Published : 26 Dec 2020 08:10 AM
Last Updated : 26 Dec 2020 08:10 AM

நூல்நோக்கு: க.நா.சு. வரைந்த உயிர்க்கோடுகள்

இலக்கியச் சாதனையாளர்கள்
க.நா.சுப்ரமண்யம்
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர்,
சென்னை-83.
தொடர்புக்கு: 044–24896979
விலை: ரூ.175

நகுலன், ‘அதிகமாகப் பேசாமல் நிதானமாகப் பதற்றமின்றி ஒருவருடன் இருப்பது ஒரு தத்துவம்’ என்று ‘ஐந்து’ கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பார். இன்னொருவருடன் அல்ல, தன்னுடனேயே ஒருவர் பேசாமல் இருக்க முடியக் கூடிய சூழல் தொலைந்துவிட்ட இந்த நாட்களில், க.நா.சுப்ரமண்யம் எழுதியிருக்கும் இந்த நூலில் 41 எழுத்தாளுமைகளைப் பற்றிய சிறு கட்டுரைகளின் முக்கியத்துவம் புலப்படுகிறது. க.நா.சு.வால் அப்படி இருக்க முடிந்ததோடு அவர்களைத் துல்லியமாக மதிப்பிடவும் முடிந்திருக்கிறது. தமிழில் கடந்த நூற்றாண்டில் நுண்கலை, இலக்கியத் துறைகளில் இயங்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளப் போதிய கட்டுரைகளோ வாழ்க்கைச் சரிதங்களோ போதுமானவை எழுதப்படவில்லை.

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய ‘புதுமைப்பித்தன் வரலாறு’ ஒன்றுதான் முழுமையானதாக, உடனடியாக ஞாபகத்துக்கு வருவது. கு.அழகிரிசாமி முதல் பிரமிள் வரை சுந்தர ராமசாமி எழுதிய நனவோடை நூல்களும், சி.மோகன் எழுதிய ‘நடைவழிக் குறிப்பு’களும், ‘நடைவழி நினைவு’களும் முக்கியமானவை. சின்னச் சின்னத் தனிக் கட்டுரைகள், அஞ்சலிக் குறிப்புகள் வழியாக அசோகமித்திரன் நிறைய எழுத்தாளுமையின் சித்திரங்களை உருவாக்கியுள்ளார்.

தன் சுயத்தின் கனத்தை ஏற்றாமல், அந்த ஆளுமைகளுடன் மேற்கொண்ட உறவின் வழியாக அவர்களது உயிர்ச் சித்திரங்களை நமக்கு முன்னர் நிகழச் செய்திருக்கிறார். ஒவ்வொரு எழுத்தாளுமைகளின் எழுத்துரீதியான முக்கியத்துவம், சிறந்த படைப்புகள், குணநலன்கள், குறைநிறைகள், உறவு ஏற்பட்ட சூழல் இவைதான் ஒவ்வொரு கட்டுரையின் தன்மையாக உள்ளது. எந்த ஆளுமைகளும் மிகையாக ஏற்றப்படவோ தூற்றப்படவோ இல்லை. எல்லோரையும் குறிப்பிட்ட வார்ப்படத்தில் தன் மொழியைக் கொண்டு, தன் தரப்பைக் கொண்டு நிரவும் வேலையையும் இந்தக் கட்டுரைகளில் க.நா.சு புரியவில்லை. மனிதர்களை அவர்தம் ஆளுமைகளை, அவர்களுக்கேயுரிய பலவீனங்களையும் அங்கீகரித்து அவர்களது மேன்மையையும் சிறப்பையும் ஞாபகமூட்டும் கட்டுரைகள் இவை.

இந்தியாவெங்கும், பிரான்ஸ் உள்ளிட்ட சில வெளிநாடுகளிலும் குறைந்த வசதிகளுடன் அலைந்த ஒரு எழுத்து வேதாந்தியின் குறிப்புகள் என்று இந்தக் கட்டுரைகளைச் சொல்லலாம். இப்படித்தான் அந்தக் காலம் இருந்தது, இப்படித்தான் இருந்தார்கள், அதை இப்படி எழுதுகிறேன் என்ற பட்டும்படாத மொழியில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு எழுத்தாளுமை குறித்துப் பேசும்போதும் அவரது சமூகப் பின்னணி, அவரைச் சந்தித்தபோது இருந்த, படைப்புகளில் உள்ள அரசியல் பின்னணி எல்லாவற்றையும் சின்னச் சின்னக் கீற்றல்களில் வெளிப்படுத்துகிறார். அந்தக் காலகட்டத்தில் இருந்த பத்திரிகைச் சூழல், எழுத்தாளுமைகளின் குடும்ப, பொருளாதார, சமூகச் சூழல்கள் எல்லாமும் இடம்பெறுகின்றன.

முதல் கட்டுரை ‘ராஜாஜியும் நானும்’. ராஜாஜியின் சிடுசிடுப்பான குணத்தையும், அவரது படைப்புகள் சார்ந்த விமர்சனத்தையும் வைக்கும் க.நா.சு., இலக்கியத் தரம் என்பதைவிட பெரிய மனிதனாக இருப்பதற்குச் சக்தி வேண்டும் என்றும், அத்தகைய மனிதர் ராஜாஜி என்றும் முத்தாய்ப்பு வைக்கிறார். புதுமைப்பித்தனுடனான உறவை ‘அமைதி தராத நட்பு’ என்று கூறிவிடுகிறார். அந்த மூன்று வார்த்தைகளில் எத்தனையோ மௌனம் உறைந்திருக்கிறது. புதுமைப்பித்தனின் எதிர்மறையான குணங்கள் அத்தனையையும் மீறி அவரது படைப்பு மேதமை மீது இருந்த வசீகரத்தை அந்தக் கட்டுரையில் தக்கவைத்துக்கொண்டு நம்மிடமும் கடத்திவிடுகிறார்.

மௌனி பற்றிய கட்டுரையைப் படித்து முடிக்கும்போது, மௌனி கதை ஒன்றைப் படித்து முடித்தவுடன் ஏற்படும் அதே பெருமூச்சு அனுபவம் அவர் கட்டுரை வழியாகவும் கிடைக்கிறது. தமிழராக இருந்து கன்னடத்தில் எழுதிப் புகழ்பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் குறித்துப் பேசும்போது, அவர் பேணிய பழமை பற்றிய சித்திரம் கிடைத்துவிடுகிறது. மந்திர தந்திரங்கள், யோக முறைகள், சாஸ்திரம், மரபிலக்கியம், சினிமா எனப் பல துறைகளில் ஆளுமையும் சாகச வாழ்க்கையும் கொண்டிருந்த ச.து.சு.யோகியார் குறித்த கட்டுரையில் க.நா.சுவுக்கு அவரது ஆளுமை மீது இருந்த கிறுகிறுப்பு தெரிகிறது. ‘மண்ணாசை’ நாவல் எழுதிய சங்கர் ராம் பற்றி எழுதும்போதும் குறிப்பிட்ட எழுத்தாளுமைகளின் சிறந்த படைப்புகள்கூட மறக்கடிக்கப்பட்டுவிட்டதை எழுதும்போது, தமிழர்களின் துரதிர்ஷ்டம் என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார்.

வில்லியம் பாக்னர், சார்த்ர், ஆல்பெர் காம்யு, மால்ரோ, அம்ருதா ப்ரீதம், ஆர்தர் கொய்ஸ்லர், ஸ்டீபன் ஸ்பெண்டர் என அவர் பழகியிருக்கும் ஆளுமைகளைப் பார்க்கும்போது தகவல்தொடர்பு, பயண வசதிகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் க.நா.சு. கொண்டிருந்த எழுத்துரீதியான உத்வேகமும் லட்சியமும் மட்டுமே இத்தனை வகையான அனுபவங்களுக்குக் காரணங்களாகியுள்ளன என்று தோன்றுகிறது. தன்னலம் பாராமல், வசதியான சமூகப் பின்னணி கொடுக்கும் அனுகூலங்கள், எதிர்காலம், வாய்ப்புகளைத் துறந்து எழுத்து, பத்திரிகை, பதிப்புச் சூழல்களில் தங்கள் ஊனையும் உயிரையும் கரைத்துக் கொடுத்து ஒரு பண்பாட்டைப் போஷித்த தமிழ் ஆளுமைகளின் ஜீவித சித்திரங்கள் அடங்கிய நூல் இது.

க.நா.சு. அந்தந்த ஆளுமைகளுடன் ஏற்பட்ட உறவு, சூழல்கள் ஆகியவற்றை எழுதும்போது அது மிகையல்ல, பொய்யல்ல, சுயபிம்பத்தை ஏற்றிக் காட்டும் ஏமாற்றல்ல என்று மிகச் சாதாரணமாக உணர முடிகிறது. அந்த நம்பகத்தன்மைகூடத் தீவிர எழுத்துச் சூழலில் தற்போது மறைந்துவிட்ட நிலையில் அந்தச் சாதாரணமும் அந்த நேர்மையும்தான் இந்தப் புத்தகத்தை அபூர்வமான ஒன்றாக்குகிறது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x