Published : 06 Oct 2015 11:03 AM
Last Updated : 06 Oct 2015 11:03 AM
காசிக்குப் போக வேண்டும் என்கிற ஆசை இந்தியாவுல யாருக்குத்தான் இருக்காது? எல்லோருக்குமே ஆசைதான். ஆனால் எங்கே போக முடிகிறது?
காசிக்குப் போகவென்று புறப்பட்டு வந்தவர்களைக் கண்டுவிட்டால், அவர் களுக்கு மரியாதை செய்து அனுப்ப வேண்டும் என்று தோன்றிவிடுகிற தல்லவா?
மனிதர்கள் மீது கடவுள் வந்து இறங்கு வது என்பதையும், அதைக் கண்டு உடல் புல்லரிப்பதையும் அனுபவிக்க ஒருவித மனப்பக்குவம் வேண்டும். எல்லோ ராலும் முடியாது அது. அசாத்திய கடவுள் நம்பிக்கை இருந்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும். ராகங்களை எல்லோராலும் இனம் கண்டும், கேட்டும் அனுபவிக்க முடிந்துவிடுகிறதா என்ன?
கட்டில் சோபா மீது முழுவதும் சாய்ந்து ஏதோ ஒன்றில் லயித்து எங்கோ ஒன்றைப் பார்த்த நிலையில் இருந்த துரசாபுரம் தாத்தாவின் அருகே ஊருக்கு வந்த பந்த சேர்வையின் கானகோஷ்டி இசைக்கத் தயாரானது.
சுருதிப் பெட்டியில் இருந்து நாகப் பாம்பு வெளிவருவதைப் போல சுருதி யின் உச்சம் வெளிவர ஆரம்பித்தவுடனே, எல்லோருடைய காதுகள் வழியாக நுழைந்து மனங்களைச் சென்றடைந்து கொண்டிருந்தன. அப்படியே லயித்து கண்களை மூடினார் தாத்தா. திடீரென்று ஒரு பெண் குரல் ஓங்கி கூக்குரலிட்டது. ‘‘சீனுவாச மூர்த்தி ஏழுமலையானே…’’ என்று.
ஏதோ பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவனை ஆபத்துக்கு உதவக் கூப்பிட்டது போல இருந்தது அந்தக் குரலின் அழைப்பு.
பதினெட்டு, பத்தொன்பது வயசு இளவட்டம் முற்றாத மீசையும் அரும்பும் தாடியும் கொண்ட அந்த முகத்தின் கன்னங்களைக் குத்தித் துளையிட்டு வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்தது. அவன் மீதுதான் அந்த சீனுவாச மூர்த்தி வந்து இறங்கிக்கொண்டிருந்தார். ஈரவேட் டியை முறுக்கிப் பிழிவது போல அவ னுடைய உடம்பை யாரோ பிழிகிறார்கள் போலும். அங்கு உள்ள கூட்டமே ஓங்கி அழைக்கிறது ‘‘சீனுவாசா… கோவிந்தா…’’ என்கிறது.
தாத்தாவின் கண்களில் இருந்து கண்ணீர் பொங்குகிறது. கூட்டமே குதித் துக் குதித்து ஆடத் தொடங்குகிறது, முன்னேறுவதும் குனிந்து பின்வாங்கு வதாயும்.
அந்தப் பெண் குட்டிக்கு ஆறு வயசுக் குள்தான் இருக்கும். பட்டுப் பாவாடை உடுத்தி, உச்சிக் கொண்டை போட்டு அதில் நீலநிறம் மின்னும் மயில் பீலி சொருகியிருந்தாள். முகம் மொள்ளும் கண்கள். புல்லாக்கு மினுங்கும் மூக்கு. பூரிப்பான புன்முறுவல்.
அளவாகத் தலையைச் சாய்த்தும் பிஞ்சுக் கைகள் இரண்டையும் உயர்த்திக் கொண்டு, மல்லிகைப் பூ அரும்புகள் போன்ற சலங்கைகள் அணிந்த பாதங் களைத் தரையில் நோகாமல் தாளம் தட்டி காவடி எடுத்து ஆட ஆரம்பித்ததை தாத்தா கவனித்தார். தானும் தலையைச் சாய்த்து ஆட வேண்டும் போலிருந்தது அவருக்கு.
பாடல் பாலகிருஷ்ணனுடைய லீலா வீனோதங்களை விவரித்துக்கொண் டிருந்தது. மனிதத்துக்கும் பைத்தியத்துக் கும் மத்தியில் உள்ள ஒரு புத்தி இருந்தால்தான் அப்படியான பக்திப் பாடல்களை ரசிக்க முடியும் போல. ஏன் தங்கள் கண்கள் கண்ணீர்விடுகின்றன என்று அவர்களுக்கே தெரியவில்லை.
அபூர்வமாகச் சில பைத்தியங்கள் சொல்வதும் நிஜமாகவும் இருக்கும். ரொம்ப ரொம்பக் காலத்துக்கு முன் னால், திருப்பதியின் மலை மேலே ஒரு பைத்தியம் அலைந்துகொண்டிருந்த தாம். கூட யாரோடவோ பேசிக்கொண்டு வருவதுபோல பேசிக்கொண்டே வருமாம்.
‘‘யாரோடப்பா பேசிக்கிட்டே வர்றே…’’ என்று ஒருநாள் கோயில்பட்டர் அவனிடம் கேட்டபோது, ‘‘வேற யாரோட, இந்தப் பயலோடுதான்…’’ என்று கோயில் மதில் சுவரை தலையாலேயே திருப்பிக் காட்டினானாம்.
பக்கத்தில் யாரும் இருந்தால் அவ ரோடும் சேர்ந்து சிரிக்கலாமே என்று தோன்றியது பட்டருக்கு.
எழுந்ததும் காலையில் பைத்தியம் முகத்தில் விழிப்பது நல்லதுதான் என்று யாரோ, எங்கோ சொன்னது பட்டருக்கு ஞாபகம் வந்தது.
வீட்டில் வந்து சொல்லிச் சிரித்தார். ‘‘வேற யாரோட, அந்தப் பயலோடதாம்’’ என்கிறான் என்று திரும்பவும் சொல்ல, சிரித்தார்கள்.
பட்டரோட பாட்டி எச்சரித்தார். ‘‘சிரிக்காதேயுங்கோ; சுவாமி நெனைச்சா யாரோடும் பேசுவார்…”
மறாநாளும் பட்டர் அந்தப் பைத்தியத் தைப் பார்க்க நேர்ந்தது. ரொம்பவும் சோர் வாக இருந்தார். அவன் முன்னால் போய் இவர் நின்றதும்,
‘‘ராத்திரியெல்லாம் தூங்கலை…’’ என்றான்.
‘‘தூங்க வேண்டியதுதானே…’’
‘‘எங்கே தூங்கவிடுறான்; விளை யாட்டு… ஒரே விளையாட்டுதான்!’’
‘‘உன்னோடயா…’’
‘‘ஆமாம்… என்னோடதாம்!’’
‘‘வேண்டியதுதாம்…’’ என்று பளிச் என்று சொல்லிவிட்டுக் கிளம்பி வந்துவிட்டார் பட்டர்.
பேசினார் என்று சொன்னான்; சரீ என்றிருந்தால் இப்போ என்னோட வந்து விளையாடுறார் என்கிறானே! தூங்கவிடாமல் ராத்திரியெல்லாம் வந்து துன்பப்படுத்துறார் என்பதுபோல் அல்லவா சொல்கிறான்.
‘‘காலக் கொடுமையில் பெருச்சாளி காவடி எடுத்து ஆடுச்சாம்’’ என்பது போலல்லவா இருக்கு.
மறுநாள் காலையில், இன்னிக்கு அவம் மூஞ்சியிலேயே முழிக்கப்படாது என்று வேற பக்கம் பார்த்து நடந்து போனார் பட்டர்.
எதிரே வந்தவனைப் பார்த்ததும் ‘‘பெரு மாளே…’’ என்று சொல்லிக்கொண்டார்.
நேரத்தையும் நாளையும் நாமா உண்டாக்கினோம்.
எதிரே வந்தவன் ஆனந்த நடனம்தான் ஆடவில்லை. அவ்வளவுக்கு சந்தோஷம் பொங்க நின்றான்.
இன்னிக்கு என்ன சொல்லப் போறானோ தெரியலையே என்று பதற்றம் பட்டருக்கு.
‘‘ஜெயிச்சுட்டேனே… அந்தப் பயலை ஜெயிச்சுட்டேனே…’’ என்று அவய மிட்டான், அந்தப் பைத்தியக்காரன்!
- இன்னும் வருவாங்க…
ஓவியங்கள்: மனோகர்
முந்தைய அத்தியாயம்- >மனுசங்க.. 22: ரவீந்திர நாத் தாகூர் வெண்தாடி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT