவூர்க் கவிராயரின் திண்ணை நூலகம்
ஊரப்பாக்கம் மகாகவி பாரதியார் தெருவிலுள்ள தனது வீட்டுத் திண்ணையை நூலகமாக மாற்றியிருக்கிறார் தஞ்சாவூர் கவிராயர். வீட்டுக்கு வருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காகவும், வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்குப் புத்தக வாசனையைக் காட்டிவிட வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய சேகரிப்புகளை, தை 1 அன்று திண்ணை நூலகமாக மாற்றியிருக்கிறார்!
மீண்டும் மர்ம நாவல்கள்
ரயில் பயணங்களில் தவிர்க்க முடியாத அம்சமாக மர்ம நாவல்கள் இருந்தது ஒரு காலகட்டம். மீண்டும் அந்தக் காலத்துக்கு அழைத்துச் செல்லவிருக்கிறது ‘பிரேமா பிரசுரம்’. 1953-69-களில் மேதாவி, பி.டி.சாமி, சிரஞ்சீவி எழுதிய 34 துப்பறியும், மர்ம நாவல்களை இம்மாத இறுதியில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். சுமார் 5,700 பக்கங்களுக்கு இந்த நாவல் தொகுப்பு வெளியாகிறது. தொடர்புக்கு: 99520 75511, 70108 87065
புத்தகக்காட்சிகள்
நிரந்தரப் புத்தகக்காட்சி: சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமரா நூலகத்தில் நேற்று நிரந்தரப் புத்தகக்காட்சியை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வுக்கு அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமை தாங்கினார். கன்னிமரா நூலகத்தில் ஏற்கெனவே நிரந்தரப் புத்தகக்காட்சி விற்பனையகம் இருந்தாலும் அதைப் புனரமைத்து உலகத்திலேயே மிகப் பெரிய தமிழ் நூல்கள் விற்பனையகமாக உருவாக்கப்பட்டுள்ளது. எல்லாப் பதிப்பகங்களின் புத்தகங்களும் ஒரே இடத்தில் ஆண்டு முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது இந்தப் புத்தகக்காட்சியின் சிறப்பு.
வேளச்சேரி புத்தகக்காட்சி: ‘ஆயிரம் தலைப்புகள், ஒரு லட்சம் புத்தகங்கள்’ என்ற கோஷத்துடன் வேளச்சேரியில் இன்று தொடங்கி 14.02.2021 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: சங்கீதா ஹோட்டல் எதிரில். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9884355516.
ஆம்பூர் புத்தகக்காட்சி: தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கமும் ஆம்பூர் லயன்ஸ் கிளபும் சேர்ந்து ஆம்பூரில் முதன்முறையாகப் புத்தகக்காட்சியை நடத்துகின்றன. ஜனவரி 21-ம் தேதி தொடங்கிய இந்தப் புத்தகக்காட்சி பிப்ரவரி 1 வரை நடக்கிறது. ஒரு லட்சம் புத்தகங்கள் இங்கே இடம்பெறுகின்றன. இடம்: என்.எம்.இஸட். ஃபங்ஷன் ஹால், நாகநாத சுவாமிகள் ஆலயம் அருகில். தொடர்புக்கு: 9566114006.
ஸர்மிளாவின் திருமணக் குதூகலம்!
தமிழ் இலக்கிய உலகில் கொண்டாட்டத் தருணமாக ஒரு திருமணம் அமைந்துவிட்டிருக்கிறது. ‘உம்மத்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் ஸர்மிளா ஸெய்யித். நம்பிக்கைக்குரிய இளம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். துணிச்சலான எழுத்துக்கும் பேச்சுக்கும் சொந்தக்காரர். தன்னுடைய மதம் உட்பட எல்லா மதங்களின் அடிப்படைவாதம் குறித்தும் காத்திரமான விமர்சனங்களை முன்வைப்பவர். அவரும் றிஸ்வியும் கடந்த 20-ம் தேதி துருக்கியில் திருமணம் புரிந்துகொண்டார்கள். இதற்கு முன்னும் பின்னும் அந்த இணையர் எடுத்துக்கொண்ட படங்கள் இலக்கிய உலகில் ஒருங்கே வாழ்த்துகளையும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. அதிலும் றிஸ்வியை ஸர்மிளா தூக்குவதைப் போன்ற படம்தான் இவற்றில் உச்சம்! இந்தக் கொண்டாட்டம் உங்கள் இருவர் வாழ்க்கை முழுவதும் நீடித்திருக்கட்டும் ஸர்மிளா-றிஸ்வி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT