Published : 11 Oct 2015 02:15 PM
Last Updated : 11 Oct 2015 02:15 PM
அணுவுலை விபத்தால் பாதிக்கப் பட்டவர்களின் வாய்மொழிக் கதைகளைத் தொகுத்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த புலனாய்வு இதழாளர் ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் இந்த ஆண்டின் நோபல் இலக்கியப் பரிசைப் பெற்றுள்ளார்.
இரண்டாம் உலகப்போர் மற்றும் சோவியத் யூனியனுக்கும் ஆப்க னுக்கும் நடந்த யுத்தத்தின் போது , பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களைத் தொகுத்து இவர் நூல்களை எழுதியுள்ளார்.
புனைவு அல்லாத நூலுக்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டு ஐம்பதாண்டுகள் ஆகின்றன. இதற்குமுன்னர் புனைவல்லாத நூல்களுக்காக பெட்ரண்ட் ரஸல் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர். இந்த நீண்டகால இடைவெளியை ‘வாய்சஸ் ஆப் செர்னோபில்’ நூல் உடைத்துள்ளது.
1985-ல் இவர் எழுதி வெளியான ‘வார்ஸ் அன்வுமன்லி பேஸ்’ நூலில், இரண்டாம் உலகப் போரில் பங்குபெற்ற நூற்றுக்கணக்கான பெண்களின் அனுபவங்களைத் தொகுத்திருந்தார். இரண்டாம் உலகப் போரில் முன்னணியில் நின்று செயல்பட்ட லட்சக்கணக் கான பெண்களின் மறைக்கப் பட்ட தியாக வரலாறு இப்புத்தகத்தின் வழியாகத்தான் தெரியவந்தது. இந்த நூல் சோவியத் யூனியனில் மட்டும் இருபது லட்சம் பிரதிகள் விற்றன. வாய்மொழிக் கதைகள் வழியாக வரலாற்றை எழுதும் உத்தி பற்றி அவர் கூறும்போது, “நான் பல வடிவங்களை முயன்று, இறுதியாக தனக்காக தானே பேசும் வாய்மொழிக் கதைகளைத் தேர்ந்தேடுத்தேன்” என்கிறார்.
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெறும் 14-ம் பெண்மணி இவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT