Published : 31 May 2014 11:33 AM
Last Updated : 31 May 2014 11:33 AM

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

நான் எழுகிறேன்

கசப்பு மண்டிய, திருகலான உங்கள் பொய்களால்

வரலாற்றில் என்னை நீங்கள் வீழ்த்திவிடலாம்.

அந்த அழுக்கினுள் என்னை நீங்கள் புதைத்துவிடலாம்

ஆனால், தூசியைப் போல நான் மேலெழுவேன்

என்னுடைய துணிச்சல் உங்களை வெறுப்படையச் செய்கிறதா?

ஏன் எப்போதும் இருட்டையே அணிந்திருக்கிறீர்கள்?

என் வரவேற்பறையில் எண்ணெய்க் கிணறுகள்

ஊற்றெடுப்பதுபோல நான் நடக்கிறேன்

நிலவுகளைப் போலவும் சூரியன்களைப் போலவும்

அலைகளின் நிச்சயத்தன்மையுடன்

நம்பிக்கைகள் எழுச்சி பெறுவதைப் போல

நான் எழுகிறேன்

நான் நொறுங்கிப்போவதைக் காண விரும்பினீர்களா?

தலை குனிந்து, கண்களைத் தாழ்த்தி இருப்பதைக் காண விரும்பினீர்களா?

கண்ணீர்த் துளிகள் போலக் கீழே சரியும் தோள்களுடன்

ஆன்மாவின் அலறல்களால் பலவீனமான நிலையில்

காண விரும்பினீர்களா?

என்னுடைய பெருமித உணர்வு உங்களைப் புண்படுத்துகிறதா?

என்னிடம் தங்கச் சுரங்கங்கள் இருப்பதைப் போல

நான் சிரிப்பது

உங்களால் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறதா?

உங்கள் சொற்களால் என்னைச் சுடலாம்

உங்கள் கண்களால் என்னை வெட்டலாம்

உங்கள் வெறுப்பால் என்னைக் கொல்லலாம்

ஆனால் காற்றைப் போல நான் எழுந்து வருவேன்

என்னுடைய வசீகரம் உங்களை வெறுப்படையச் செய்கிறதா?

என் தொடைகளின் நடுவில் வைரங்கள் பொதிந்திருப்பதைப் போல

நான் நடனமாடுவது

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா?

வரலாற்றின் வெட்கக்கேடான குடிசைகளிலிருந்து

நான் எழுகிறேன்

வலியில் வேர் கொண்ட கடந்த காலத்திலிருந்து

நான் எழுகிறேன்

நான் ஒரு கருங்கடல்

விரிந்து பரந்த கடல்

அலையோடு அமிழ்ந்து எழுகிறேன்

அச்சமும் பயங்கரமும் மிகுந்த

இரவுகளைத் தாண்டி நான் எழுகிறேன்

தெளிவான புலர்காலைப் பொழுதில்

நான் எழுகிறேன்

என் முன்னோர்கள் கொடுத்த பரிசுகளைக் கொண்டுவருகிறேன்

நான் அடிமையின் கனவும் நம்பிக்கையுமாக இருக்கிறேன்

நான் எழுகிறேன்

நான் எழுகிறேன்

நான் எழுகிறேன்

தமிழில்: அரவிந்தன்



பெண் வேலை

எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள்

பராமரிக்க

துணிகள் இருக்கின்றன தைக்க

தரை இருக்கிறது துடைக்க

உணவுக்காகக் கடைக்குச் செல்ல வேண்டும்

அப்புறம் சிக்கன் இருக்கிறது வறுக்க

குழந்தை இருக்கிறது ஈரம் துடைக்க

துணை கிடைத்துவிட்டது உணவளிக்க வேண்டும்

தோட்டத்தில் குப்பைகளை அகற்ற வேண்டும்

இஸ்திரி போடுவதற்குச் சட்டைகள் உள்ளன

செல்லங்களுக்கு உடையணிவிக்க வேண்டும்

உணவு டப்பாவைத் திறப்பதற்கும்

இந்தக் குடிசையைச் சுத்தம் செய்யவும்

நோயாளிகளைப் பார்த்துக்கொள்ளவும்

பஞ்சுகளைக் குப்பையில் போடவும் வேண்டும்

என் மேல் மிளிர்வாய், பிரகாச சூரியனே

என் மேல் பொழிவாய், மழையே

என் மேல் விழுவாய் மென்மையாய், பனித்துளியே

என் புருவங்களை மீண்டும் குளிர்விப்பாய்.

புயலே, ஊதித் தள்ளிவிடு என்னை இங்கிருந்து

உன் மூர்க்கமான காற்றினால்,

மிதக்கவிடு என்னை வானத்தில்

மீண்டும் எனக்கு ஓய்வு கிடைக்கும் வரை.

மிருதுவாய்ப் பொழி, பனித்திரளே

என்னை மூடிடு உன் வெண்

குளிர் முத்தங்களால்..

இன்றிரவு என்னை ஓய்வெடுக்க விடு.

சூரியன், மழை, வளைந்த வான்,

மலை, சமுத்திரங்கள், இலை மற்றும் கல்

மினுங்கும் நட்சத்திரம், ஒளிரும் நிலவு

உங்களை மட்டுமே நான்

என்னுடைய

சொந்தம் என்று உரிமை கொள்ள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x