Published : 13 Oct 2020 08:20 PM
Last Updated : 13 Oct 2020 08:20 PM
உலகம் யாவையும் என்றான் கவிஞன். மனிதனுக்கு அடுத்தவன், கடவுளோடு பேச்சுவார்த்தை, கவிதைகள் 100, மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை ஆகிய கவிதைத் தொகுதிகள், பூமரேங் பூமி, உயிர்ச்சொல், மெய்நிகரி ஆகிய மூன்று நாவல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கும் கபிலன் வைரமுத்துவின் முதல் சிறுகதைத் தொகுதி ‘கதை’. தற்போது ‘அம்பறாத்தூணி’ என்ற தனது இரண்டாம் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். வாழ்வனுபவம், வரலாறு, நவீனம் ஆகிய புள்ளிகளையும் கச்சிதமாக இணைக்கும் புனைவின் புள்ளிகளில் மலர்ந்துவிடுகின்றன கபிலனின் சிறுகதைகள். ‘மக்கள் அணுக்கப் பேரவை’ என்ற மாணவர் அரசிலியக்கம் கண்டு, அதன் மூலம் பெற்ற அனுபவத்தை ‘இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப்படமாகவும் உருவாக்கி வெளியிட்ட கபிலன், தற்போது திரையுலகில் பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகமாக இயங்கிவருகிறார், அவரது ‘அம்பறாத்தூணி’ சிறுகதைத் தொகுதி வெளியாகியிருக்கும் இந்த நேரத்தில் அவற்றை வாசித்தபின் அவருடன் கலந்துரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
கவிதை, சிறுகதை, நாவல் தற்போது மீண்டும் சிறுகதை எனத் திரும்பி வந்திருக்கிறீர்கள்.. சிறுகதையின் வடிவம் உங்களைக் கவர்ந்துவிட்டது என நினைக்கிறேன்...
எழுத்தின் மூலமாக எதைப் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேனோ அந்த உள்ளடக்கம்தான் வடிவத்தை முடிவு செய்கிறது. பன்முகமான சில செய்திகளை ஒரே தொகுப்பில் பகிர விரும்பினேன். அவற்றை நேரடித் தகவல்களாக சொல்லாமல் புனைவாகச் சொல்ல நினைத்தேன். பன்முகம் - புனைவு இந்த இரண்டுக்கும் பொருத்தமானது சிறுகதை. கவிதைதான் என் மூலம். நாவல்கள் எழுதினாலும் சிறுகதைகள் எழுதினாலும் நானும் வருகிறேன் என்று கவிதையும் ஆங்காங்கே தொடர்ந்து வரும்.
உங்களது மூன்று நாவல்களில் ‘பூமரேங் பூமி’ மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படக் காரணம், அதன் உள்ளடக்கம் உலகப் பொதுமையுடன் இருப்பது எனலாமா?
ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் போராட்டத்திற்கு நம் தென் மாவட்டத் தமிழன் ஒருவன் தலைமை தாங்கும் கதைதான் பூமரேங் பூமி. என் முதல் நாவல். ஆஸ்திரேலியாவில் இதழியல் படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது. என் எல்லாப் படைப்புகளையுமே மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் பூமரேங் பூமிக்குதான் அந்தச் சூழல் வாய்த்தது. பூமரேங் பூமியை விட பொதுமைத் தன்மை வாய்ந்தது அம்பறாத்தூணி. மொழி பெயர்க்க நிச்சயம் முயற்சி செய்வேன்.
ஊடக உலகைக் கதைக் களமாகக் கொண்ட உங்களது ‘மெய் நிகரி’ நாவல், கே.வி.ஆனந்த் - எழுத்தாளர்கள் சுபா கூட்டணியில் உருவான ‘கவண்’ திரைப்பட எழுத்தாக்கத்தில் பயன்படுத்தப்பட்டதைப் பற்றிக் கூறுங்கள்...
நான் தொலைக்காட்சியில் பணியாற்றிய அனுபவத்தையும் மற்றும் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றிய என் நண்பர்களின் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவல் மெய்நிகரி. அந்த நாவலைப் படித்த இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு அந்தக் களம் மிகவும் பிடித்திருந்தது. மெய்நிகரியை ஒரு தொடக்கமாகக் கொண்டு சில புதிய கதாபாத்திரங்களை உருவாக்கி ஒரு புதிய திரைக்கதை எழுத முடிவானது. இயக்குநர் கே.வி.ஆனந்த் தலைமையில் எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து பணியாற்றிய பயணம் இனிமையானது. 'கவண்' திரைப்படம் நம் சமூகத்தில் அரிதான ஒரு விழிப்புணர்வைத் தந்திருப்பதாக நம்புகிறேன்.
மக்கள் அணுக்கப் பேரவை உங்கள் கனவுகளில் ஒன்று. அதுகுறித்த அனுபவங்களை ‘இளைஞர்கள் என்னும் நாம்’ என்ற ஆவணப்படமாக இயக்கியிருந்தீர்கள். அந்த ஆவணப் படத்துக்கான எதிர்வினைகள் எப்படி இருந்தன?
தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து ஒரு இளைஞர் இயக்கம் நடத்தினால் வரும் எதிர்வினைகளைப் பற்றிய ஆவணம்தான் இளைஞர்கள் என்னும் நாம். கல்லூரி நாட்களில் நானும் என் நண்பர்களும் உருவாக்கிய மக்கள் அணுக்கப் பேரவை என்ற இயக்கத்தின் தோற்றத்தையும் மறைவையும் அதில் சொல்லியிருக்கிறோம். அரசியலில் ஆர்வம் கொள்ளும் இளைஞர்களுக்குப் பயன் தரக்கூடிய ஆவணமாக அது அமைந்தது. அந்த ஆவணப்படத்தில் கடைசியாக நாங்கள் குறிப்பிட்ட அரசியல் பயிற்சிப் பள்ளியை அவசியம் உருவாக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். ‘இந்த ஆவணப்படம் ஒரு முக்கியமான பதிவு’ என்று நடிகர் சூர்யா வாழ்த்து கூறினார்.
தற்போது தமிழ்த் திரையில் எழுத்தாளர் - பாடலாசிரியர் என்ற இரட்டைப் பயணம் எப்படிச் செல்கிறது?
எழுத்து ஒன்றுதான். அது செய்துகொள்ளும் வெவ்வேறு ஒப்பனைகள்தான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள். என் திரைப் பயணம் தொடக்கத்தில் எளிதாக இல்லை. பல எதிர்பாராத தடைகளையும் புறக்கணிப்பையும் தாண்டித்தான் பயணம் செய்ய வேண்டியிருந்தது. என்னை முழுவதும் புரிந்துகொள்ளும் மனிதர்களைச் சந்திக்க எனக்கு நீண்ட நாட்களாயின. தற்போது திரையுலகில் என் எழுத்துக்கு ஒரு தட்டிக்கொடுத்தலும் தலைக் கோதலும் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.
உங்கள் படைப்புகளின் முதல் வாசகர் யார், உங்கள் பெற்றோர் இருவருமே படைப்பாளிகள். உங்கள் எழுத்துகளை அவர்கள் விமர்சிப்பதும் விவாதிப்பதும் உண்டா?
அப்பா, அம்மா இருவருமே என் படைப்புகளை அவர்களுக்கே உரிய ஆளுமையோடு அணுகி தங்கள் விமர்சனங்களை முன்வைப்பார்கள். அவர்களுடைய சொற்கள் அன்பானவை. ஆழமானவை. அண்ணன் மதன்கார்க்கி, அண்ணியார் நந்தினி கார்க்கி இருவருமே அவரவர் துறையில் அறிஞர்கள். என் படைப்புகளைத் தவறாமல் வாசித்துவிட்டு நுட்பமாகக் கருத்துச் சொல்வார்கள். தற்போது என் படைப்பின் முதல் வாசகர் என் மனைவி ரம்யா. அவர் மருத்துவர். அவருடைய பரபரப்பான பணிகளுக்கு இடையிலும் என் எழுத்தைப் படித்துவிட்டு மிகச் சில ஆனால் மிக நேர்த்தியான வார்த்தைகளால் விமர்சனம் சொல்வார்.
தமிழ் சிறுகதைப் பரப்பில் உங்களைப் பாதித்த அல்லது கவர்ந்த சிறுகதையாளர் யார் எனக் கூறுங்கள்?
பலரின் சிறுகதைகளை வாசித்திருந்தாலும் வண்ணதாசனின் கதைகள் என் மனத்திற்கு நெருக்கமானவை. அவருடைய சிறு இசைத் தொகுப்பை நூறு முறை வாசித்திருக்கிறேன்.
‘அம்பறாத்தூணி’க்கு வருவோம். வள்ளி என்ற உங்கள் சிறுகதையில் ஒய்மா என்று ஒரு கதாபாத்திரத்துக்கு பெயர் வைத்திருக்கிறீர்கள். ஏதேனும் காரணம் உண்டா ?
நீங்கள் சொல்கிற கதை வேலூர் சிப்பாய் புரட்சிக்குப் பின் ஓரிரு நாட்களில் வேலூர் கோட்டையில் நடக்கும் ஒரு கற்பனைச் சம்பவம். இதில் ஒய்மா என்பவன் அந்தப் புரட்சியை ஒருங்கிணைத்த ஒரு புனைவுப் பாத்திரம். வேலூரில் கதை நடப்பதால் அதற்குப் பொருத்தமான ஒரு பெயரை அந்தப் பாத்திரத்திற்கு வைக்க வேண்டும் எனத் தோன்றியது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்றைய வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் ஒருங்கிணைந்த பகுதியாக ‘ஒய்மா நாடு’ என்று அழைக்கப்பட்டது. ஓவியமான் என்ற சமூகப் பிரிவைச் சேர்ந்த நல்லியக்கோடன் என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்ததால் ஒய்மா என்ற பெயர் வந்ததாக அறிந்தேன். தமிழ்க் கடவுள் முருகனுக்கும் ஒய்மா ஆண்டவன் என்று ஒரு பெயர் இருப்பதாக கேள்வியுற்றேன். வேலூர் புரட்சியின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கு அந்த மண்ணுக்கு வழங்கப்பட்ட ஒய்மா என்ற பெயரையே தேர்ந்தெடுத்தேன். அவன் காதலிக்கு வள்ளி என்று பெயரிட்டேன். அவள்தான் கதையின் நாயகி.
சிவனேசன் கதையில் ஒரு பக்கத்துக்கு ஒரு நாட்டுப்புற பாடல் வருகிறது. அது நீங்கள் இயற்றியதா?
அது நான் இயற்றிய பாடல்தான். சிவனேசன் கதை 1876-ம் ஆண்டு சென்னை மாகாணப் பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டது. உணவின்றி மக்கள் மடிந்துகொண்டிருக்கும் ஒரு சூழல். ஒருகாலத்தில் நம் மக்கள் எப்படியெல்லாம் உணவு உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் பாடல் அது. இப்படியெல்லாம் வளமாக இருந்தவர்கள் ஒருவேளை உணவு இன்றி சாகிறோமே என்ற சிவனேசனின் வலிதான் அந்தப் பாடல். அந்தப் பாடல்தான் அந்தக் கதையின் ஆன்மா.
அந்தப் பாடலில் ‘காரக்கா பொடி தூவி குளத்து மீன மயக்கி பிடிச்சு’ என்று ஒரு வரி வருகிறது. அப்பழங்கால மீன்பிடி முறையை எங்கிருந்து எடுத்தாண்டீர்கள்?
காரைக்காய் பொடியைக் குளத்தில் தூவினால் அதை நுகரும் மீன்கள் மயக்கமுற்று நீரில் மிதக்குமாம். மயங்கிய மீன்களை அள்ளியெடுத்துக் கொள்வார்கள். இது ஒரு நாட்டுப்புற இலக்கியத்தில் படித்தது. இப்போது வழக்கத்தில் இருக்கிறதா தெரியாது. நான் எழுதிய அதே பாடலில் “போருக்கு பெருஞ்சோறு” என்று எழுதியிருந்தேன். போருக்கு முன் உண்ணும் உணவை நம் இலக்கியத்தில் பெருஞ்சோறு என்று அழைக்கிறார்கள். அது பலவகையான பதார்த்தங்களைக் கொண்ட உணவு. பல வகையான வளங்களோடு வாழ்ந்தவர்கள் இன்று பஞ்சத்தில் கிடக்கிறோம் என்று அந்தக் கதாபாத்திரம் கலங்கும்.
முப்பத்தோராம் நூற்றாண்டில் நடப்பதாக நீங்கள் எழுதியிருக்கும் மூலா என்ற சிறுகதையில் ‘திமிங்கலப் பாடலாக உனக்கு இந்தச் செய்தியை அனுப்புகிறேன்’ என்று வருகிறது. அதன் பின்னணி என்ன ?
திமிங்கலங்களில் பாடல்களை உற்பத்தி செய்யும் அரிய வகை திமிங்கலங்கள் உண்டு. பாடல்களை உருவாக்க அந்த உயிரினத்தின் மூளையில் சிறப்பு அணுக்கள் உண்டு. தன் பாடல் வழி ஒரு திமிங்கலம் இன்னொரு திமிங்கலத்தோடு தொடர்பு கொள்கிறது. திமிங்கலத்தின் ஒரு பாடல் பல கிலோ மீட்டர் பயணிக்கக் கூடியது. திமிங்கலத்தின் பாடல் அலைவரிசையை மாதிரியாகக் கொண்டு ஒரு பாதுகாக்கப்பட்ட தகவல் அலைவரிசையை உருவாக்கி அதை முப்பத்தோராம் நூற்றாண்டு மனிதர்கள் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துவதாக ஒரு கற்பனை.
டெல்லி பல்கலைக்கழகம் மாணவர்கள் போராட்டம் - வேலூர் புரட்சி - சென்னை பஞ்சம் - சினிமா எழுத்தாளர் - யூடியூப் சேனல் கதை என்று வெவ்வேறு களங்கள் என்பதைத் தாண்டி உங்களுடைய ஒரு சிறுகதை தெற்கு ரஷ்யாவில் நடக்கிறது. அதுவும் 1899-ம் ஆண்டு. இந்தக் கதையை எழுத எது தூண்டுதலாக இருந்தது?
தெற்கு ரஷ்யாவைச் சேர்ந்த டுகோபர்ஸ் என்ற மதப் பிரிவனரின் தன்னிறைவான வாழ்வியல். அதுதான் தூண்டுதலாக இருந்தது. அவர்களின் நிலத்தில் நின்று நான் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம்தான் டிமிட்ரி. தியாகம்தான் அந்தக் கதையின் மையம். அதைப் பற்றி விரிவாக நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒரு செய்தியைப் பதிவு செய்ய வேண்டும். மகாத்மா காந்தியடிகளுக்கும் லியோ டால்ஸ்டாய்க்கும் கடிதப் போக்குவரத்து இருந்தது என்பதை நாம் அறிவோம். அதில் ரஷ்யாவின் டுகோபர்ஸ் மக்கள் குறித்து காந்திக்கு டால்ஸ்டாய் எழுதியிருக்கக் கூடும் என்பது என் அனுமானம். அந்த மக்களின் வாழ்வியலைக் காந்தியடிகள் பெரிதும் மதித்திருப்பதற்கானச் சான்றை காந்தியடிகளின் எழுத்திலும் அவரது சில கொள்கைகளிலும் காண்கிறேன். டிமிட்ரி தெற்கு ரஷ்யாவில் நடக்கும் கதைதான். ஆனால், அதில் வரும் சில விவரணைகளை காந்தியடிகளின் எழுத்து நடையில் அமைத்திருக்கிறேன். காந்தியடிகளை நன்கு புரிந்தவர்களுக்கு - அவரது சுய சரிதையான சத்திய சோதனை வாசித்தவர்களுக்கு - டிமிட்ரி என்ற சிறுகதையில் காந்தியின் குரலும் கேட்கும்.
ரய்யான் என்கிற கதையில் இணையமும் சமூக வலைத்தளங்களும் முழுக்க முழுக்க மக்கள் விரோதமானவை என்று சொல்லியிருப்பது ஏற்புடையதாக இல்லையே?
அவை முழுக்க முழுக்க மக்கள் விரோதமானவை என்று நான் சொல்லவில்லை. முழுக்க முழுக்க ஜனநாயகமானவை அல்ல என்றுதான் சொல்லியிருக்கிறேன். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.
மொட்டைமாடி கிரிக்கெட் கதையில் வரும் சிறுவன் இருதய பிரகாசம் கதையிலும் வருகிறான். ஒரு கதையில் வரும் ஆப்பிள் பூங்கொத்து பற்றி இன்னொரு கதையில் விளக்கம் வருகிறது. கதைகளுக்கிடையே இந்த இணைப்பு உத்தி சுவாரசியமாகத்தான் இருக்கிறது. வாசிப்பின் சுவாரசியத்தில் இதுபோன்ற நவீன நுட்பங்களை வாசகர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகிறீர்களா?
நம்புகிறேன். எழுத்தை அவசர அவசரமாகக் கடந்துபோகாமல் வரிகளிடையே வசித்து வசித்து படிப்பவர்கள் ஒரு படைப்பின் புல்வெளி - புதையல் இரண்டையும் அனுபவிப்பார்கள்.
உங்கள் படைப்புகளுக்கு வருகிற பல வகையான விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
பாராட்டு விமர்சனங்களைப் படித்துவிட்டு கொஞ்ச நேரம் பறந்துவிட்டு சில நொடிகளில் தரை இறங்கிவிடுவேன். படைப்பை மேன்மைப்படுத்த உதவும் ஆரோக்கியமான விமர்சனங்களில் இருந்து கற்றுகொள்வேன். படைப்பை முழுவதும் புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்கிறவர்களுக்கு என்னால் இயன்ற விளக்கத்தைத் தருவேன். புரிந்துகொள்ள விரும்பாமல் தவறான கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்கிறவர்களுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்திவிட்டு விலகிவிடுவேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT