Last Updated : 24 Oct, 2015 08:26 AM

 

Published : 24 Oct 2015 08:26 AM
Last Updated : 24 Oct 2015 08:26 AM

புத்தக அறிமுகம்: ஜே.கே.வின் அளவீடற்ற மனம்

மதம், மொழி, இனம், தேசம் ஆகிய பேதங்களைக் கடந்த மனித வாழ்வைப் பற்றிச் சிந்தித்தவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. வாழ்வின் அடிப்படையான அம்சங்களை சிரத்தையுடன் ஆராய்ந்து உண் மையின் மொழியில் அவற்றை முன் வைத்தவர். 1982 அக்டோபர் முதல் 1983 ஜனவரி வரை டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் ‘அள வீடற்ற மனம்’ என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. நம்மைப் பற்றியும் நம்மைச் சுற்றியுள்ள உலகம் பற்றியும் நமது காலம் பற்றியும் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நூலில் உள்ளன.

நம் காலகட்டம் குழப்பம் நிறைந்தது. இந்தக் குழப்பத்தின் தன்மை என்ன! எதனால் இது உருவாகிறது என்பனவற்றை ஜே.கே.வின் உரை ஆராய்கிறது. குழப்பம் என்னும் ஒரு சொல்லை ஆழமாக ஆராய்ந்துகொண்டே சென்றால் அது நமது காலகட்டத்தின் சகல விதமான பிரச்சினைகள் குறித்தும் புரிதலை ஏற்படுத்துகிறது. உரையைப் பின்தொடர்ந்து சென்றால் இந்தக் குழப்பத்தில் நம்முடைய பங்கு என்ன என்பது தெளிவுபடுகிறது. முரண்பாடுகள், சோகம், உறவுகள், வன்முறை, ஒழுங்கின்மை, சமய உணர்வு, உளரீதியான வளர்ச்சி என எதை எடுத்துக்கொண்டாலும் ஜே.கே., அதன் பல்வேறு பரிமாணங்களையும் அலசியபடி ஆழத்துக்குச் செல்கிறார்.

ஒரே ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஆழ்ந்த அக்கறையுடன் அதை ஆராய்ந்தால் அந்த ஒரு விஷயம் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை உணர முடியும். இதை மிக இயல்பாகத் தன் உரையின் மூலம் உணர்த்திவிடுகிறார் ஜே.கே. வெவ்வேறு அம்சங்களை முன்னிட்டுச் சிந்திப்பதெல்லாம் ஒரே புரிதலை நோக்கி, மகத்தான விழிப்புணர்வை நோக்கி நம்மை இட்டுச்செல்வதை இந்த உரைகளின் மூலம் உணர முடிகிறது. பிரச்சினைகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவற்றின் ஊற்றுக்கண்கள் மனித மனத்தின் செயற்கையான விகாரங்களில்தான் இருக்கின்றன. அவற்றுக்கான தீர்வும் அங்கேயேதான் இருக்கும் என்னும் உண்மையை அநாயாசமாகக் காட்டுகிறார் ஜே.கே. ‘நெஞ்சத்தினுள் இருக்கிறது மனம்’ உரை முக்கியமானது.

எஸ்.ராஜேஸ்வரியின் மொழி பெயர்ப்பு தெளிவாக உள்ளது. ஆயினும், ஜே.கே.வின் சிந்தனைகள் வெளிப்படும் அளவுக்கு அவர் ‘குரல்’ தமிழில் கேட்கவில்லை. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளைத் தமிழில் தந்துவரும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்துவரும் நர்மதா பதிப்பகம் இந்த நூலை நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது.

அளவீடற்ற மனம்

ஜே.கிருஷ்ணமூர்த்தி, தமிழில்: எஸ் ராஜேஸ்வரி, விலை: ரூ. 225. வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரி, தி.நகர், சென்னை 17, தொலைபேசி: 2433 6313

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x