Published : 25 Oct 2015 12:17 PM
Last Updated : 25 Oct 2015 12:17 PM

விடுபூக்கள்: கலை இலக்கியப் பெருமன்றம் -என்சிபிஎச் விருதுகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி பதிப்பகமும் இணைந்து நடத்திவரும் இலக்கியப் போட்டியில் 2015-ம் ஆண்டுக்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல் களுக்கான போட்டியில் முத்து மீனாள் எழுதிய ‘முள்’ நாவலும், அ.உமர் பாரூக்கின் சவுண்ட் சிட்டியும் சைலண்ட் கோட்டும் நாவலும் அழகியநாயகி அம்மாள் நினைவுப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ந.பெரியசாமியின் கவிதை நூலான ‘தோட்டாக்கள் பாயும் வெளி’ கவிஞர் கே.சி.அருணாசலம் நினைவுப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாக்கியம் சங்கரின் ‘நான் வடசென்னைக் காரன்’ கட்டுரைத் தொகுதி என்.சி.பி.எச் ராதாகிருஷ்ணமூர்த்தி நினைவுப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தாத்தாவை உந்திய சக்தி

மடங்களின் இருள் மூலைகளிலும் வீடு களிலும் சிதிலமாகிப் போயி ருக்க வேண்டிய பழந்தமிழ் இலக்கிய ஏடுகளைப் பதிப்பித்துப் பழந்தமிழ் இலக்கியங்களை நவீன அச்சில் ஏற்றியவர் உ.வே.சாமிநாதய்யர் அவருக்கு சிலப்பதிகாரத்தையும் சீவக சிந்தாமணியையும் அறிமுகப்படுத்தியவர் முன்சீப் சேலம் ராமசாமி முதலியார். உ.வே.சா.வும் முன்சீப் சேலம் ராமசாமி முதலியாரும் சந்தித்த நாள் 1880-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி.

சைவ மடங்களில் பிற சமய நூல்கள் என ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஐம்பெரும் காப்பியங்கள் மற்றும் சங்கத்தமிழ் நூல்களைப் பற்றிய தகவலைச் சொல்லியவர் ராமசாமி முதலியார்தான். அதுவரை இலக்கண நூல்கள், சமய நூல்கள் மற்றும் உரைகளையே படித்திருந்த உ.வே.சா.விடம் இதையெல்லாம் படித்து என்ன பயன் என்று கேட்டுள்ளார் ராமசாமி முதலியார். அழிவின் விளிம்பில் உள்ள பழந்தமிழ் நூல்களை நோக்கி ஆற்றுப்படுத்தப்பட்ட போது உ.வே.சா.வுக்கு வயது 44.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x