Published : 21 Nov 2020 10:04 AM
Last Updated : 21 Nov 2020 10:04 AM
ஆதுர சாலை
அ.உமர் பாரூக்
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
கே.கே.நகர் மேற்கு, சென்னை-600078.
தொடர்புக்கு: 87545 07070
விலை: ரூ.400
சரித்திரக் கதை, பயண நூல், அறிவியல் புனைவு என்பனபோல ‘ஆதுர சாலை’ ஒரு மருத்துவ நாவல். மக்களுக்கான மருத்துவ சேவையைத் தொற்றிய வணிகமய நோய் பற்றிப் பேசுகிற, பாரம்பரிய மருத்துவ அறிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டதன் அரசியலைக் காட்டுகிற, நோயும் மரணமும் சார்ந்த மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திப் பின்னப்பட்டிருக்கும் ஊழல் வலையமைப்புக்கு எதிராக ஒலிக்கிற இலக்கியக் குரல். ஒலிக்கச் செய்திருப்பவர் எழுத்தாளரும் அக்குபங்சர் சிகிச்சையாளருமான அ.உமர் பாரூக்.
மருத்துவ ஆய்வுக்கூடத் தொழில்நுட்பவியலாளரான இளைஞர் ஒருவரின் தன் கதைகூறல் நடையில் நாவல் எழுதப்பட்டுள்ளது. ‘தம்பி’ என்று அவரை அழைக்கிறவர் மருத்துவர் அன்பு. இருவரின் உரையாடல்கள் வழியே நிகழ்த்தப்படும் மருத்துவ அறிவியல் தத்துவ விசாரமே நாவலின் நாயகம். கதையோட்டம் தேனி, கம்பம் வட்டாரங்களைச் சுற்றினாலும் கருத்தோட்டம் உலகத்துக்கே பொதுவானது.
நுண்ணிய கிருமிகளைக் காட்டும் மைக்ராஸ்கோப் மீது காதல் கொண்டவர் தம்பி. அதைக் கையாளப்போகும் உற்சாகத்தோடு ஆய்வுக்கூடத்தில் சேரும் அவருக்கு முதல் நாள் தரப்படும் வேலை என்ன தெரியுமா? ஒட்டப்பட்ட உறைகளை, சில முகவரிகளில் ஒப்படைத்துக் கையெழுத்துப் பெற்றுவருவது.
அந்த முகவரிகள் பல மருத்துவர்களுடையவை. என்ன வைக்கப்பட்டிருக்கிறது என்றே தெரியாமல் ஒவ்வொரு மருத்துவமனையாகப் போய்க் கொடுக்கிறபோது, “இப்படி கவர் கொடுத்துவிட வேண்டாம் என்று ஏற்கெனவே சொல்லிட்டேனே, நீங்க புதுசா வந்திருக்கீங்களா” என்று கேட்கிறார் அன்பு. ரத்தப் பரிசோதனை தொடங்கி, கருவுறுதல் சிகிச்சை வரையில் மருத்துவ வளாகங்களின் நுண்ணிய ஊழல் கிருமிகளைக் காட்டுகிறது நாவல்.
அன்பு, தம்பி இருவரின் நேர்மையே இருவரின் தோழமைக்கு அடிப்படையாகிறது. அன்புவின் மருத்துவமனையிலேயே, ஊழியத்தையும் ஊதியத்தையும் தாண்டி நிறைய உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்புடன் இணைகிறார் தம்பி. அப்படித் தெரிந்துகொள்கிற உண்மைகளில் ஒன்று, அலோபதி மருத்துவரான அன்பு, நோயர்களுக்குக் கொடுப்பது சித்த மருந்துகளே என்பது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த தன் அண்ணனைத் தான் பணியாற்றிய அரசு மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் தயக்கத்தோடு சொன்ன யோசனைப்படி, ஒரு கிராமத்துச் சித்த மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர் மரபார்ந்த சிகிச்சையால் மீள்கிறார். அந்த நேரடி அனுபவத்திலிருந்து தானும் அலோபதியைத் தாண்டிய அறிவியல் தத்துவத் தேடலில் இறங்கியதை வெளிப்படுத்துகிறார் அன்பு.
சிறுநீரில் எண்ணெய் கலந்து பார்க்கிறபோது ஏற்படும் தோற்றங்களின் அடிப்படையில் நோயைக் கண்டறியும் ‘நீர்க்குறி, நெய்க்குறி’ முறைகள் இருந்திருக்கின்றன. தங்களின் பெயர்களைக்கூடப் பதிவுசெய்யாத அன்றைய சித்தர்கள் கையாண்ட ஆய்வு முறை குறித்த செய்தி இது. பாரம்பரிய மருத்துவங்களின் பரிணாமமாக அல்லாமல் பகையாக நவீன மருத்துவம் நிறுவப்பட்டுவிட்டது ஒரு சோகம்.
சித்தர்கள் அன்று சொன்னதெல்லாம் இன்று முற்றிலுமாக ஏற்கத்தக்கதா? இல்லை, அவற்றில் கொஞ்சம் உண்மை இருக்கலாம் என்கிறார் அன்பு. அவற்றில் அறிவியல்பூர்வமானவற்றையும் அப்படி இல்லாதவற்றையும் கண்டறியும் பொறுப்பு அன்புகளின் தம்பிகளுக்கு இருக்கிறது.
உடற்கூறு அறிவியலையும் மருத்துவ அரசியலையும் பேசுகிற ‘ஆதுர சாலை’ இலக்கியப் புனைவின் பரவசத்தைத் தருகிறதா? உயிரியக்கம் பற்றிய இயற்கைப் புரிதலின் பரவசத்தைத் தருகிறது. மருத்துவ அறிவியல் தளத்தில் கடும் விமர்சனத்துக்கு இந்நாவல் உள்ளாகக் கூடும். அந்த விமர்சனம் திறந்த மனதோடு ஆரோக்கியமான விவாதத்துக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும்!
- அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: kumaresanasak@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT