Published : 10 Oct 2020 08:18 AM
Last Updated : 10 Oct 2020 08:18 AM
1980-களின் மத்தியில் ஜப்பானிய மூன்று வரி ஹைக்கூ கவிதைகள் தமிழில் எழுதப்பட்டு நூல்களாக வெளிவரத் தொடங்கின. 1990 மார்ச்சில் ‘ஹைக்கூ கவிதைகள்’ எனும் 50 பக்க குறுநூல் ஒன்று ‘சாரல்’ வெளியீடாக வந்தது. அந்த நூலின் ஆசிரியர் கவிஞர் மித்ரா. அழகியல் மிளிர, காட்சிப் பின்புலத்தில் ஒளிர்ந்த ஹைக்கூ கவிதைகள் அந்த நூலை வாசித்த பலரையும் எழுத வைத்தது. ‘தலைமுறை கோபம்/ அடிவிழ அடிவிழ/ அதிரும் பறை’ என்று காலங்காலமாக ஒடுக்குமுறைக்கு எதிராக அதிர்ந்தெழுந்த சமூகக் கோபம், வாசித்த பலரையும் ‘யார் இவர்?’ எனக் கேட்க வைத்தது.
1945 ஜூலை 3 அன்று சேலம் ஆத்தூர் வட்டத்திலுள்ள செக்கடிபட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கவிஞர் மித்ரா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றினார். ஹைக்கூ கவிதைகள் மேல் ஈடுபாடு கொண்டு எழுதியதோடு நில்லாமல், தனது முதுமுனைவர் பட்டத்துக்கு ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய ஆய்வு மேற்கொண்டு, தமிழில் முதல் முதுமுனைவர் பட்டம் பெற்றவர் எனும் சிறப்பையும் பெற்றார். பல மாணவர்களைக் கவிஞர்களாக மாற்றிய பெருமைக்குரியவர். மாணவர்கள் எழுதிய கவிதைகளைத் தொகுத்து, அவற்றைப் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டார். ‘சித்திரை வெயில்’, ‘தாகம் தீரா வானம்பாடிகள்’, ‘நிரந்தர நிழல்கள்’, ‘காற்றின் சிறகுகள்’ ஆகிய புதுக்கவிதை நூல்களையும், ‘ஹைக்கூ கவிதைகள்’, ‘குடையில் கேட்ட பேச்சு’, ‘மௌனம் சுமக்கும் வானம்’ ஆகிய ஹைக்கூ கவிதை நூல்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட கவிதை நூல்களை எழுதியுள்ளார். கவிதைகள் தொடர்பான 6 ஆய்வு நூல்களையும், கண்ணதாசன், பாரதிதாசன் படைப்புகள் குறித்த 2 ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்தார். தமிழில் குறிப்பிடத்தக்க ஹைக்கூ கவிஞராக வலம்வந்த கவிஞர் மித்ராவின் 2,000 ஹைக்கூ கவிதைகள் ஆங்கிலத்திலும், 1,000 ஹைக்கூ கவிதைகள் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இலக்கியச் செயல்பாடுகளிலேயே தன்னை முற்றாகக் கரைத்துக்கொண்ட கவிஞர் மித்ரா, திருமணம் செய்துகொள்ளவில்லை. உடல்நலக்குறைவால் தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கவிஞர் மித்ரா, அக்டோபர் 4 அன்று காலமானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT