Published : 17 Oct 2015 12:03 PM
Last Updated : 17 Oct 2015 12:03 PM
உளவியலில் ஒரு நபர், தான் இருக்கும் காலம் தான் வசிக்கும் இடம் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் இவற்றைப் பற்றிப் பிரக்ஞையுடன் இருக்கிறாரா என்பதைப் பரிசோதிப்பார்கள். ஒரு படைப்பாளியும் தான் வாழும் காலம், வசிக்கும் இடம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நாறும்பூநாதன் இருக்கிறார்.
கூரிய அவதானிப்புடன் அன்றாடம் கடந்து போகும் எளிய மனிதர்கள், இடங்கள் போன்றவற்றைக் கவனித்துப் பதிவிடுகிறார். அறியாத மனிதர்கள் மட்டுமின்றி தியாகராஜ பாகவதர், கே. பி சுந்தராம்பாள் போன்ற அறிந்த மனிதர்களைப் பற்றிச் சொல்லும்போதுகூட அவர்களின் அறியப்படாத பக்கங்களைத் திறந்து காட்டுகிறார்.
எத்தனையோ முறை பாளை தெற்குபஜார் பகுதியில் நின்றுகொண்டிருப்போம். அங்கிருக்கும் லூர்துநாதன் சிலை அருகில் நின்று பேசியிருப்போம். ஆனால் அவர் எங்கோ சேலத்திலிருந்து வந்து தனது கல்லூரிப் பேராசிரியருக்காக உயிரை மாய்த்துக்கொண்டார் என்ற தகவலைக் கேட்கும்போதுதான் நாம் அறியாத பக்கங்கள் தெரிகின்றன.
திரையரங்குகளைப் பற்றி எழுதுகிறார். பார்வதி திரையரங்கில் ‘படிக்காதவன்’ திரைப்படம் பார்க்கச் சென்றபோது கூட்ட நெரிசலில் அடிபட்டுத் தலையில் ஏற்பட்ட தழும்பு நினைவுக்கு வருகிறது. தழும்பு இருக்கிறது. ஆனால் பார்வதி திரையரங்கு இப்போது இல்லை.
1986 ஆம் ஆண்டு பாளையங்கோட்டை முருகங்குறிச்சி அருகில் கஷ்டப்பட்டு இரவு பகலாக ஒரு பேனர் செய்து ‘தென்னாப்பிரிக்க நிறவெறி அரசே! நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்’ என்று எழுதியதைப் பதிவிடுகிறார் நாறும்பூநாதன். இதைப் படிக்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. ஒருமுறை மதுரை கோரிப்பாளையத்தில் ‘சச்சின் டெண்டுல்கருக்குத் தவறாக அவுட் கொடுக்கும் ஸ்டீவ் பக்னரை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று ஒரு பெரிய போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். ஸ்டீவ் பக்னர் என்ன கோரிப்பாளையத்துக்கு வந்து பார்க்கப் போகிறாரா? இருந்தாலும் தன்னுடைய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதன் வெளிப்பாடே அது. இது சக மனிதன் மீதான கருணையும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற பரிதவிப்புமே ஆகும்.
எளிய மனிதர்களைப் பற்றி ஏன் எழுத வேண்டும்? வரலாறு என்பது வலியவர்கள் வகுத்ததாகவே இருக்கிறது. இரண்டாம் உலகப்போர் தெரியும். ஆனால், அதில் மறைந்தவர்களைப் பற்றி யாருக்குத் தெரியும்? வரலாறு என்பது அறியப்படாத மக்களால் ஆனது. டெரிலின் சட்டை தைத்துக் கொடுத்த பிச்சையா டெய்லரைப் பற்றிப் பதியவில்லை என்றால் அவரை யாருக்குத் தெரியும்.
அதைத்தான் வண்ணதாசன் அவர்கள் தனது அருமையான முன்னுரையில் “இது ரெடிமேட் சட்டையாடே?” என்று பிச்சையா டெய்லர் கேட்கும்போது நம் கண்களிலிருந்து வரும் கண்ணீரால் அவர் குடித்துக்கொண்டிருக்கும் சொக்கலால் பீடி அணைந்துவிடக் கூடாது’ என்று அருமையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
மரணம் என்பது நினைவுகளின் அழிவு. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல இடங்களுக்கும் உண்டு, சம்பவங்களுக்கும் உண்டு. ஒரு மனிதனைப் பற்றிய ஒரு சம்பவத்தைப் பற்றிய ஒரு இடத்தைப் பற்றிய நினைவுகள் இல்லையென்றால் அவை இறந்துவிட்டதாகவே அர்த்தம்.
அந்த வகையில் நாறும்பூநாதன் சாதாரண மக்களைப் பற்றிப் பதிந்து அவர்களுக்கும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கும் காலத்திற்கும் சாகாவரம் அளித்துவிட்டிருக்கிறார். அவற்றைச் சிரஞ்சீவி ஆக்கிவிட்டார். சில நினைவு களை வாழ்க்கை ரப்பரை வைத்து அழிக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு நினைவுகள் அழிக்கப்படாமல் இருப்பதற்காக அவற்றைப் பதிவு செய்திருக்கிறார்.
ஃபேஸ்புக் என்பது இன்று நம்முடைய நேரத்தை மிகவும் ஆக்கிரமிக்கிறது. இதனால் பல கேடுகள் விளைகின்றன. தேவையற்ற விவாதங்கள், போலிச் செய்திகள், தனிப்பட்ட தாக்குதல்கள், மனித மனவிகாரங்களின் வெளிப்பாடுகள் என்றே பெரும்பாலும் ஃபேஸ்புக் நிறைந்திருக்கிறது. அப்படிப்பட்ட ஃபேஸ்புக்கைக் கூடப் பயனுள்ளதாகப் பயன்படுத்த முடியும் என்று எழுத்தாளர் நாறும்பூநாதன் நிரூபித்துள்ளார்.
‘கண்முன்னே விரியும் கடல்’ என்ற இந்நூல் அவர் மூன்று வருடங்களாகத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவுகளின் தொகுப்பு. தன் வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கடந்து போன இடங்கள், சரித்திரத்தில் பதிவாகாத சம்பவங்கள் என அன்றாடம் நாம் கடந்து செல்லும் இடங்கள், மனிதர்களைப் பதிவு செய்கிறார். மறு உயிர் பெற்ற மண்ணாலும் மனிதர்களாலும் நூலின் பக்கங்கள் நிரம்பியுள்ளன. பெரிதும் திருநெல்வேலியைச் சுற்றிய நிகழ்வுகள்.
இந்நூலை லைக் செய்வீர்கள். அதைப் பற்றிக் கமெண்ட் செய்யுங்கள். இதைப் பலருக்கும் ஷேர் செய்யுங்கள்.
கண் முன்னே விரியும் கடல்
இரா. நாறும்பூநாதன்,
விலை: ரூ. 150,
-ஜி. ராமானுஜம். மனநல மருத்துவர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: ramsych2@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT