Published : 26 Dec 2020 08:07 AM
Last Updated : 26 Dec 2020 08:07 AM

நூல்நோக்கு: குடிசை நெருப்பில் குளிர்காயும் புனைவு

1967 தாளடி
சீனிவாசன் நடராஜன்
தேநீர் பதிப்பகம்
சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை-635851.
தொடர்புக்கு: 90809 09600
விலை: ரூ.230

ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் இலக்கிய மதிப்பீடுகளில் மட்டுமின்றி, அரசியல் கருத்துகளிலும் தனது மாறுபட்ட பார்வைகளைத் தயங்காது முன்வைப்பவர். சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் ‘1967 தாளடி’ நாவல், நேர்க்கோட்டு முறையைத் தவிர்த்து, கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிறது. பாத்திரங்களுக்கு இடையிலும் கூடுவிட்டுக் கூடுபாய்கிறது. நாட்டியம், ஓவிய நுண்கலைஞர்களின் மனவோட்டங்களையும் ரசிக மனோபாவங்களையும் விவரிக்கிறது.

நாகப்பட்டினத்திலிருந்து ஹம்பிக்கும் அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் நாவல் பயணிக்கிறது. நிர்வாண ஓவியங்களை வரையும் ஒரு கலைஞனுக்கும் அவனுக்கு மாதிரியாக நிற்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உறவு, பசிக்கும் காமத்துக்கும் இடையிலான தத்துவ விவாதங்கள், தஞ்சை மண்ணுக்கே உரிய ஃபில்டர் காபி, வெற்றிலை சமாச்சாரங்கள் ஆகியவை எல்லாம் சேர்ந்து ஒருபக்கம் துல்லியமும் இன்னொருபக்கம் கேள்விகளுமாக இந்தக் கதைக்கு ஒரு உண்மைத்தன்மையை உருவாக்க முயல்கிறது. வாடிகன் திருச்சபை வரலாறும், இயங்கியல் பொருள்முதல்வாத அறிமுகமும், இறுதியில் லெனின் தலைமையில் ரஷ்யப் புரட்சி வெற்றிபெற்றதும் கட்டுரைத்தன்மையில் விவரிக்கப்படுவது இந்த உண்மைத்தன்மையை மேலும் திட்டமிட்டு உருவாக்குவதாகவே சந்தேகிக்க வைக்கின்றன.

இந்தச் சந்தேகத்துக்கான காரணம், இந்நாவல் இடையிடையே அன்றைய தமிழகத்தின், குறிப்பாகக் கீழத் தஞ்சையின் அரசியல் போக்குகளையும் சமூக நிலையையும் படம்பிடிக்கிறது. நிலவுடைமையாளர்கள் பெற்றிருந்த செல்வாக்குகளை மட்டுமல்ல, மடாலயங்களின் இருண்ட பக்கங்களையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. ஆனால், இந்தச் சித்தரிப்புகளிலிருந்து வாசகரிடம் உருவாக்கப்படும் பிரதி மீதான நம்பிக்கையுணர்வின் நோக்கம்தான் என்ன?

கீழத் தஞ்சையில் அறுபதுகளின் இறுதி என்பது உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தங்களது குரலை உயர்த்திப் போராடிய காலம். பொதுவுடைமை இயக்கத்தின் வழிகாட்டலில் ஓரணியாய் திரண்டு நின்ற காலம். எதிர்வரிசையில் நின்ற பெருநிலக்கிழார்களின் கட்டுக்கடங்காத கோபம், உயிருக்குப் பயந்து குடிசைக்குள் ஓடியொளிந்துகொண்ட பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என 44 உயிர்கள் தீயில் கருகுவதற்குக் காரணமானது. விவசாயக் கூலிகளின் சங்க நடவடிக்கைகளையும் நிலவுடைமையாளர்களின் கோபத்தையும் விவரிக்கும் இந்த நாவல், அந்தப் பகை உக்கிரமடைந்து 44 உயிர்களைக் குடித்த கொடுமையை விவரிக்கையில் வரலாற்றுக்கும் கற்பனைக்கும் நடுவே விளையாடிப் பார்க்கிறது. ராமையாவின் குடிசையில் இறந்தவர்கள் உண்மையிலேயே விவசாயக் கூலிகள்தானா, அந்தக் கொடுமைக்குத் திட்டமிட்டவர்கள் நிலவுடைமையாளர்கள்தானா என்பதுபோன்ற காரண காரிய மயக்கங்களைத் திட்டமிட்டே உருவாக்குகிறது. இரு தரப்பும் ஒரே குறிச்சொல்லை வைத்து சதித்திட்டம் தீட்டியதாகப் புனைவில் சுவாரஸ்யம் செய்கிறது. அனைத்துக்கும் மேலாக, வெண்மணிப் படுகொலைகளின் முதல் குற்றவாளி, வேறொரு இடத்தில் உயிருக்குப் பயந்து ஒளிந்திருந்தார் என்று குறிப்பிடுகிறது.

ஒரு கதாசிரியர், தொன்மங்களுக்குள் மாற்றுக் கதையாடல்களை உருவாக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வரலாற்றுப் புனைவில் பெரும் நிகழ்வுகளின் இடைவெளிகளையும் அதற்கான காரணங்களையும் புனைந்துரைக்கையில் பார்வைகள் மாறுபட்டாலுமேகூட அவரின் சுதந்திரத்தில் பொதுவாக யாரும் தலையிடப்போவதில்லை. ஆனால், நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் கொடுமையில், பாதிக்கப்பட்டவர்களும் அதற்குக் காரணமானவர்களும் இன்னும் பலர் உயிரோடு வாழ்ந்துவரும் நிலையில், கற்பனையெனும் பெயரில் பொய்யைக் கலந்து ஒரு பெருங்குற்றத்தின் உண்மைத்தன்மையைச் சந்தேகிக்க வைப்பதுதான் கதையாடல் கலையா என்ற கேள்வியை நோக்கி நம்மைத் தள்ளுகிறது.

நல்ல வேளையாக, சீனிவாசன் தனது நாவலில் கலைத்துப் போட்டிருக்கும் சீட்டுகளுக்கு நடுவே வெண்மணியைத் தேர்ந்தெடுத்து முன்னாலேயே நீட்டிவிடுகிறது முன்னாள் எழுத்தாளர் ஒருவர் எழுதியிருக்கும் முன்னுரை. அதுவும், தஞ்சையின் பிரபலக் குடும்பத்தின் பெயரைச் சாதிப் பெயர் என்றும், கீழத் தஞ்சையில் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் எதிரெதிராக இயங்கின என்றும், நிலவுடைமையாளர்களை பெரியார் ஆதரித்தார் என்றும் தனக்குத் தெரியாத தகவல்களையும் தான் விரும்பும் கருத்துகளையும் சொல்வதற்கு முற்படுகிறது. முன்னுரை எழுதியவரேனும் தஞ்சையின் வரலாறு அறியாதவர் என்று மன்னித்துவிடலாம். சீனிவாசன் நடராஜன், உங்களுக்கு வளர்ந்த மண்ணின் வரலாற்றையே மறைத்தெழுதும் நிர்ப்பந்தம்தான் என்ன? உங்கள் புனைவுக் காய்ச்சலுக்கு கீழ்வெண்மணி குடிசைதான் கிடைத்ததா?

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x