Last Updated : 25 Oct, 2015 12:12 PM

 

Published : 25 Oct 2015 12:12 PM
Last Updated : 25 Oct 2015 12:12 PM

மணல்மீது சில சிற்றலைகள்

‘மணல்’ குறுநாவல், அதன் நாயகியான சரோஜினி வீடு திரும்புவதில் தொடங்கி கதை அவள் வீட்டை விட்டு வெளியேறுவதில் முடிகிறது. இடையில் சில மாதங்கள். சில சம்பவங்கள்.

மணலை வைத்துப் பெரிய கட்டுமானங்களை எழுப்பலாம். நூற்றாண்டுகள் கடந்து நிற்கும் கட்டிடங்களையும் கோபுரங்களையும் எழுப்பலாம். ஆனால் வெறும் மணலை வைத்து அல்ல. அத்துடன் தண்ணீர், சிமிண்ட், கற்கள் எனப் பல அம்சங்கள் சேர வேண்டும். இவை எதுவுமே இல்லாம மணல் எந்தக் கட்டுமானத்தையும் உருவாக்காது. சரோஜினியின் குடும்பம் வெறும் மணலாகத்தான் இருக்கிறது.

சென்னையில் எழுபதுகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு பிராமணக் குடும்பம். செலவுக்குக் கையைக் கடிக்கும் பொருளாதார நிலை. நான்கு பெண்கள், இரண்டு பையன்கள். இரண்டு பெண்களுக்குக் கல்யாணமாகிவிட்டது. பெரியவனுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் வாழ்க்கை சாவி கொடுக்கப்பட்ட கடிகாரம் போல ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருக்கிறது. அம்மாவின் சமையலறைக் கடமைகளுக்கு ஓய்வே இல்லை. காலை, மதியம், மாலை, இரவு என்று சாப்பாட்டுக் கடைகளுக்கு நடுவில் வேறு பல வேலைகளும் உண்டு. புதுப்புதுச் சிக்கல்களுக்கும் குறைவில்லை.

அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் ஏன் அன்னியர்களைப் போல இருக்கிறார்கள்? ஏன் அவர்களுக்குள் பேச்சுவார்த்தையே அதிகம் இல்லை? அவர்கள் ஏன் சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வெளியில் இருப்பதையே விரும்புகிறார்கள்? வீட்டில் இருக்கும் பெண்களைப் பற்றி இவர்களுக்கு என்ன அபிப்பிராயம் இருக்கிறது? பெரியவன் ஏன் எப்போதும் தன் சைக்கிளைத் தாறுமாறாக நிறுத்துகிறான்? ஏன் தன் காலணிகளை எப்போதும் விசிறி அடிக்கிறான்? அலுவலகத்திலிருந்து வந்ததும் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு அவசர அவசரமாக எங்கே ஓடுகிறான்? இரண்டாம் பையன் எப்படிக் குழந்தைகளிடம் விளையாடுகிறான்? அவனுக்கும் பிறரிடம் பேச எதுவுமே இல்லாமல்போவது ஏன்?

தங்கை படிப்பதற்காக மேசையை எடுத்துப் போடுவது, தங்கையின் குழந்தைகளுடன் விளையாடுவது என்பன போன்ற மிகச் சில தருணங்களிலேயே ஆண்கள் குடும்பத்திற்குள் இயல்பாக இருக்கிறார்கள். மற்ற நேரங்களில் இறுக்கமான அன்னியர்களாகவே புழங்குகிறார்கள். இறுக்கங்களுடம் அவஸ்தையுடனும் ஆண்கள் வந்து செல்லும் அந்த வீட்டில் பெண்கள் இயல்பாக இருக்கிறார்கள், பேச்சு, சிரிப்பு, அலுப்பு, வருத்தம் என்று இயல்பு வாழ்க்கையின் கூறுகள் அவர்களிடம் காணக் கிடைக்கின்றன. ஆனால் மணலைக் கட்டுமானமாக்க இந்த ஈரம் மட்டும் போதாது. சிமின்டும் ஜல்லியும் தேவை. ஆண்கள் உறுதியான ஜல்லியை உருவாக்கவில்லை. காற்றில் பறக்கும் மணல் துகள்கள் போல அல்லாடுகிறார்கள்.

அவர்கள் ஏன் அல்லாடுகிறார்கள்?

அசோகமித்திரன் எந்த பதிலையும் தருவதில்லை. அவர் தருவது சித்திரங்களை மட்டுமே. இறுக்கமும் அவஸ்தையும் பதற்றமும் நிரம்பிய வாழ்க்கைச் சித்திரங்கள். இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்தப் படைப்பு பதில் சொல்லாது. மணலைத் தோண்டிப் பார்த்து நாமே தெரிந்துகொள்ள வேண்டியதுதான். நாம் தெரிந்துகொண்டதுதான் உண்மையா என்று தெரிந்துகொள்ளவும் தரவுகள் இல்லை. எல்லாம் மணலின் சலனங்கள். மணல் கோடுகள். ஈரமற்ற மணல் சித்திரங்கள்.

உணர்ச்சிகளில் தோயாமல் அவற்றைத் துல்லியமாகக் கையாளும் கலைஞர் அசோகமித்திரன். கதையின் ஒவ்வொரு சம்பவமும் இதுபோல ஏதேனும் ஒரு தருணத்தைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தருணமும் வாசகருள் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. அசோகமித்திரன் எதையும் தானாக உருவாக்குவதில்லை. அவர் யாரைப் பற்றியும் எந்த அபிப்பிராயத்தையும் முன்வைப்பதில்லை. எல்லோரையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். தன் பார்வைக்குப் படுபவற்றைச் சித்தரிக்கிறார். அந்தப் பார்வையின் தனித்துவம் அந்தச் சித்தரிப்பை நுணுக்கமான இழைகள் கொண்ட கோலமாக மாற்றுகிறது.

அன்றாட வாழ்வின் சமன்பாடுகளும், பயணங்களும் மாறும்போது அதற்கேற்ப வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். நிலம், கோவில், குடும்ப வணிகம் முதலானவை சார்ந்த வாழ்க்கை ஒரு விதமான வாழ்க்கை முறையை உருவாக்கியிருந்தது. நவீன வாழ்வு அந்த வாழ்வின் அடிப்படைகளையே மாற்றியது. இந்த மாற்றத்திற்கேற்ற தகவமைப்பு வாழ்க்கை முறையில் போதிய அளவு நடைபெறாத காலகட்டத்தின் திணறலை மணலின் சித்திரங்கள் பிரதிபலிக்கின்றன.

பெண்கள்தான் ஆதாரம்

மணல் கதையைப் படிக்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. எந்தச் சூழலிலும் பெண்கள் குடும்பத்தின் ஆதாரமாக இருக்கிறார்கள். அஸ்திவாரமாகவும் சுமைதாங்கியாகவும் இருக்கிறார்கள். பொருளாதாரம் உறவு நிலைகள் மீது தாக்கம் ஏற்படுத்தலாம். ஆனால் பொருளாதாரத்தின் மீது எந்த அதிகாரமும் அற்ற பெண்கள்தாம் பொருளாதார நெருக்கடிகளையும் பொருள் சார் உலகின் இதர பிரச்சினைகளையும் தாண்டிக் குடும்பத்தைத் தாங்குகிறார்கள். இதில் அவர்கள் இழப்பது தங்கள் தனித்தன்மையை. கனவுகளை; ஆசுவாசங்களை; சந்தோஷங்களை; நிம்மதிகளை. புறச் சூழலோடு போராடுவதற்கான உரிமைகளையும் அவர்கள் இழக்கிறார்கள். ஆனால் எவ்வளவு பலவீனமானதாக ஆகிவிட்டாலும் குடும்பம் என்ற அமைப்பின் அஸ்திவாரத்தை அவர்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள்.

ஆனால் நவீன வாழ்வின் தாக்கத்திற்கு உட்பட்ட தலைமுறையால் வெளியே தெரியாத அஸ்திவாரக் கல்லாக இருந்து அடையாளமற்று மறைந்துபோக முடியாது. அதன் வியர்த்தம் அவர்களுக்குப் புரிந்துவிடுகிறது. வெறுமையின் கல்லறையில் பொருளின்மையின் அமைதியில் உறங்க அவர்கள் விரும்பவில்லை. பாதுகாப்பற்றது எனினும் வெளியை அவர்கள் நாடுகிறார்கள். அது தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் தங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் உரிமையும் வாய்ப்பையும் ஆண்களிடமிருந்து மீட்டெடுக்க அவர்கள் தயாராகி விட்டார்கள். இந்த மாற்றத்தின் அடையாளங்களும் மணல் பரப்பின்மேல் சிற்றலைகளாகச் சலனம் கொள்கின்றன.

பூங்காவிற்குச் செல்லும் சரோஜினியை எண்ணி நாம் மகிழ்ச்சி அடைய முடியாது. முன்முடிவுகளோ தீர்ப்புகளோ அற்று அவள் பயணத்தைப் பார்ப்பது மட்டுமே நமக்குச் சாத்தியம். சரோஜினி வீட்டை விட்டுச் சிறிது தூரமே வருகிறாள். ஆனால் இந்தப் பயணம் வரலாற்றில் மிகப் பெரிய பயணம். இந்தப் பயணத்தை அவசியமாக்கிய காரணிகளைப் புரிந்துகொள்ளும் தேடலைக் கதையின் முடிவிலிருந்து நாம் தொடங்கலாம்.

நூல்: மணல்
(குறுநாவல்கள்)
ஆசிரியர்: அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம்
ப.எண்.123 ஏ/பு.எண்.243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
திருவல்லிக்கேணி
சென்னை-05
தொலைபேசி: 044 28482818
விலை: ரூ.300/-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x