Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM
கூண்டுக்குள் பெண்கள்
விலாஸ் சாரங்
தமிழில்: ஆனந்த் ஸ்ரீனிவாசன்
நற்றிணை வெளியீடு
திருவல்லிக்கேணி,
சென்னை-5.
விலை: ரூ.350
தொடர்புக்கு: 044 – 2848 1725
எளிமையிலிருந்து தீவிரம்; சாதாரணத்திலிருந்து பயங்கரம்; எதார்த்தத்திலிருந்து அற்புதம் எனச் சுருக்கமான மூன்று விவரணைகளில் மராத்தி-ஆங்கில எழுத்தாளர் விலாஸ் சாரங்கின் கதை சொல்லும் குணத்தைச் சுட்டிவிடலாம். மராத்தியப் புதுக்கவிதைகள் இயக்கத்திலும் பங்குபெற்றவர் விலாஸ் சாரங். புத்தரின் சரிதையையொட்டி இவர் எழுதி தமிழிலும் ஏற்கெனவே வெளியாகியுள்ள ‘தம்மம் தந்தவன்’ நாவலை ஒரு கவிஞனின் சாதகமான அம்சங்களை உட்கொண்ட நாவல் என்று சொல்ல முடியும். ‘கூண்டுக்குள் பெண்கள்’ சிறுகதைகளில் பெரும்பாலானவை பழைய பம்பாயில் நிகழ்பவை. பம்பாயின் யாசகர்கள், பாலியல் தொழிலாளர்கள், கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடத்தை, ஆசாபாசங்களை, நிராசைகளை, ஏக்கதாபங்களைச் சாதாரணம் போலத் தொனிக்கும் மொழியில் ஆனால், வன்மையாகச் சொல்வதில் விலாஸ் சாரங் தமிழ்ச் சிறுகதைக் கலைஞர் அசோகமித்திரனை ஞாபகப்படுத்துபவர்.
மிக எதார்த்தமாகக் கதையை உழுதுகொண்டிருக்கும் போதே மையத்தில் ஒரு அற்புதத்தை, அதிசயத்தை உருவாக்கிவிடுகிறார். அப்படி விலாஸ் சாரங் உருவாக்கும் அதிசயம் அல்லது அற்புதம் ஒரு கவித்துவப் படிமமாக ஆகி, வாசிப்பவரை ஒரு புராணக் கதையை வாசிக்கும் மயக்க நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இந்தியப் புராணங்களின் நீட்சியாகவும் புதிய புராணங்களாகவும் அந்த அற்புதங்களை விலாஸ் சாரங் உருவாக்குகிறார். விலாஸ் சாரங் கதைகளில் நிகழும் அற்புதங்கள் எதார்த்தத்துக்கு மாறானவை என்றாலும் அவை பொய்யானவை அல்ல. நமது அன்றாட எதார்த்தம் என்பது நமது ஆசைகளும் நிராசைகளும் சேர்ந்ததுதானே; நடப்பதும் நடக்க விரும்புவதும் சேர்ந்ததுதானே; கனவு அல்லாத நனவு அங்கே துல்லியமாகப் பிரிக்க முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் புராணங்களில் நமது ஆழ்மனத்தின் கூறுகளையும் அதன் கனவுத் தடயங்களையும் எப்படிப் பார்க்க முடியுமோ, அப்படியாக நமது ஆசைகள், நிராசைகளால் நிறைந்த துயரமும் சந்தோஷமுமான பகல் கனவின் பிரம்மாண்ட அனுபவத்தை விலாஸ் சாரங் தருகிறார். அற்புதங்கள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் மாறி மாறி இவர் கதைகளில் நிகழ்கின்றன.
‘கூண்டுக்குள் பெண்கள்’ நூலில் உள்ள சில கதைகளில் தொடர்ந்து வரும் காட்சியாக, மும்பையின் பாதாளச் சாக்கடை கடலில் கலக்கும் குழாயிலிருந்து பாயும் கழிவுநீர் வருகிறது. மும்பை மாநகரம் என்ற பேரான்மாவின் கனவுகள், விழைவுகள், முயற்சிகள், ஏமாற்றங்கள், துயர சந்தோஷங்களை நன்மை தீமை என்ற பேதமற்று பரிவோடு பார்க்கும் கதைகள் இவை.
திருமணமாகி ஒரே இடத்தில் சேர்ந்து வசிப்பதற்கான குறைந்தபட்ச வசதி இல்லாமல், கடற்கரையிலேயே காதலையும் தாபத்தையும் நிறைவேற்றக் காதலர்கள் ஒதுங்கும்போது, கதைசொல்லியான காதலனின் நண்பன் அந்த இடத்துக்கு எதிர்பாராமல் வந்து தனது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அழைக்கிறான். இப்படிப் பக்கவாட்டில் நடக்கத் தொடங்குகிறது எதிர்பாராத நிகழ்வொன்று. ‘தெய்வங்களின் புரட்சி’ கதையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடலுக்குச் செல்லும் வழியில் சிறிது, பெரிது என வித்தியாசமின்றி அத்தனை விநாயகர்களும் உயிர்பெற்று மக்களின் கைகளிலிலிருந்து இறங்கி, நகருக்குள் சென்று ஒழிந்துவிடுகின்றன. இந்தச் சம்பவம் மிகப் பெரிய மனிதர்களை அல்ல, மிக எளிய மனிதர்களைத் தாங்கள் செய்த சின்னஞ்சிறு குற்றங்களுக்காகத் துயர உணர்வு கொள்ளச் செய்கின்றன. பிறகு ஒரு நாள் நள்ளிரவில் கதைசொல்லி, தூக்கம் வராமல் கழிவுநீர் கடலில் கொட்டும் ராட்சசக் குழாயின் மேல் அமர்ந்திருக்கும்போது, ஓடி மறைந்த அத்தனை விநாயகர்களும் கடலுக்குள் இறங்கி, விட்டு விடுதலையாவதன் உணர்வை அவனுக்குத் தந்துவிட்டு அமானுஷ்யமாக மறைகின்றன.
இன்னொரு சிறுகதையில், நேபாளத்தின் கிராமத்திலிருந்து மும்பை பாலியல் விடுதிக்கு அழைத்துவரப்பட்ட சம்பா, சீக்கிரமே பணம் சம்பாதிக்க உடல் முழுவதும் பாலுறுப்புகள் வேண்டும் என்று கோருகிறாள். கெளதம முனிவரின் சாபத்தைப் பெற்ற இந்திரனின் புராணக்கதையை ஞாபகப்படுத்தும் இந்தக் கதையில், தாபம் மற்றும் காமத்தால் இடையறாத துன்பத்துக்குள்ளாகும் இந்திரன், பிச்சைக்காரனாக வேடமிட்டு சம்பாவிடம் வந்து அவள்மூலம் விடுதலை பெறுவதாகக் கதை முடிகிறது. சம்பாதேவியின் கதாபாத்திரத்துக்குள் பாலியல் தொழிலாளர்களின் அத்தனை ஏக்கங்களின் வரிகளையும் ஒரு நவீன புராணத்தை உருவாக்குவதன் வழியாக ஏற்றிவிடுகிறார் விலாஸ் சாரங்.
‘கூண்டுக்குள் பெண்கள்’ தொகுப்பின் மிகச் சிறப்பாக எழுதப்பட்ட கதைகளில் ஒன்று ‘பாரெலும் பொம்பிலும்’. அரேபியக் கடலில் பயணம் செய்யும் கப்பலில் தளப் பணியாளனாக வேலை பார்க்கும் ஒல்லி இளைஞன் பொம்பிலுக்கும், திமிங்கில சுறாமீன் வகையான பாரெலுக்கும் உருவாகும் நேசமும் அந்த நேசத்தால் அந்த இளைஞன் காணாமல் போவதும்தான் கதை. இந்தக் கதை இந்த உலகத்தில்தான் நடக்கிறது. இந்தக் கதையில் நடப்பதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் கடினம். இந்தக் கதையில் அந்தச் சுறா பெண்ணாகவும் அந்த இளைஞன் ஆணாகவும் ஆகிறார்கள். விலாஸ் சாரங் அந்தக் கதைக்குள் கூறுவது போலவே, “எந்தவிதமான உறவாக இருந்திருந்தாலும் அது ஆண், பெண், மனிதன் போன்ற எண்ணங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்பது மிகவும் பொருத்தமானது. இது எல்லா அபூர்வ பந்தத்துக்கும் பொருந்தும்தானே.
விலாஸ் சாரங்கின் கதைகளில் எத்தனையோ பின்னணிகள், அடையாளங்கள் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், எவரும் திட்டவட்டமான பாத்திரங்கள் அல்லர். அவர்கள் எவருடைய வாழ்க்கையும் குறிப்பிட்ட நியதியில் அவர்களை வரையறுத்த சட்டகத்துக்குள் இல்லை. ஆண், பெண், மனிதன், தொழில் அடையாளம், பாலின அடையாளம், அவர்களின் சலிப்பான அன்றாடம் ஆகியவற்றை மீறியும் பதுங்கியும் திரவம் போல உணர்வுகள் வழிந்துகொண்டிருக்கின்றன. எதேச்சையாக, புறத்தூண்டுதலுக்கு ஆட்பட்டும், ஆட்படாமலும், நிச்சயமாக எதையும் சொல்ல முடியாமலும் நிறைய நிகழ்ச்சிகள் அங்கே நடந்துவிடுகின்றன. இந்தத் தோன்றி மறைதலைக் கனவும் நனவும் கலங்கும் தன்மையைத் தன் கதைகளில் நிகழ்த்தியிருக்கும் விலாஸ் சாரங், தமிழ் வாசகச்சூழலைத் தீவிரமாகப் பாதிக்கக்கூடிய உள்ளடக்கத்தையும் வலுவையும் நெருக்கத்தையும் கொண்டவர் ஆகிறார். உணர்வுரீதியாகக் கூடுதல் கவனத்தையும் ஆற்றலையும் வேண்டும் இந்தப் புத்தகத்தை நிதானமாகவே வாசிக்க முடியும். ஆனந்த் ஸ்ரீனிவாசனின் மொழிபெயர்ப்பு மிகவும் இயல்பாக இருக்கிறது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT