Last Updated : 13 Oct, 2015 10:36 AM

 

Published : 13 Oct 2015 10:36 AM
Last Updated : 13 Oct 2015 10:36 AM

மனுசங்க.. 24: பசி விழிக்கும் நேரம்!

மறுநாள் காலையில், இன்னிக்கு அவம் மூஞ்சியிலே முழிக்கப்படாது என்று வேறபக்கம் பார்த்துதான் நடந்து போனார் பட்டர்.

எதிரே வந்தவன் ஆனந்த நடனம்தான் ஆடவில்லை. அவ்வளவு சந்தோஷம் பொங்க நின்றான்.

இன்னிக்கு என்ன சொல்லப் போறானே தெரியலையே என்று பதற்றம் இவருக்கு.

ஜெயிச்சுட்டேன்; பயலை ஜெயிச்சுட் டேன் என்று அவயமிட்டான், அந்தப் பைத்தியக்காரன்.

‘‘நம்ப மாட்டீர்னு தெரியும்; அத்தாட்சி யோட வந்திருக்கோம்…’’ என்று உள்ளங் கையைத் திறந்தான்.

‘‘பகவானே இது என்ன லீலை!’’ குடல் பதறியது பட்டருக்கு.

வைரம் என்றால் இதுதான். உலகத் திலேயே இதுக்கு இணை கிடையாது. மின்னிச் சிரித்தது அந்த வைர மூக்குத்தி.

‘‘இதை வைத்து, அந்தப் பகவானா ஒன்னோடு விளையாடினார்? அடேய், யாருடா நீ? எந்த ஊரு?’’

சிதறி விழுந்து முத்துக்களைப் போல் அவன் உரத்துச் சிரித்தான்.

‘‘என் பெயரும் அவன் பெயர்தான்’’ என்றான் கோயிலைக் காட்டி.

இவன் இட்டுக்கொண்டிருக்கும் எல் லாப் பெயர்களும் அவன் பெயரே. எல் லாப் பொருட்களும் அவன் பொருளே!

வேறு யாரால் முடியும் பிராட்டியின் மூக்குத்தியைத் தொட?

பட்டர் சோர்ந்து உட்கார்ந்துவிட்டார் அந்தத் தரையிலேயே.

ஏழுமலையானைப் பற்றியுள்ள ஆயிரத்தெட்டுக் கதைகளில் அதுவும் ஒன்று.

அந்த பந்தசேர்வைக் கூட்டத்தோடு வந்த ஒரு கிழவனார் சொன்ன கதை அது.

தாத்தா கேள்விப்பட்ட இன்னொன்று கதை இல்லை; உண்மை.

‘‘அந்த அவனுடைய ஏழு மலைகளை யும் ஏறி நடந்தேதான் போகணும். அதில் ஏழாவது மலையை மட்டும் மிதித்து நடந்து கடக்கக் கூடாது; அதில் தவழ்ந்துதான் போகணும்’’ என்று அந்தக் கிழவர் கதை சொன்னபோது இடைமறித்த ஒருவன் சொன்னான்: ‘‘எப்படி நடந்து போக முடியும்; ஆறு மலைகளின் மீது நடந்தே போன கால்களால் அதன் பிறகு தவழ்ந்துதானே போக முடியும்?’’

இப்போது தாத்தா தொடர்ந்தார்: ‘‘மக்கள் அப்படித் தவழ்ந்து தவழ்ந்து அந்த மலையே நுண்ணமாகிவிட்டதாம்’’ என்றார்.

அந்த மாக்கல் மலையின் மேல் நெடுஞ் சான்கிடையாகக் கிடந்து, புரண்டுப் புரண்டு இடுப்பை ஆற்றிக்கொள்கிறதும்; கால்களை ஆற்றிக்கொள்கிறதும்; மெல்லிசாக சீனுவாச ஜயம் சொல்லு கிறதுமாக தொண்டையையும் ஆற்றிக்கொள்கிறார்கள்.

வயிற்றினுள் ஒடுங்கிக் கிடந்த பசி விழிக்கும் நேரம் அது.

தகப்பன்களின் தலைமுடிக் கற்றை யைப் பற்றிக்கொண்டு பிடறியில் உட் கார்ந்து தொங்கப்போட்டிருக்கும் குழந்தைகளின் கால்களைப் பிடித்துக் கொள்வதால் அவர்கள் ‘மூன்றுகால்’ களால் தவழ்ந்துகொண்டு வருகிறார்கள்.

கிழக்குத் திசை அடிவானத்தில் விடிவெள்ளி தலைகாட்டுகிறது. இது அமுது படைக்கும் வேளை. யாரோ ஒரு வயதான பாட்டியின் பெண் குரல் இப்படிக் கேட்கிறது:

‘குழந்தைகளே, குடிக்க கூழ்கொண்டு வந்திருக்கோம்’ என்று சொல்லிக் குனிந்து இளஞ்சூடான கேப்பைக் கூழ் நிறைந்த தொன்னையை முகத்தருகே நீட்டுகிறாள் பாட்டி.

தவழ்ந்தவர்கள் உட்காருகிறார்கள். எங்கே எங்கே என்று கைகளை நீட்டு கிறார்கள்.

குழந்தைகளுக்கே முதலில். அவர் கள் குழந்தைகளே என்று குனிந்து அழைத்தது சரிதான்.

நீட்டிய கைகளில் எல்லாம் ராகி என்ற கேப்பைக் கூழ் நிறைந்த தொன்னை கள். கடித்துக்கொள்ள உளுந்து மெதுவடைகள்.

உலக நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்க்க ஒவ்வொருத்தனுக்கும் ஒரு காரணம். அதில் உலக நாடுகளின் ருசியான உணவுகளை ருசித்து அனுபவிக்க என்றே கிளம்பிய ஒருவன் எழுதி வைத்திருக்கிறான்:

‘‘நாக்குப் பழக்கமும் ருசியைத் தீன்மானிக்கலாம். நேரம், காலம், பசி இவையும் ருசியைத் தீர்மானிக்கலாம். இவையெல்லாம் போக எந்த நேரமானாலும் சரி; இங்கே தரும் கூழை எடுத்து நுனிநாக்கில் இளம் சூட்டுடன் வைத்ததும் அதன் ருசி உடம்பில் பரவி தெம்பு தருகிறது.’’

இந்தக் கூழுக்கு அனுசரணையாக இளம்சூட்டோடு தரும் உளுந்தம் வடையும் ருசியோ ருசி.

இந்த ருசிகளுக்கு முக்கிய அடிப்படை அன்போடும் பிரியத்தோடும் தருவதும் பெற்றுக்கொள்கிற மனங்களின் பக்தி பரவசமும்தான்.

உலகம் சுற்றிவந்த அந்த ருசியாளன், விடிந்து வெளிச்சம் பரவிய பின்னர் அந்த ஈந்து உவக்கும் பெரியோர்களைப் பார்த்துப் பேசுகிறான்:

‘‘இந்தக் கோயில் செய்யும் ஏற்பாடுகளா இவை?’’

‘‘இல்லை பகவானே! நாங்கள் இங்கே வசிக்கும் பூர்வகுடிமக்கள். சம்சாரித் தொழில் எங்களுக்கு. எங்கள் பூட்டன் காலத்தில் இருந்தே இதை ஒரு கைங்கரியமாகச் செய்துவருகிறோம்.

மலை மேல் ஏறவும் இறங்கவும் எத்தனையோ பாதைகள். மழை, பனி என்று பார்ப்பதில்லை. அவை எங்கள் உடன் பிறந்தவை.

எங்களுடைய காடுகள் கழனிகள் பூராவும் ராகியும் உளுந்துமே அதிகம் பயிர் பண்ணுகிறோம்.’’

‘‘முதன்முதலில் உங்கள் குடும்பத் தில் யாருக்குத் தோன்றியது இந்த யோசனை?’’

‘‘எங்கள் பூட்டி மங்கத்தாயாருக்குத் தான். உங்க பூட்டனார், மங்கத்தாயாரின் கணவர் பெயர்கள் தெரியுமா?’’

பதில் இப்படி வந்தது: ‘‘சீனிவாசக நாயுண்டுகாரு!’’

அந்தப் புத்தகத்தில் நான் இதை படித்தவுடன்; ‘அடடா! ஊரூருக்குத்தான் சீனிநாயக்கர்கள் இருப்பார்கள் என்று நினைத்தால். உலகம் பூராவும் அல்லவா சீனி நாயக்கர்களாக இருக்கிறார்கள்!’

தாத்தா இப்போது எழுந்து கைகளைத் தொங்காரமாகப் பின்னால் கட்டிக்கொண்டு வீட்டுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்தார். அப்படி அவரை எழுப்பி நடக்க வைத்தது அந்த பந்த சேர்வையும் அதனோடு வந்த இசைக் குழுவும்தான்.

தாத்தா பல ஊர்களுக்குப் போயிருக்கிறார். ஊர் தவறாமல் பஜனை மடங்கள் இருந்தன. பரம்பரையாகவே கேள்வி ஞானத்துடன் கையைத் தட்டிக்கொண்டும் ஜால்ராவுடனும் கஞ்சிரா, மத்தளம் போன்ற தாள வாத்திய கருவிகளை முழக்கி சுருதி ஒலிக்க கூட்டுப் பாடல்கள் பாடக் கேட்டிருக்கிறார்.

நம்ம ஊருக்கும் ஒரு பஜைனைக் கோயில் ஒன்றைக் கட்டவேணும். மேளதாளத்துடன் சப்பரம் எழுந் தருளச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்.

அதுவரையில் வீட்டுக்குள்ளேயே நடந்துகொண்டிருந்த ‘துரசாபுரம் தாத்தா’ தெருவில் இறங்கி நடந்தார்.

- மனுசங்க வருவாங்க…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x