Last Updated : 27 Dec, 2020 03:14 AM

 

Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

முகக்கவசம் அணிந்த காமிக் நாயகி

நிர்பயா சம்பவத்தை அடுத்து பாலினரீதியான வன்முறைகளுக்கு எதிராகப் போராடும் காமிக் நாயகியாய் உருவாக்கப்பட்ட பிரியசக்தி, கரோனா பெருந்தொற்றையும் தடுக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். சகஸ் என்ற புலியைத் தனது வாகனமாக உடன் வைத்திருக்கும் பிரியசக்தி, பாலியல் வல்லுறவுக்குள்ளாகி அது ஏற்படுத்திய வடுக்களிலிருந்து மீண்டவள். இந்தியப் புராணங்களின் தாக்கத்திலிருந்து உருவான பிரியசக்தி கதாபாத்திரம் பார்வதி தேவியை ஞாபகப்படுத்துவது. இந்தியாவின் முதல் பெண் காமிக் கதாபாத்திரமான பிரியசக்தியை உருவாக்கிய குழுவில் ஒருவர் இந்திய அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் ராம் தேவிநேனி.

இந்தியாவில் பாலியல் வல்லுறவும் பாலியல்ரீதியான வன்முறையும் கலாசாரப் பிரச்சினையாக இன்னும் நீடிக்கிறது. பெண் தொடர்பில் இருக்கும் கருத்துகள், பெண் வெறுப்பு, ஆண்வழி மரபின் அடிப்படையில் நீடிக்கும் சமூகத்தில் பாலியல் வல்லுறவுக்குள்ளான பெண்களைப் புரிந்துகொள்ளவும் பரிவுகொள்வதற்குமான கல்வியின் தேவையை முன்னிட்டே பிரியசக்தியை உருவாக்கியதாக ராம் தேவிநேனி குறிப்பிடுகிறார். இந்தியா போன்ற ஆணாதிக்கம் நீடிக்கும் சமூகத்தில் வல்லுறவு செய்யும் ஆண் அல்ல; மாறாக, வல்லுறவு பாதிப்புக்கு உள்ளானவரே சந்தேகத்துடனும் விலக்கத்துடனும் அவமதிப்புடனும் பார்க்கப்படும் நிலை உள்ளது என்கிறார்.

இந்தப் பின்னணியில் உருவான பிரியாதான் இப்போது முகக்கவசத்துடன் கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள சகஸுடன் தனது பயணத்தை மேற்கொண்டிருக்கிறாள். பெரியவர்களும் ரசிக்கும் ‘ப்ரியாஸ் மாஸ்க்’கில் வரும் புலி சகஸுக்குக் குரல் கொடுத்திருப்பவர் பாலிவுட் நடிகை வித்யாபாலன். பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் உணரும் தனிமையைக் குட்டிப்பெண் மீனாவும் உணருகிறாள். அந்த மீனாவை அவளது அம்மா தாதியாகப் பணிபுரியும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மருத்துவப் பணியாளர்கள் பெருந்தொற்று நோயாளிகளுக்காகப் புரியும் தியாகங்களை ‘பிரியாஸ் மாஸ்க்’ மூலம் புரியவைக்கிறாள்.

பிரியசக்தி முதல் இந்திய காமிக் பெண் கதாபாத்திரமாக உருவான அதே காலகட்டத்தில்தான் இன்னொரு சூப்பர் ஹீரோயினும் பாகிஸ்தானில் காமிக் கதாநாயகியாகப் பிறந்து பெரும் புகழை அடைந்தாள். அவள் பெயர் பர்கா அவெஞ்சர்.

பிரியசக்கி பற்றி மேலும் அறிய இந்தச் சுட்டியைப் பார்க்கவும்:

https://www.priyashakti.com/priyas-mask

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x