Published : 04 Oct 2015 01:16 PM
Last Updated : 04 Oct 2015 01:16 PM

காலமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதி

பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லாதது நம்மில் பெரும்பாலானோரின் அன்றாட யதார்த்தம். அற்புதங்களோ அரிது. காலங்காலமாக இப்படித்தான் வாழ்க்கை இருந்திருக்க வேண்டும். இந்த அலுப்பான யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்குத்தான் நமக்குக் கனவு தேவைப்படுகிறது. இன்னும் மேலான வாழ்வுக்கான லட்சியம் மற்றும் கருத்தியல்கள் தேவைப்படுகின்றன. கலையும் கவிதையும் தேவையாக இருக்கின்றன. கடவுள் தேவைப்படுகிறார். ஆலயங்கள் தேவைப்படுகின்றன. இந்த மண்ணிலேயே அவ்வப்போது தரிசிப்பதற்கும், நினைவில் வைத்துப் போற்றுவதற்கும் கனவைப் போன்ற நிலபரப்புகளும் அனுபவங்களும் தேவையாக உள்ளன.

தமிழின் சிறந்த சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான வண்ணநிலவன் எழுதியிருக்கும் 'குளத்துப் புழை ஆறு', அப்படிப்பட்ட கனவு நிலவுப்பரப்பை மொழியில் உருவாக்கிய அற்புதம்.

வண்ணநிலவனின் இந்தக் கவிதையில் வரும் குளத்துப் புழை ஆறு, கொல்லம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட குளத்துப்புழா என்ற சிறு கிராமத்தில் ஓடும் சிறு நதி. அதன் பெயர் கல்லடை. இந்தக் கிராமத்திலுள்ள ஐயப்பன் கோயில் புகழ்பெற்றது. ஐயப்பன், இங்கே சிறுவனாகக் காட்சி அளிப்பதால் பால சாஸ்தா என்றழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தைச் சுற்றி ஓடும் கல்லடையாற்றில்தான், ஐயப்பனின் மீது ஆசைகொண்ட மச்சகன்னி, ஐயப்பனின் வரம்பெற்று அங்கேயெ மீன்களாக வாழ்கிறாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால் இந்த ஆற்றில் மீன் பிடிக்கக் காலம்காலமாக விலக்கு உள்ளது.

மீன்வளம் குன்றாமல் இருப்பதால் குளத்துப் புழை ஆற்றுக்கு வரும் பயணிகள் பொரிகடலையை இடும்போது மொத்த ஆற்றின் பரப்பும் கருத்த மீன்களின் தலைதலையாகத் தோற்றம் கொள்ளும் காட்சி அற்புதமானது.

இந்த ஆற்றைத்தான் வண்ணநிலவன் கனவான நிலப்பரப்பாக மாற்றியுள்ளார். மிகக் கொஞ்சமான வரிகளைக் கொண்ட கவிதைதான் இது. தோணிகள் கூட ஓட்ட முடியாத ஆழம் குறைந்த நதிதான் குளத்துப் புழை ஆறு. ஆனால் இந்த வரிகளை எழுதும் இந்நேரத்தில்கூட ஓடிக்கொண்டிருக்கும் என்று தொடங்குகிறார். குளத்துப்புழா போன்ற கிராமத்தில் கோயிலையும் விவசாயத்தையும் தவிர வேறென்ன வாழ்வாதாரம் இருக்க முடியும். மீன்களுக்குப் போடுவதற்குப் பொரிகடலை வாங்கச் சொல்லி கொஞ்சும் மலையாளத்தில் நச்சரிக்கும் குழந்தைகளின் மீது கவிஞனின் பரிவு சாய்கிறது.

அந்தக் குழந்தைகளின் வீடுகளைக் கற்பனை செய்கிறான் கவிஞன். பால சாஸ்தா கோவில் கொண்டிருக்கும் தென்புறத்திலேயே மணிகண்டனின் ஆராதனை மணியொலி கேட்கும் ஆசிர்வாத தூரத்திலேயே அந்தக் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று விரும்புகிறான். இங்குள்ள ஐயப்பனும் பாலகன்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நூறாயிரம் கிருஷ்ண சுக்ல பட்சங்கள் கடந்தும் ஓடுகிறது. காலத்தின் நினைவற்றுத் திளையும் மீன்கள் ஆற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. தென்சரிவில் இருக்கும் தேக்கு மரங்கள் பின்னணியாக ஆற்றுக்குப் பேரழகைத் தருகின்றன.

இங்கேதான் இருக்கிறது குளத்துப் புழையில் ஓடும் கல்லடை ஆறு. குளத்துப் புழை ஆற்றைப் பார்த்தவர்களுக்கும், இனி பார்க்கப் போகிறவர்களுக்கும், பார்க்கவே வாய்ப்பில்லாதவர்களுக்கும் படிப்படியாக ஒரு மேலான கனவாக ஒரு லட்சிய நிலப்பரப்பாக அதை மாற்றிவிடுகிறார் வண்ணநிலவன்.

*

குளத்துப் புழை ஆறு

- வண்ணநிலவன்

குளத்துப் புழை ஆறு

இந்நேரத்தில்

இவ்வரிகளை எழுதும்

இந்நேரத்தில் கூட

ஓடிக்கொண்டிருக்கும்

தோணிகள் ஓட்ட முடியாத

குளத்துப் புழையாற்றின்

கரைகளில் மீன்களுக்குக்

கடலை வாங்கச் சொல்லி

கொஞ்சும் மலையாளத்தில்

நச்சரிக்கும் சிறுமிகளின்

வீடுகள்

எந்தச் சரிவில் இருக்கும்?

எனக்கு ஏனோ

வடபுறத்தை விடத்

தென்புறமே பிடிக்கிறது

அதனால் அவர்களின் வீடு

தென்சரிவிலேயே உயரமான

தேக்கு மரங்களினூடே

மணிகண்டனின் ஆராதனை

மணியொலி கேட்கும்

தூரத்தில்

இருக்கட்டும்

குளத்துப் புழையாறு

நூறாயிரம்

கிருஷ்ண சுக்ல பட்சங்கள்

கடந்தும் ஓடுகிறது

கால நினைவற்றுத்

திளையும் மீன்களோடும்

தென்சரிவுத்

தேக்கு மரங்களோடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x