Published : 31 May 2014 10:00 AM
Last Updated : 31 May 2014 10:00 AM
நவீனத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்கு முக்கியமானது. ‘மணிக்கொடி’ ‘எழுத்து’ ‘சரஸ்வதி’ போன்ற இதழ்கள் நவீன இலக்கியத்தின் முதல் தலைமுறை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. வெகுஜன இதழ்களுக்கு மாற்றாக வெளிவந்த இந்த இதழ்கள் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மேற்கத்திய கருத்தியல் ஆளுமைகளையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றின. இன்றைய காலகட்டத்தில் வெஜன இதழ்களுக்கு இணையாக அதிக அளவில் சிற்றிதழ்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை தொடர்ந்து வெளிவர முடியாமல் பொருளாதரக் காரணங்களால் நின்றுபோய்விடுவதும் நடக்கிறது.
ஆனால் கல்குதிரை இதழ் 1990ஆம் ஆண்டு முதல் கிட்டதட்ட கால் நூற்றாண்டுக் காலமாகத் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கிறது. இதன் ஆசிரியர் தமிழின் முக்கியமான எழுத்தாளர் கோணங்கி. கல்குதிரையை அவர் வார, மாத, காலண்டு இதழாக அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. அப்படி வார, மாத இதழாக அறிவித்து வெளிவந்த இதழ்கள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாமல் காலத்தில் மறைந்து போயிருக்கின்றன. இவற்றுக்கு அப்பாற்பட்டு கல்குதிரை தன்னைப் பருவகாலங்களுக்கான இதழாக அடையாளப் படுத்திக்கொண்டுள்ளது.
தாஸ்தயேவ்ஸ்கி, காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ் போன்ற உலக இலக்கிய ஆளுமைகளுக்குத் தனிச் சிறப்பிதழை கோணங்கி கொண்டுவந்துள்ளார். இதில் மார்க்கேஸைப் பெருவாரியான தமிழ் வாசகப் பரப்பிற்குப் அறிமுகப்படுத்தியது கல்குதிரை சிறப்பிதழ்தான். உலகச் சிறுகதை சிறப்பிதழைக் கொண்டுவந்ததன் மூலம் தமிழ்ச் சிறுகதையின் தொனியில் கல்குதிரை சலனத்தை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டுக்கான இளவேனிற்கால இதழும், முதுவேனிற்கால இதழும் வெளிவந்துள்ளது. இன்றைக்குள்ள இளம் படைப்பாளிகளை ஒருசேர வாசிக்கும் அனுபவத்தை இந்தக் கல்குதிரை இதழ்கள் வழங்குகின்றன. கல்குதிரையின் சமீபத்தில் இதழ்கள் அனைத்தும் முழுக்க முழுக்க இளம் படைப்பாளிகளுக்கான ஆடுகளமாகத் தன்னை விரித்துக்கொண்டுள்ளன. இசை, சாம்ராஜ், வெய்யில், தூரண்குணா, கருத்தடையான், அகச்சேரன், ந. பெரியசாமி, நேசமித்ரன், பா. ராஜா, நக்கீரன், ரியாஸ் குரானா போன்ற இளம் படைப்பாளிகள் இந்த இதழ்களுக்குப் பங்களித்திருக்கிறார்கள். தேவதச்சன், சேரன், லஷ்மி மணிவண்ணன், யவனிகா ஸ்ரீராம், ராணிதிலக், கண்டராதித்தன், கூத்தலிங்கம், செங்கதிர், மோகனரங்கன், ஸ்ரீநேசன், கைலாஷ் சிவன், சா. தேவதாஸ் போன்ற படைப்பாளிகளும் இந்த இதழ்களுக்கு வாசிப்புச் சுவை சேர்த்துள்ளார்கள்.
இவை மட்டுமல்லாது போர்ஹெஸ், ரேமண்ட் கார்வர், ஆண்டன்செகவ் போன்ற உலகின் முக்கியமான இலக்கியக் கர்த்தாக்கள் பலரின் படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் இந்த இதழுக்குக் கூடுதல் வலுச்சேர்த்துள்ளன. இந்த இதழில் இடம்பெற்றுள்ள சமகாலக் கவிதைகளும், சிறுகதைகளும் தற்காலத் தமிழ்ப் படைப்புலகம் குறித்த ஆவணமாக கல்குதிரையை மாற்றுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT