Published : 08 Oct 2015 10:54 AM
Last Updated : 08 Oct 2015 10:54 AM

வீடில்லாப் புத்தகங்கள் 53: எழுத்து மட்டும் போதாது!

கர்நாடகாவின் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ரமணஜெயா பொம்ம லாட்டக் குழு நடத்திய மகாத்மா காந்தி பற்றிய பொம்மலாட்ட நிகழ்ச் சியை சில ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். ஆள் உயர தோல் பாவைகளைக் கொண்டு காந்தியின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை அற்புதமாக நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.

இந்தக் குழு கிராமம் கிராமமாகச் சென்று காந்தியின் வாழ்க்கை வர லாற்றை நிகழ்த்திக் காட்டுவதுடன் ஜெர்மனிக்குச் சென்று இந்திய கலை விழாவிலும் காந்தியின் கதையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

மரபான பொம்மலாட்டம் முதல் இன் றைய மாங்கா காமிக்ஸ் வரை காந்தியை குறித்து பல்வேறுவிதங்களில் படைப் புகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் காந்தியைப் புரிந்துகொள்ளாமல் அவரைத் தவறாக விமர்சிப்பவர்களும் அவதூறு பேசுபவர்களும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

காந்தியின் பேச்சுகள், எழுத்துகள், கடிதங்கள் யாவும் முறையாகத் தொகுக் கப்பட்டுள்ளன. பண்டித நேருதான் இவற்றைத் தொகுக்கும்படி ஏற்பாடு செய்தார். 38 ஆண்டுகள் இந்தப் பணி நடைபெற்று, ஒரு தொகுதி 500 பக்கங் கள் வீதம் 98 தொகுதிகள் வெளியிடப் பட்டுள்ளன. அத்துடன் 2 தொகுதிகள், பெயர்கள் மற்றும் பொருள்வரிசை கொண்டதாக உருவாக்கபட்டுள்ளன. மொத்தம் 50 ஆயிரம் பக்கங்கள். இவற்றை இணையத்திலும் பதிவேற்றி யிருக்கிறார்கள்.

முழுநேர எழுத்தாளர்களால் கூட இவ்வளவு பக்கங்கள் எழுதியிருக்க முடியுமா என்பது சந்தேகமே. காந்தி தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள் வதற்குப் பத்திரிகை, கடிதம், கேள்வி - பதில், உரைகள், கட்டுரை, தந்தி, ரேடியோ என கிடைத்த எல்லா வழிகளை யும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மகாத்மா 2 கைகளாலும் எழுதக்கூடி யவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோம் நகரில் உள்ள சலேஷியன் பான்ட்டிஃபிகல் பல்கலைக்கழகத்தில் சமூகத் தகவல் தொடர்பு விஞ்ஞானத் துறையில் பணியாற்றி வரும் பீட்டர் கன்சால்வஸ் மகாத்மாவைப் பற்றி சிறிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். ‘காந்தியின் ஆடை தந்த விடுதலை’ என்று அந்த நூல் தமிழில் வெளியாகியுள்ளது. சாருகேசி மொழியாக்கம் செய்துள்ள இந்த நூலை ‘விகடன் பிரசுரம்’ வெளி யிட்டுள்ளது. அதில், காந்தியின் உடை இந்திய விடுதலைப் போரில் ஏற்படுத் திய தாக்கத்தைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

காந்தியின் எழுத்து நடை தெளிவா னது, எளிமையானது, அளவானது. அதில் அலங்காரங்களே கிடையாது. சின்னஞ் சிறு வாக்கியங்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். நேருவின் ஆங்கிலத்துடன் காந்தியின் ஆங்கி லத்தை ஒப்பிடும்போது, இந்த வித்தி யாசத்தைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். காந்தி குஜராத்தியில் எழுதி யதில் சமஸ்கிருத கலப்பே கிடையாது. தன் தாய்மொழியில்தான் அவர் சுயசரிதையை எழுதினார்.

மக்களின் மனசாட்சியைத் தூண்டி விட்டு விடுதலை இயக்கத்தில் பங்கு பெற வைக்க எந்த உத்தியையும் காந்திஜி விட்டுவைக்கவில்லை. கிராமிய ஆடல்பாடல் தொடங்கி நாடகம், மேடைப் பேச்சு, சேர்ந்திசை, துண்டுப் பிரசுரம், சுவரொட்டி என அத்தனையையும் பயன் படுத்திக் கொண்டிருக்கிறார். உண்மை யைத் தேடும் போரில் ஊடகம் ஒரு துடிப்பான தோழனாக இருக்க வேண் டும் என காந்தி எதிர்பார்த்தார். ஆகவே, அவரே பத்திரிகைகள் தொடங்கி நடத்தினார்.

தந்தியை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டவர் காந்திஜி. 1896 மே 7-ம் தேதி காலனி ஆதிக்கச் செயலர் ஜோசப் சேம்பர்லினுக்கு, இந்தியருக்கு எதிரான மசோதாவை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என டர்பனில் இருந்து அனுப்பிய தந்திதான் காந்திஜி அனுப்பிய முதல் தந்தி என்கிறார்கள்.

இந்திய வரலாற்றிலே பிரிட்டனுக்கும் அமெரிக்காவுக்கும் தந்தியை அதிக பட்சம் உபயோகித்தது உப்பு சத்தியா கிரக யாத்திரையின்போதுதான். சர்வ தேச ஊடகங்களின் கவனம் உப்பு சத்தியா கிரகத்தின் மீது குவிய காந்திஜி அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.

உலகம் முழுவதும் இருந்து அவருக் குக் கடிதங்கள் வந்து குவிந்தன. அத் தனைக்கும் அவரே நேரடியாக பதில் எழுதினார். அரிதாகவே உதவியாளர் களைப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்.

‘கடிதங்களைப் படித்துப் புரிந்து கொண்டு பதில் எழுதுவது எனக்குப் பாட மாக அமைவதுண்டு. இக்கடிதங்கள் வழியே சமுதாயம் என்னிடம் உரையாடு வதாகவே கருதினேன். பதில் அளிக்க வேண்டியது எனது கடமை என உணர்ந் தேன்’ என காந்தி தனது குறிப்பில் எழுதியிருக்கிறார்.

படிக்காத பாமர மக்கள் அதிகம் உள்ள நாட்டில் எழுத்து மட்டும் போதாது, ஆகவே வாய் வார்த்தைகளாக தனது கருத்துகளை மக்களிடம் கொண்டு செல் லும் தொண்டர் குழுக்களை காந்தி உரு வாக்கினார். அதன் விளைவு குக்கிராமம் வரை காந்திய சிந்தனைகள் போய் சேர்ந்தன.

இந்திய சமூகத்தில் ஒரு மனிதன் எந்த நிலையில் இருக்கிறான் என்பதை காட்டும் அடையாளமாகவே உடை விளங்கியது. அத்துடன் எந்த விதமாக உடை அணிவது? எந்தத் துணியை அணிவது என்பது அப் போது ஜாதியுடன் தொடர்புகொண்டு இருந்தது.

இந்தியர்கள் ஐரோப்பிய உடை களை அணியும்போது சகோதர இந்தியரை விட, தாங்கள் ஒருபடி மேல் என நம்பினார்கள். ஐரோப்பியருக்குச் சமமாக, ஆங்கிலேயருடன் ஒரே நிலை யில் உறவாடக் கூடியவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள்.

ஆகவே, உடை விஷயத்தில் ஒரு மாற்று தேவை என்பதை காந்தி உணர்ந் தார். கண்மூடித்தனமாக ஆங்கில உடை களைப் பின்பற்றுவதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே அவர் எளிய ஒற்றை வேஷ்டியுடன் உலா வரத் தொடங்கி னார். உடையில் ஏற்படுத்திய மாற்றம் அவரை அரசியல் ஞானியாக அடையாளப் படுத்தியது.

ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட மன நிலையின் அடையாளமாக கதர் உடை விளங்கியது. ராட்டையில் நூல் நூற்பதை காந்திஜி ஓர் ஒழுக்கமாகவும், ஆன்மிகப் பயிற்சியாகவும், ஒரு யாகமாகவும் அறிமுகம் செய்தார். எங்கோ ஒரு சிறுகிராமத்தில் தனது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு ஒரு பெண் ராட்டை சுற்றுவது என்பது பிரம்மாண்டமான பிரிட்டிஷ் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயலாகவே கருதப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞ ராக பணியாற்றியபோது பிரிட்டிஷ் பாரிஸ்டர்கள் அணிந்த தொழில்முறை ஆடையை காந்தியும் பயன்படுத்தினார். இந்திய வம்சாவளி தொழிலாளர்களைத் தென்னாப்பிரிக்க அரசு வன்மையாக தாக்கியபோது அதற்கு வருத்தம் தெரி விக்கும் வகையில் வெள்ளை வேஷ்டி யும் சட்டையும் அணிந்து சத்தியாகிரகத் தைத் தொடங்கி வைத்தார். இந்தியா திரும்பிய பிறகு, மேற்கத்திய உடைகள் அணிவதை முற்றிலும் கைவிட்டுவிட்டார். காந்தியின் உடை மாற்றம் ஏழை எளிய மக்களிடம் அவர் மீது அழுத்தமான நம்பிக்கையை உருவாக்கியது.

‘என் வாழ்க்கையில் நான் மேற் கொண்ட முடிவுகள் எல்லாம் திடீரென்று எடுக்கப்பட்டவைதான். அவற்றை ஆழ்ந்த விவாதங்களுக்குப் பிறகே எடுத்ததால் அதன் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அப்படி செய்யாமல் இருக்க முடியாது என்ற நிலையில்தான் முடிவு களை எடுத்திருக்கிறேன்’ என காந்தி தனது உடை மாற்றம் பற்றி குறிப்பிடுகிறார்.

அரசியலிலும் பொருளாதாரத்திலும் இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்து வரும் இன்றைய சூழலில் காந்தியத்தின் தேவை மிக அதிகமாக உள்ளது. அதற் காக நாம் மீண்டும் மீண்டும் காந்தியைப் புரிந்துகொள்வதும் பின்பற்றுவதும் அவசியமாகிறது.

- இன்னும் வாசிப்போம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

முந்தைய அத்தியாயம்: >வீடில்லாப் புத்தகங்கள் 52: வானத்து அமரன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x