Last Updated : 25 Oct, 2020 06:50 AM

 

Published : 25 Oct 2020 06:50 AM
Last Updated : 25 Oct 2020 06:50 AM

அபூர்வக் கவிஞர் அபி

அபி கவிதைகள்

அபி

அடையாளம் பதிப்பகம்

புத்தாநத்தம், திருச்சி - 621310.

தொடர்புக்கு: 04332 273444

விலை: ரூ.220

இரண்டாயிரம் ஆண்டு தமிழ்க் கவிதை மரபில் தனித்துவமான கவிஞர்களுள் ஒருவரான அபி, தமிழ்ச் சூழலில் போதுமான அளவு கவனம் கிட்டப்படாதவராகவே இருக்கிறார். இதற்கு இலக்கிய அரசியல் பாதிக் காரணமாக இருந்தாலும் அபி கவிதைகளின் தன்மைக்கும் பாதிக் காரணம் இருக்கிறது. பிரம்மராஜன், ஜெயமோகன், தேவதேவன் உள்ளிட்ட சிலர்தான் அபியைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஜெயமோகனால் சமீபத்தில் அபிக்குச் சற்றுக் கவனம் கிடைத்துவருகிறது.

அபியின் கவிதைகளைப் பற்றி விவரிப்பதற்கு தேவதச்சனின் கவிதை வரிகளைத் துணைகொள்ளலாம்: ‘ஒரு சொட்டு/ தண்ணீரில்/ மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள்’ (பரிசு). ஒரு சொட்டு என்பது எளிமையானது; ஆனால், அதற்கு ஆயிரம் சொட்டுக்களின் அடர்த்தி என்றால் எப்படி இருக்கும். இதை அபியின் வரிகளுக்குப் பொருத்திப் பார்க்கலாம். இந்த அடர்த்தியான எளிமைதான் பூடகத்துக்கும் இருண்மைக்கும் இட்டுச்செல்கிறது. அபி மிகமிக எளிமையான சொற்களைப் பயன்படுத்தியே பூடகத்தையும் இருண்மையையும் அடைந்திருக்கிறார்.

அபியின் கவிதை உலகம் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறது? என்றெல்லாம் யோசித்துப்பார்க்கிறேன். கவிதை கணிசமாக மங்கலான உணர்வுநிலையிலும் அனுபவ நிலையிலும் இயங்குவது. ஆனாலும், அதற்குத் திட்டவட்டமான உருவங்கள், தெளிவான சொற்கள், துல்லியமான பெயர்கள் தேவை. ஆனால், உணர்வுகளும் அனுபவங்களும் நாம் நினைக்குமளவுக்குத் திட்டவட்டமான வரையறை கொண்டவை அல்ல. ஏன், பொருட்களைக் கூட நுணுகி நுணுகிச் சென்றால் அவற்றின் துல்லியமும் திட்டவட்டமும் மறைந்து அநிச்சயம் உருவாகிறது என்கிறது அறிவியல். இந்த அநிச்சயப் பிரதேசத்தில் அநேகமாக தமிழில் தனித்து இயங்கும் கவிஞர் அபி. உணர்வுகளின், அனுபவங்களின் எண்ணற்ற சாத்தியங்களுக்குப் பெயர் இருக்கிறதா? உலகில் பெயரிடப்படாத வண்ணங்களும் இருக்கின்றன அல்லவா! மானுட வசதிக்காகத் தெளிவான, திட்டவட்டமான ஒருசில அடிப்படைப் பொருள்களுக்கும் விஷயங்களுக்கும் மட்டுமே நாம் பெயர் வைத்திருக்கிறோம்.

அந்தப் பெயர்களுக்கிடையிலான உறவிலேயே நம் மொழி இயங்குகிறது. அபியின் கவிதைகள் இயங்கும் இடம் தெளிவற்ற அனுபவங்கள், நம்மால் எடுத்துக்கூற முடியாத உணர்வுநிலைகள். இருக்கும் மொழியின் எளிய வார்த்தைகளைக் கொண்டு இவற்றை அவர் கோக்கும்போது நமக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார்.

‘இருளிலிருந்து (தெளிவின்மையிலிருந்து) ஒளிக்கு (தெளிவுக்கு) கூட்டிச்செல்வாயாக’ என்கிறது பிருஹதாரண்ய உபநிடதம். ஆனால், அபியோ நம்மைத் தெளிவிலிருந்து தெளிவின்மைக்குக் கூட்டிச் செல்கிறார். தெளிவின்மை என்பது ஏதோ எதிர்மறையான விஷயம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. பிரபஞ்சத்தின், பொருட்களின், அனுபவங்களின் பேரியல்பு அது. ஒரு வசதிக்காக நாம் தெளிவின்மையில் இயங்குகிறோம். ஒரு அணு எங்கு முடிகிறது என்பதில் ஆரம்பித்து, இந்தப் பிரபஞ்சம் எங்கு முடிகிறது என்பது வரை தெளிவின்மையே நிலவுகிறது.

அனுபவத்தின் தெளிவற்ற பிராந்தியத்தில் உலவினாலும் வெளிப் பார்வைக்கு ஸ்படிகத் தெளிவு கொண்டதுபோல் இருக்கின்றன அபியின் கவிதைகள். இதற்குக் காரணம் அர்த்தச் சுமையற்ற சொற்களும் சொற்செட்டும்தான். ஒரு அனுபவத்தை எவ்வளவு குறைவான சொற்களால் படம்பிடிக்க முடியுமோ அவ்வளவு குறைவான சொற்களில் படம்பிடிக்கும்போது வரிகள் ஒரே சமயத்தில் சுமையற்றவையாகவும் அடர்த்தி மிகுந்தவையாகவும் ஆகின்றன. கூடவே, பார்வைக்கோணங்களையும் வேறு திசையில் வைத்தால் அதற்கு அபாரச் செறிவு கிடைக்கிறது. இதற்கு அபியின் மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்றான ‘குருட்டுச் சந்து’ கவிதையை எடுத்துக்காட்டலாம்.

கவிதைசொல்லி குருட்டுச் சந்து ஒன்றில் போய்த் திரும்பிவருகிறார். ஒரு வீட்டில் இசை கேட்கிறது: ‘தந்தியைப் பிரிந்து/ கூர்ந்து கூர்ந்து போய்/ ஊசிமுனைப் புள்ளியுள் இறங்கி/ நீடிப்பில் நிலைத்தது/ கமகம்’ என்கிறார் அபி. இசை என்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவத்தை இதைவிட யாராவது சிறப்பாக வார்த்தைகளால் படம்பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதே கவிதையில் குருட்டுச் சந்தில் போய்த் திரும்பிவருவதை ரத்தத்தின் போக்குடன் ஒப்பிடுகிறார்: ‘ரத்தம் எப்போதும்/ குருட்டுச் சந்தில் சுமையிறக்கித்/ திரும்ப வேண்டியதே.’ இதனால் குருட்டுச் சந்தில் போய்த் திரும்பும் சாதாரண நிகழ்வு மேலும் உயர்ந்த தளத்தை எட்டுகிறது. கவிதைசொல்லி இறுதியில் சாலையை அடைகிறார். ‘எதிரே/ அடர்த்தியாய் மினுமினுப்பாய் / ஒரு கல்யாண ஊர்வலம்,/ வானம் கவனிக்க’. இந்த வரிகளில் ‘வானம் கவனிக்க’ என்ற வரி மட்டும் இல்லாதிருந்தால் இந்தக் கவிதைக்குப் பாதி முக்கியத்துவம் குறைந்திருக்கும். இரண்டு சொற்களைக் கொண்டு விவரிக்க முடியாத அனுபவத்தை இந்தக் கவிதையில் தந்திருக்கிறார் அபி. இந்தக் கவிதையில் மொத்தம் நான்கு பரிமாணங்கள் ஒன்றுடன் ஒன்று இழைந்திருக்கின்றன. நேரே இருக்கும் குருட்டுச் சந்து ஒரு பரிமாணம், ‘கோலங்களை மிதிக்காதிருக்கக் குனிந்து/ தோரணப் பச்சை/ கடைக்கண்ணில்/ சந்தேகமாய்ப்பட நடந்து/ சாலையை அடைந்தேன்’ எனும்போது, பக்கவாட்டுப் பரிமாணம், ‘வானம் கவனிக்க’ எனும்போது உயரம் எனும் பரிமாணம், இதற்கிடையே ‘நீடிப்பில் நிலைத்தது கமகம்’ எனும்போது, காலம் எனும் பரிமாணம். இந்தப் பரிமாணங்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று இசைவாய் இழையோடியிருக்கின்றன.

அடுத்ததாக, பிரபஞ்சம் அளாவும் பார்வை ஒன்று அபியிடம் இருக்கிறது. ‘நெடுங்கால நிசப்தம்/ படீரென வெடித்துச் சிதறியது’ (நிசப்தமும் மௌனமும்) எனும்போது இது ஒரே நேரத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியதாகவும் இசையனுபவத்தைப் பற்றியதாகவும் இருக்கிறது. ‘நெடுங்காலம்’ கடுகாகிக்/ காணாமல் போயிற்று’ என்கிறார். இந்தக் கவிதை ‘பூமியில்/ ஒலிகளின் உட்பரிவு/ பால் பிடித்திருந்தது/ வெண்பச்சையாய்’ என்று முடிகிறது. வேறு எந்த மொழிக்கும் மொழிபெயர்க்க முடியாத எளிமை நிரம்பிய அழகு இந்த வரிகள்.

இதே பிரபஞ்சம் அளாவும் பார்வையை ‘வினை’ கவிதையிலும் பார்க்க முடியும். ‘அண்டம், தன்/ தையல் பிரிந்து/ அவதியுற்றது’ என்ற வரிகள் இதற்குச் சாட்சி என்றாலும், ‘இந்தப் பிரளயத்தில்/ மிதந்தவர்களைப் பற்றி ஒரு/ நிச்சயம் பிறந்தது’ என்ற வரிகளும் ‘மூழ்கிக்/ காணாமல் போனவர்கள்/ கண்டுபிடிப்பார்கள்/ என்றும் வதந்தி பிறந்தது’ என்ற வரிகளும் நம் அர்த்தப்படுத்தும் முயற்சியையும் தாண்டி எங்கோ செல்கின்றன. இந்தப் புதிர்த்தன்மையும் அபியின் தனித்துவங்களில் ஒன்று. விதையொன்றைப் பற்றிய கவிதையில் (வெளிப்பாடு) ‘மரமாய்க் கிளையாய் விழுதாய்/ அன்றி/ ‘வெறும் விதையாகவே’/ வளர்கிறது/ இன்னும் இன்னும்’ என்ற வரிகள் இந்தப் பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்துகொண்டிருப்பதை உணர்த்துவதுபோல் இருக்கின்றன.

தனித் தொகுப்புகளாக ‘மௌனத்தின் நாவுகள்’, ‘அந்தர நடை’, ‘என்ற ஒன்று’ ஆகிய தொகுப்புகளை அபி வெளியிட்டிருக்கிறார். தொகுப்புகளில் சேராத ‘மாலை’, ‘மற்றும் சில கவிதைகள்’ ஆகிய கவிதைகள் அவரது முழுத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. முழுத் தொகுப்பில் ‘மௌனத்தின் நாவுக’ளிலிருந்து சில கவிதைகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றன. ‘மாலை’ கவிதைகளும் ‘மற்றும் சில கவிதைக’ளும் அவரது கவித்துவத்தின் முக்கியமான தருணங்கள். குறிப்பாக, ‘மாலை’ வரிசையில் பல கவிதைகள் அபூர்வ அழகு கொண்டவை. ‘மாலை நேரம் சுறுசுறுப்படைகிறது / இருந்த இடத்திலேயே . / முடிவின்மையின் சேமிப்புக்கு / ஒரு புள்ளியைப் பிரித்துக் கொடுக்கிறது’ எனும் வரிகள் மாலையைப் பற்றிய விளக்க முடியாத ஒரு உணர்வை நம் மனதுக்கு ஏற்றிவிடுகின்றன. மாலையைப் பற்றியும் மாலை கவிந்திருக்கும் பொருட்கள், அனுபவங்கள் பற்றியும் தனக்கேற்பட்ட பிம்பங்களைத் தனக்கேயுரிய மொழியழகுடன் அபி விவரித்திருப்பார்.

அபியின் கவிதை உலகம் மொத்தம் 130 சொச்சம் கவிதைகளுக்குள் அடங்கிவிடும் என்றாலும் அதற்குள் தமிழின் சத்தான ஒரு பரப்பு அடங்கியிருக்கிறது. அபியை ஆங்கிலத்தில் முறையாக மொழிபெயர்க்க முடிந்தால், ‘செங்குத்துக் கவிதைகள்’ எழுதிய ரொபர்த்தோ ஹுவரோஸுக்கு இணையான ஒரு கவிஞராக மதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், அபியின் அழகு மொழிபெயர்ப்புக்குள் சிக்குமா என்பதுதான் கேள்வி. அபியின் கவிதைகள் உலக அளவுக்குச் செல்வதற்கு முன் உள்ளூரில் பலரிடமும் செல்ல வேண்டும் என்பதுதான் முக்கியம். அவரது கவிதைகளைப் படிக்கவில்லையென்றால் இழப்பு நமக்குத்தான்!

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x