Published : 23 Jan 2021 08:07 AM
Last Updated : 23 Jan 2021 08:07 AM

கர்ணன்: ஒடுக்கப்பட்டவர்களின் காவிய முகம்!

சுப்பிரமணி இரமேஷ்

கர்ணன்: காலத்தை வென்றவன்
சிவாஜி சாவந்த்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் வெளியீடு
விலை: ரூ.899
தொடர்புக்கு: 98194 59857

இந்திய இலக்கிய மரபில் அதிக நிழற்பிரதிகளைக் கொண்ட பேரிலக்கியம் மகாபாரதம். அச்சு யுகத்தில் மகாபாரதத்தின் வெவ்வேறு நிழற்பிரதிகள் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. நவீன இலக்கியம் மகாபாரதத்தைத் தொடர்ந்து மீள்வாசித்துவருகிறது. அவ்விலக்கியத்தின் கதாபாத்திரங்கள் குறித்துத் தனித்தனிப் புனைவுகள் தொடர்ந்து எழுதப்படுகின்றன. அவ்வகையில், கர்ணனைப் பற்றி மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய நாவல் ‘மிருத்யூஞ்ஜயா’. இதை ‘கர்ணன்: காலத்தை வென்றவன்’ என்ற பெயரில் சிறப்பாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். மகாபாரதத்தில் திரௌபதிக்கு அடுத்து அதிகத் துயரங்களைச் சந்தித்தவன் கர்ணன். ஒடுக்கப்பட்ட இனக்குழுவான சூதர்களின் பிரதிநிதியாகத் தன் குரலை சத்ரியர்களுக்கு எதிராக ஒலித்தவன். அந்தக் குரலைத் தற்காலக் குரலாகக் கேட்க வைத்திருக்கிறார் சிவாஜி சாவந்த்.

மகாபாரதம் குறித்து எழுதப்படும் பனுவல்கள் அனைத்திலும் கர்ணன் இடம்பெறுவான். கர்ணனை அர்ஜுனன் கொன்றதற்கு நியாயம் கற்பிக்கும் அளவுக்கே கர்ணனுக்கான இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். சில பனுவல்கள் மட்டுமே கர்ணன் தரப்பு உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும். அவ்வகையில், கர்ணனின் பிறப்பு முதல் அவனது உடல் சிதையில் எரிவது வரையான முழு வரலாற்றையும் எழுதியிருக்கிறார் சிவாஜி சாவந்த். இவர் மகாபாரதக் கதையை நவீன வாசிப்பினூடாக அணுகியிருக்கிறார்.

துவாபர யுகத்தில் வருணாசிரமப் படிநிலைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவன் கர்ணன். அந்தப் பாதிப்பின் விளைவுகள் அவன் மரணம் வரை தொடர்கின்றன. ஏற்றத்தாழ்வுகளுக்கான சரியான காரணங்களைத் தேடுவதிலேயே கர்ணன் தன் வாழ்நாளைக் கழித்துவிடுகிறான். ‘நான் ஒரு சத்ரியக் குடும்பத்தில் பிறக்காதது என் தவறா?’ என்று கர்ணன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறான். பிதாமகர் பீஷ்மர், குலகுரு துரோணர், கிருபர் உள்ளிட்ட எவரிடமும் முறையான பதில் இல்லை. தொடர் மௌனமும் நிராகரிப்பும் மட்டுமே அவர்களது எதிர்வினையாக இருக்கின்றன. அதே நேரத்தில், ‘நான் ஒரு சூதனான தேரோட்டிக்கு மகனாகப் பிறந்திருக்கையில், பிறர் என்னை ‘சூதர் மகன்’ என்று பரிகசிக்கும்போது எனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? நான் பிறந்திருக்கும் குலத்தை நான் ஏன் உயர்வாக மதிக்கத் தவறுகிறேன்?’ என்பது போன்ற அகக் குரலுக்கு கர்ணனால் பதில் சொல்ல முடியவில்லை.

துரோணர், கிருபரின் புறக்கணிப்பால் சூரியனைக் குருவாக ஏற்றுக்கொள்கிறான் கர்ணன். சத்ரியர்களிடமிருந்து தன் திறமைக்குச் சிறிய அளவிலாவது அங்கீகாரம் கிடைக்காதா என்ற ஏக்கம் கர்ணனைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. சத்ரியர்களின் பாராட்டுக்காக கர்ணன் ஏன் ஏங்குகிறான்? எளிதாகக் கடந்துவிடக் கூடிய கேள்வி அல்ல இது. பீஷ்மர் தன் இறப்பின் விளிம்பில் கர்ணனின் வீரத்தை அங்கீகரிக்கிறார்; துரோணர் அதையும் செய்யவில்லை. துரோணரின் அங்கீகரிப்புக்காக கர்ணன் காத்திருந்தான் என்பதுதான் உண்மை. சத்ரியர்களைவிட ஏகலைவன்தான் தன்னுடைய சிறந்த சீடன் என்பதை குருஷேத்திரப் போர் துரோணருக்குப் புரியவைக்கிறது. அப்போதும் துரோணரின் நினைவுகளுக்கு வெளியேதான் நிற்கிறான் கர்ணன். இந்த மர்மத் திரை இறுதி வரை விலகவே இல்லை.

நாவலின் தொடக்கத்திலிருந்தே கர்ணன் ஒரு தேரோட்டியின் மகனாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றே பிரதி வலியுறுத்துகிறது. கர்ணனின் தோற்றப் பொலிவும் கவசகுண்டலமும் இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. கர்ணன் ஒரு தேரோட்டிக்கு மகனாகப் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்பதை துரியோதனனும் உணர்கிறான். ஆனால், கர்ணனின் பிறப்பு ரகசியம் தெரிந்துவிடக் கூடாது என்றும் கருதுகிறான். இந்த இடத்தில் துரியோதனனின் சுயநலம் வெளிப்படையாகத் தெரிகிறது. ‘கர்ணா, துரியோதனனின் மாட்டுக் கொட்டிலில் இருக்கிற ஓர் அமைதியான பசு நீ. ஒரு பசுவுக்கு ஒரே ஒரு விஷயம்தான் தெரியும். தன்னுடைய எஜமானுக்குப் பால் கொடுப்பதுதான் அது’ என்று கர்ணனுக்கான இடத்தை மனதில் வரையறுத்துக்கொள்கிறான் துரியோதனன்.

கர்ணன் வயதின் முதிர்ச்சியிலும்கூடக் கசப்புகளையே பரிசாகப் பெறுகிறான். குந்தியின் பாவத்தைத்தான் தன் வாழ்நாளின் இறுதி வரை கர்ணன் சுமந்தலைந்தான் என்றே தோன்றுகிறது. சத்ரிய குலத்தில் பிறந்த கர்ணன், சூதனால் வளர்க்கப்படுகிறான். தான் சத்ரியன் என்று தெரிந்த பிறகும்கூட அந்த வாழ்க்கையை கர்ணனால் வாழ முடியவில்லை. அவனது அரச பதவி ஓர் அலங்காரம் மட்டுமே. பரிதாபத்துக்குரிய மனிதனாகவே கர்ணனின் வாழ்க்கை கழிகிறது. கௌரவர் சபையில் ஒருமுறை மட்டுமே அவனது நாக்கு எல்லை மீறுகிறது. மற்றபடி கர்ணன் அனைவருக்கும் பணிந்தே தன் வாழ்நாளைக் கடந்திருக்கிறான். துரோணர், கிருபர், பீமன், திரௌபதி, பரசுராமர், இறுதியில் அஸ்வத்தாமன் என அனைவருமே கர்ணனைச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொற்களால் காயப்படுத்தியிருக்கின்றனர். சூதர்கள் இழிவானவர்கள் என்ற எண்ணம் கர்ணனிடமும் இருந்திருக்கிறது. ‘நீ ஒரு சத்ரியன்’ என்று கர்ணனிடம் கிருஷ்ணன் கூறும்போது, அவன் முகத்தில் பெருமிதம் தோன்றுகிறது. இந்த எண்ணம் அவன் குருதியிலேயே ஊறியிருக்கிறது. அதுதான் ‘நீ சூதன்’ என்கிறபோது அவனுக்குள் கொதிப்பை உண்டாக்குகிறது. இந்தக் கொதிப்புதான் அவன் எல்லாத் திறன்களையும் பெற்றிருந்தபோதும் அவனது அறிவைச் செயலிழக்கச் செய்கிறது.

இந்நாவல் ஒரு தற்கால அரசியல் பிரதி. இந்தச் சமூகம் ஒரு மனிதனை எதை வைத்து மதிப்பிடுகிறது என்பதற்கு கர்ணனின் வாழ்க்கையே உதாரணம். புறக்கணிப்பைத் தன் வாழ்நாளின் இறுதி வரையிலும் கர்ணன் எதிர்கொள்கிறான். கலை, இலக்கியம், அரசியல், கல்வி, பதவி, விளையாட்டு, விருது உள்ளிட்ட அனைத்திலும் இன்றும் துரோணரும் கிருபரும்தானே அதிகாரம் செலுத்துகிறார்கள்? ஆக, கர்ணனின் வரலாறு நம் காலத்தில் பல்வேறு திறப்புகளை முன்வைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் முன்னோனாக அவன் இன்று நினைவுகூரப்படுகிறான். கர்ணன் அப்போது எதிர்கொண்ட பிரச்சினைகள் இன்றும் நீடிக்கவே செய்கின்றன எனும் வகையில் கர்ணனின் வரலாற்றை நாம் மீள்வாசிக்க வேண்டியிருக்கிறது!

- சுப்பிரமணி இரமேஷ், ‘பத்ம வியூகம்: மகாபாரதம் குறித்த மீள்வாசிப்புச் சிறுகதைகள்’ நூலின் தொகுப்பாசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x