Published : 26 Dec 2020 03:14 AM
Last Updated : 26 Dec 2020 03:14 AM
பேய்ச்சி
ம.நவீன்
வல்லினம்,
யாவரும் வெளியீடு
வேளச்சேரி, சென்னை-42.
விலை: ரூ.300
தொடர்புக்கு:
90424 61472
ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை (வெளியீடு: வல்லினம் பதிப்பகம், மலேசியா; யாவரும் பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு) மலேசிய அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. தடை கோரியவர்கள் சில தமிழ் எழுத்தாளர்கள்; தமிழ் அமைப்புகள் எனத் தெரிகிறது. தடை கோர முக்கியக் காரணம், இந்நாவலில் பாலுறுப்புகளையும் சாதியையும் குறிக்கும் வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது. பாத்திரங்களின் உரையாடலில் வசைகள் வருவதும் அவற்றில் பாலுறுப்பு, பாலுறவு தொடர்பானவை அமைவதும் இயல்பானதே. கீழ், மேல் என எதிரிடையைக் கொண்டது சாதியமைப்பு. ஒரு சாதியைக் கீழாக்குவதன் மூலமே இன்னொரு சாதியை உயர்வுபடுத்த இயலும் என்பதால், சாதி வசைகளும் சாதாரணமாகப் புழங்குகின்றன. உரையாடலே நாவலுக்கு உயிர் தருகிறது. பேச்சையே மையமாகக் கொண்டு இயங்கும் தமிழ்ச் சமூகத்தில் உரையாடலைத் தவிர்த்துவிட்டு நாவல் எழுத இயலாது. மகிழ்ச்சி, கோபம், துயரம் உள்ளிட்ட எந்த உணர்ச்சியை வெளிப்படுத்தவும் வசைச்சொற்கள் இருக்கின்றன. அவற்றை உருவிவிட்டு உரையாடலை எழுத இயலாது. ஆகவே, வசைச்சொற்களை அளவுகோலாக வைத்தால் எந்த நாவலையும் தடைசெய்துவிடலாம்.
இந்நாவலில் ‘மயிர்’ என்னும் சொல் ஓரிடத்தில் வருகிறது. அதுவும் ஆபாசப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்’ என்கிறது திருக்குறள். உடல் உறுப்புகளில் அற்பமான ஒன்றாகவும், உதிர்வது அதன் இயல்பாகவும் இருப்பதால் திருவள்ளுவர் அதைப் பயன்படுத்துகிறார். அந்தச் சொல் இன்று அற்பம் என்னும் இழிவுப்பொருள் தரும் வசையாக வழக்கில் உள்ளது. ஆகவே, அதற்குப் பதிலாக ‘முடி’யைப் பயன்படுத்துகிறார்கள் நாகரிகவான்கள். ‘மசுருள்ள சீமாட்டி சீவி முடியறா’ என்னும் பழமொழி வழக்கில் உள்ளது; அச்சில் பதிவும் பெற்றுள்ளது. இதில் பதிலியாக ‘முடி’யை வைக்க முடியுமா? அப்படித்தான் வைக்க வேண்டிய தேவை என்ன? படைப்பின் ஜீவன் சொற்கள் அல்லவா?
வழக்கில் உள்ளவை எல்லாவற்றையும் அச்சில் கொண்டுவர முடியுமா என்று கேட்பது இன்று பழைய கேள்வியாகிவிட்டது. இந்நாவலில் உள்ள வசைச்சொற்கள், பாலுறுப்புப் பெயர்கள், சாதி ஆகியவையெல்லாம் இதற்கு முன் அச்சில் வராதவையும் அல்ல; அகராதிகளில் இருப்பவைதான். பெரும்பாலான சொற்கள் தமிழ் லெக்சிகனிலேயே உள்ளன.
ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ‘வசைச்சொல் அகராதிகள்’ அச்சில் இருக்கின்றன. வசைச்சொற்களை ஆய்வுக்குரிய தரவுகளாகக் காணும் பார்வையும் இன்று மேலோங்கியிருக்கிறது. மேலும் ‘அச்சுப் புனிதம்’ இன்று நொறுங்கிப் போய்விட்டது. சமூக ஊடகங்களில் புழங்காத சொற்களே இல்லை. கருத்துப் பகுதியில் மட்டுமே எத்தனையோ வசைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றையெல்லாம் தேடி எடுத்துத் தடைசெய்வது என்றால் அரசாங்கம் தனித் துறைதான் தொடங்க வேண்டும். அச்சல்லாத நூல் வடிவங்கள் பெருகிவிட்டபோதும் இன்னும் எத்தனை காலத்துக்கு நாம் இந்த ‘அச்சுப் புனித’த்தைக் கட்டியழப் போகிறோம்?
வசைச்சொற்களில் பாலுறுப்புகளும் சாதிப் பெயர்களும் வருவது தொடர்பாக ஆய்வுகள் நடந்திருக்கின்றன. சமூக உளவியல் பார்வையில் அவற்றைப் பொருட்படுத்திக் காணும் நோக்கு முக்கியமானது. எனினும், பெரிதும் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கும் வசைச்சொற்களைப் பயன்படுத்துவது குறித்தும், சாதிகளை இழிவுபடுத்தும் வசைகளைக் குறித்தும் இன்று கடுமையான விமர்சனங்களும் பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. அவை வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால் அவை எழுத்தில், குறிப்பாகப் படைப்பிலக்கியத்தில் வரக் கூடாது என்று சொல்வது சரியானதல்ல. படைப்பில் ஒரு வசைச்சொல் இடம்பெறுவதற்குப் பல்வேறு நோக்கம் இருக்கும். நம்பகத்தன்மை, உணர்ச்சி வெளிப்பாடு, பாத்திரத்தின் கருத்தை அம்பலப்படுத்துதல் என நோக்கம் விரியும். அந்த நோக்கப் பொருத்தம் பற்றி விவாதிக்கலாம்; விமர்சிக்கலாம். அதைக் காரணமாக்கி நூலைத் தடைசெய்வது முழுமையான கருத்துரிமைப் பறிப்பு.
ஒரு நூலைத் தடைசெய்யச் சொல்லித் தனிமனிதர்களோ அமைப்புகளோ கோரிக்கை வைப்பதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும். ‘பேய்ச்சி’ நாவல் தடை விஷயத்தில் தனிமனிதக் காழ்ப்பு பிரதானமாகச் சொல்லப்படுகிறது. அதற்கு அரசியல் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சாதிப் பெயர் இந்நாவலில் வந்தது ஆபாசம் என்று சொல்லும் மலேசிய எழுத்தாளர் ஒருவர், தம் நேர்காணல் ஒன்றில் அதே சாதிப் பெயரைப் பலமுறை உச்சரிக்கிறார். சொல்லும்போது வராத ஆபாசம் எழுதும்போது மட்டும் எப்படி ஏறுகிறது? பேச்சுக்கும் எழுத்துக்குமான இடைவெளி நீண்ட பாதையாக நம் முன் விரிந்திருக்கிறது. எழுத்து, அச்சு, புத்தகம் ஆகியவற்றைக் கண்டு அச்சுறும் மனோபாவம் நீங்காத பழமையில்தான் தமிழினம் இன்னும் முங்கிக் கிடக்கிறது.
சரி, பின்னணி எதுவாகவும் இருக்கட்டும். ஓர் அரசாங்கம் நூலைத் தடைசெய்யும் சட்டப் பிரிவை நீக்குதல் குறித்துப் பரிசீலிக்க வேண்டிய காலகட்டம் இது. தடைசெய்தல் என்பது ஒரு பிரிவுக்குத் தற்காலிகச் சந்தோஷத்தைத் தரலாம். பொதுநிலையில் அந்தச் சந்தோஷத்துக்கு எந்த அர்த்தமும் இல்லை. எந்தக் காலகட்டத்திலும் இல்லாத வகையில் ஒவ்வொரு தனிமனிதக் கருத்து வெளிப்பாட்டுக்கும் வெளி உருவாகிவிட்ட காலகட்டம் இது. கருத்து விவாதங்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அவற்றை ஆரோக்கியமாக நடத்துவது குறித்தும் வழிமுறைகளை உருவாக்குவதை வேண்டுமானால் அரசாங்கம் செய்யலாம். கல்வியிலும் பொது அரங்குகளிலும் அவற்றுக்கான இடங்களை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்துச் சிந்திக்கலாம். நூலைத் தடைசெய்யும் நடைமுறை ஆயிரமாயிரம் பூக்கள் மலரும் இந்தக் காலகட்டத்துக்கு ஒவ்வாத ஒன்று.
- பெருமாள்முருகன்,
‘மாதொருபாகன்’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: murugutcd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT