Published : 24 Oct 2020 06:49 AM
Last Updated : 24 Oct 2020 06:49 AM
மீமொழி
குட்டி ரேவதி
எழுத்து பிரசுரம் வெளியீடு
அண்ணா நகர்,
சென்னை – 40.
தொடர்புக்கு:
98400 65000
விலை: ரூ.135
நம் காலத்தின் முக்கியமான தமிழ்ப் பெண் கவிஞர்களுள் ஒருவர் குட்டி ரேவதி. இவரது கவிதைகள் நவீனக் கவிதையின் எல்லையை விரிவாக்கின; பேசாப் பொருளைப் பேசத் துணிந்தன. அதனால், இவரது கவிதைகள் பொதுவெளியில் பெரிதும் விவாதிக்கப்பட்டன. கவிதைகளைத் தொடர்ந்து, ‘நிறைய அறைகள் உள்ள வீடு’ (2013), ‘விரல்கள்’ (2018) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்தார். ‘அழியாச் சொல்’ (2020) நாவலும் சமீபத்தில் வெளியானது. ‘மீமொழி’ (2020) இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு.
சிற்றிதழ், பதிப்பு, எழுத்து, சினிமா, பாரம்பரிய மருத்துவம், சமூகச் செயல்பாடுகள் எனத் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் படைப்பாளி குட்டி ரேவதி. கவிதையைப் போன்று சிறுகதையிலும் பெண்களுக்கென்ற தனி உடல்மொழியை உருவாக்க முயல்கின்றன இவரது புனைவுகள். கூடவே, மொழியுடன் இவர் நிகழ்த்தும் உரையாடல்களாக இவரது புனைவுகள் இருக்கின்றன.
இந்தத் தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ‘முழுமதி’, ‘கந்தகப் பூ’, ‘கண்கள்’ ஆகிய மூன்று கதைகளையும் சங்க அகமரபின் தொடர்ச்சியாக வாசிக்கலாம். குட்டி ரேவதிக்கு மரபிலக்கியத்தின் மீதுள்ள ஈடுபாடுதான் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. திருமணத்துக்கு முன்பே உடலிணைதல் ஒழுக்க மீறலாகக் கருதப்படாத காலம் அது. மணச் சடங்குகள் கட்டாயமாக்கப்படாத சூழல் அப்போதிருந்தது. அந்த அகத்திணை மரபின் வழித்தோன்றல்களாக இந்தக் கதைகளின் பெண்கள் இருக்கின்றனர். காமத்தின் மீது கட்டப்பட்டுள்ள தொன்மதிப்பீடுகளை இவர்கள் சிதைக்க முயல்கின்றனர். காமத்தின் நெருப்பு தீண்டிய பெண்ணுடல் வெளிப்படுத்தும் மொழியைக் கதைகளில் பிடிக்கும் முயற்சியாகவும் இந்தக் கதைகளை வாசிக்கலாம். ஔவையார், அள்ளூர் நன்முல்லையார் உள்ளிட்ட சங்கப் பெண் புலவர்கள் வெளிப்படுத்திய உணர்வெழுச்சியை உள்வாங்கிக் கொண்டவர்கள் இந்தக் கதைகளின் பெண்கள்.
கொடிச்சி, ஆய்ச்சி, உழத்தி, நுளைச்சி, மறத்தி போன்ற சங்ககாலப் பெண்களின் நவீனக் குரல்களை குட்டி ரேவதியின் கதைகள் எதிரொலிக்கின்றன. தொடர்ந்து இந்த வட்டத்துக்குள்தான் பெரும்பான்மைக் கதைகள் சுற்றிவருகின்றன. தொன்மத்தின் மீது நவீன மதிப்பீடுகளைச் செலுத்தி, மறுவாசிப்புக்கு உட்படுத்தும் பணியையும் இவரது கதைகள் செய்கின்றன.
பெண்கள் மீது சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் மூல வடிவத்தை வேறொரு கோணத்தில் ஆராய்கிறது ‘தூமலர்’ கதை. ‘கற்பூரம்’, ‘அமிலம்’ ஆகிய இரண்டு கதைகளும் அம்மாவைப் புறக்கணிக்கும் களனை உள்ளடக்கமாகக் கொண்டவை. இந்தக் கதைகள் உறவுகள்மீது போர்த்தப்பட்டுள்ள புனித பிம்பங்களை அசைத்துப் பார்ப்பவை. ‘கற்பூரம்’ கதையில் வரும் ரயிலில் ஊதுபத்தி விற்கும் அந்த நபரை நீங்களும் சென்னைப் புறநகர் ரயிலில் பல முறை பார்த்திருப்பீர்கள். அவர் பேசும் வசனங்கள் அப்படியே இந்தக் கதையில் இடம்பெற்றுள்ளன. அகத்தின் உட்சிடுக்குகளை மொழிப்படுத்திய குட்டி ரேவதி, புறச்சூழல்கள் மீது இந்தத் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
கதையை மொழியிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் ‘மீமொழி’ தொகுப்பினூடாக குட்டி ரேவதி வெற்றி பெற்றிருக்கிறார். அடுத்து, யதார்த்தத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் கதைமாந்தர்களுக்கே இந்தத் தொகுப்பில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவர்கள் தங்களை மீள்கட்டமைத்துக்கொள்ளும் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்கின்றனர். அந்த முன்னெடுப்புகள் பெண்ணுடலைத் தொடர்ந்தே இயங்குகின்றன. இதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்குக் காலத்திடம்தான் கைகட்டி நிற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT