Published : 14 Nov 2020 03:13 AM
Last Updated : 14 Nov 2020 03:13 AM
வையாபுரிப்பிள்ளை ஆசிரியராகப் பங்கெடுத்து வெளிக்கொண்டுவந்த ‘தமிழ்ப் பேரகராதி’ (Tamil Lexicon) எக்காலத்துக்குமான ஒரு பெரும் சாதனை என்றால், தற்காலத் தமிழுக்கான ‘க்ரியா’ அகராதி நாம் வாழும் காலத்தில் ஒரு முக்கியமான சாதனை. அகராதிக்கான இலக்கணங்களை முழுமையாகக் கொண்டு, கச்சிதமான எழுத்துருக்களோடும் வடிவத்தோடும் அமைந்த ‘க்ரியாவின்’ தற்காலத் தமிழ் அகராதி இப்போது இன்னொரு மைல்கல்லை எட்டியிருக்கிறது; அது மேலும் விரிவாக்கப்பட்டு மூன்றாம் பதிப்பாக வெளிவந்திருக்கிறது.
இன்றைய தலைமுறையினரையும் நம்முடைய மொழி முழுமையாகச் சென்றடையும் வகையிலான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு 1992-ல் வெளியானது. பின்னர் 16 ஆண்டுகள் கழித்து, இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கி மேம்படுத்தப்பட்ட பதிப்பு 2008-ல் வெளிவந்தது. அடுத்து 12 ஆண்டுகளுக்குப் பின்னர், இடைப்பட்ட காலத்தில் தமிழில் உருவான சொற்களையும் மாற்றங்களையும் உள்ளடக்கியதாக இப்போது மூன்றாவது பதிப்பு வெளியாகியிருக்கிறது.
சிறப்பு என்ன?
இந்திய மொழிகள் ஒன்றில் சமகாலத்துக்கான அகராதிகளில் இப்படி மூன்றாவது முறையாகப் பதிப்பக்கப்பட்டு வெளியாகியிருக்கும் அகராதி அனேகமாக இதுதான். மேலும், இதன் ஆசிரியரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இது ஒரு சாதனை. மூன்று முறை இப்படி அகராதியை ஒருவர் தொடர்ந்து விரிவாக்கித் திருத்திக் கொண்டுவருவது ஒரு முக்கியமான செயல்பாடு ஆகும். இதை ‘க்ரியா பதிப்பகம்’ அல்லது எஸ்.ராமகிருஷ்ணனின் குறிப்பிடத்தக்கச் செயல்பாடாகப் பார்ப்பதைக் காட்டிலும் சமகாலத் தமிழில் நிகழ்ந்திருக்கும் முக்கியமான செயல்பாடாகவும் விரித்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.
ஒரு கோடிக்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது இந்த அகராதி. சுமார் 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களோடு வெளியாகியிருப்பது இப்போதைய பதிப்பின் முக்கியமான அம்சங்கள். திருநர் வழக்குச் சொற்களும், தொடர்புச் சொற்களும் இந்தப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கிட்டத்தட்ட ஒரே பொருள் தொனிக்கும் வெவ்வேறு சொற்களின் தனித்துவமான குணாம்சம் என்ன என்பதை இந்தத் தொடர்புச் சொற்கள் பகுதி கொண்டிருக்கிறது.
கரோனாவுடனான போராட்டம்
இப்போது 76 வயதாகும் எஸ்.ராமகிருஷ்ணன் இந்த அகராதியை எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று கடுமையாகப் பணியாற்றிவந்தார். சில மாதங்களாகவே சீரான உடல்நலத்தில் இல்லாத அவர் 20 நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்றுக்கு ஆளானார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகி செயற்கை சுவாசத்தின் உதவியோடு சுவாசிக்கும் நிலையிலும், தன்னுடைய பணிகளை மருத்துவமனையில் மேற்கொண்டுவந்தார். இத்தகு சூழலில், நவ.13 அன்று ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யின் மூன்றாவது பதிப்பை மருத்துவமனையில் இருந்தபடியே அவர் வெளியிட்டார்.
“தாய்மொழிக்கு அகராதி கட்டாயம் தேவை என்பது பல சமூகங்களிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழுக்கு அகராதி தேவையில்லை என்றுதான் பொதுவாக இங்கே எல்லோரும் நினைக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், அகராதி என்பதே ஆங்கிலம் தெரிந்துகொள்வதற்கான ஒரு கருவி என்று நினைக்கிறோம். இந்தப் பின்னணியில் பார்த்தால், ஓர் ஆங்கிலேயர் ஆங்கில அகராதி வாங்குவதற்கான தேவையே இல்லை, இல்லையா? ஆனால், ஒவ்வொரு ஆங்கிலேயர் வீட்டிலேயும் அகராதி இருக்கும்” என்பார் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். ஏனெனில், அவர் சொல்வதைப் போல அகராதி என்பது வெறுமனே மொழிக் கருவி மட்டுமல்ல; அது ஜனநாயகத்துக்கான சாவியும்கூட. மொழித் தெளிவைக் கொடுப்பதோடு அறிவையும் கொடுப்பதாக அகராதி இருக்கிறது. அந்த வகையில் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய மொழிக் கருவி என்று ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யைச் சொல்லலாம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கிய அகராதிப் பணியைத் தன்னுடைய 76-வது வயதிலும் தளராது மேம்படுத்திக்கொண்டுவந்திருக்கும் ராமகிருஷ்ணனின் பணி போற்றுதலுக்குரியது. சீக்கிரம் நலம் பெற்று தன் தமிழ்ப் பணியை அவர் தொடரட்டும்!
- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in
-----------------------------------------------
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
க்ரியா வெளியீடு
திருவான்மியூர், சென்னை-41.
விலை: ரூ.895
தொடர்புக்கு: 72999 05950
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT