Published : 11 Oct 2015 02:20 PM
Last Updated : 11 Oct 2015 02:20 PM

விடுபூக்கள்: வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2015

வாசகசாலை தமிழ் இலக்கிய விருதுகள் 2015

வாசக சாலை என்னும் இலக்கிய அமைப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கில் மாதமொருமுறை புத்தக விமர்சனக் கூட்டங்கள் , இலக்கிய அரங்கு மற்றும் தமிழின் முன்னோடிப் படைப்பாளிகளை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்திவருகிறது. இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 19-ம் தேதி நடக்கவுள்ளது. அதை ஒட்டி இந்த அமைப்பின் சார்பாக, சிறந்த நாவல் மற்றும் சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. நவம்பர்-2014 முதல் அக்டோபர்-2015 வரையான காலகட்டத்தில் வெளியான படைப்புகளில், மேற்கூறிய இரு பிரிவுகளின் கீழ் உங்கள் பரிந்துரைகளை வரும் 21-ம் தேதிக்குள் vasagasalai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விபரங்களுக்கு 9942633833 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

திருக்குறளின் மற்றொரு அவதாரம்

திருக்குறளுக்கு மேலும் ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது. இந்த முறை இதைச் செய்திருப்பது கோபாலகிருஷ்ண காந்தி. சிறு வயதில் தனது தாத்தா ராஜாஜி சொல்லக் கேட்ட ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே/ இடுக்கண் களைவதாம் நட்பு’ என்ற திருக்குறள்தான் அவருக்குத் திருக்குறள் மீது ஈடுபாடு வருவதற்குப் பெரிதும் காரணம். இன்னொரு தாத்தாவான காந்தியும் திருக்குறள்மீது ஈடுபாடு கொண்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. தனது மொழிபெயர்ப்பை கோபாலகிருஷ்ண காந்தி, யாருக்கு சமர்ப்பித்திருக்கிறார் தெரியுமா? தனது தாத்தா ராஜாஜிக்கும், ராஜாஜியுடன் முரண்பட்ட நண்பரான பெரியாருக்கும்தான்.

ஒழுங்கு குலைந்த துயில்

கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் நினோ ரிக்கியின் ஸ்லீப் என்னும் நாவல் சமீபத்தில் வெளியானது. டேவிட் பேஸ் என்னும் வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் உறக்கக் கோளாறால் அவதிப்படுகிறார். அழகிய மனைவி, வெற்றிகரமான தொழில், இனிய இல்லம், பிரியமான குழந்தை என அவருக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான எல்லாம் இருக்கிறது, ஆனால் உறக்கம் அவரது சிக்கலாக மாறிவிடுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சையை நாடுகிறார். இதன் காரணமாக அவரது வாழ்வின் போக்கு எப்படியெல்லாம் மாறுகிறது என்பதை இந்த நாவல் விவரிக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்னர் உறக்கக் கோளாறால் அவதிப்பட்டிருக்கிறார் நினோ ரிக்கி. அதன் பாதிப்பில் உருவான இந்த நாவலை இந்த ஆண்டில் படிக்க வேண்டிய 20 நாவல் களில் ஒன்றென குளோப் அண்ட் மெயில் இணையதளம் தெரிவித்திருக்கிறது.

ஜெய்பூர் இலக்கிய விழா

உலகின் புகழ்பெற்ற இலக்கியத் திருவிழாக்களுள் ஒன்றான ஜெய்பூர் இலக்கிய விழாவின் அடுத்த ஆண்டு நிகழ்வு (வழக்கம்போல) ஜனவரி மாதம் நடக்கவிருக்கிறது. அந்த நிகழ்வில் கலந்துகொள்ளப்போகும் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கவிஞர் மார்கரெட் அட்வுட்டும், ‘கேபிடல் இன் த ட்வெண்டி ஃபர்ஸ்ட் செஞ்சுரி’ (2013) என்ற நூலின் மூலம் பெரும் புகழ் பெற்ற பிரஞ்சுப் பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கெட்டியும்தான் இந்த விழாவின் நாயகர்கள். புலப்பெயர்வு, அந்தரங்க உரிமை போன்ற விஷயங்கள் குறித்து இந்த ஆண்டு விவாதம் நடக்கவிருக்கிறது. இந்திய அளவில் சுதந்திரச் சிந்தனையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் நடக்கவிருக்கும் இந்த விழா சிந்தனை உலகின் குவிமையமாக மாறியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x