Published : 10 Oct 2020 08:17 AM
Last Updated : 10 Oct 2020 08:17 AM
தமிழில் எழுதப் படிக்கத் தொடங்குபவர்களின் விருப்பப் பட்டியலில் கன்னித்தீவு படக்கதைக்கு எப்போதும் ஓர் இடமுண்டு.
1960 ஆகஸ்ட் 4 அன்று அந்தப் படக்கதை தொடங்கப்பட்டது. ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக ‘தினத்தந்தி’ நாளேட்டில் அந்தப் படக்கதை வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்தக் கதையின் மூல சூத்திரதாரி, தமிழின் மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அ.மா.சாமி (1935 - 2020).
திருச்சி பதிப்பில் ஒரு செய்தியாளராக இதழியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் அவர். நீதிமன்ற மற்றும் காவல் நிலையச் செய்திகளை அளித்துவந்த அவர், விழாக்கால விளம்பர இணைப்புகளில் தனது எழுத்தார்வத்தை வெளிப்படுத்தினார். ஆரம்ப நாட்களிலேயே அவரது திறமைகளைக் கண்டுகொண்ட சி.பா.ஆதித்தனார், தனது நம்பிக்கைக்குரிய ஊழியராகவும் உறவினராகவும் ஆக்கிக்கொண்டார். ‘ராணி’ வார இதழின் தொடக்கத்திலும் வெற்றியிலும் அவருக்கு முக்கியமான இடமுண்டு. இரவுபகல் பாராத ஓய்வில்லாத உழைப்பும் ஒற்றை ஆள் ராணுவமாக இதழை நடத்திச்சென்ற அனுபவமும் ஆச்சரியம் அளிக்கக்கூடியவை.
செய்திக் கட்டுரைகள், நேர்காணல்கள் மட்டுமின்றி சிறுகதை, கவிதை, தொடர்கதை, பயணக் கட்டுரை என்று எல்லா வகைமைகளிலும் முத்திரை பதித்தவர் அ.மா.சாமி. எல்லா இதழாளர்களையும் போலவே ஏகப்பட்ட புனைபெயர்களில் எழுதிக் குவித்தார். ஜோதிடக் குறிப்புகளை வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக ஜோதிடமும் கற்றுக்கொண்டார். பெண்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்ட ஒரு வார இதழுக்கு அவர் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆசிரியராக இருந்திருக்கிறார் என்பது மேலும் ஓர் ஆச்சரியம். ஒரு பக்கக் கட்டுரைகள் என்றாலும் நடப்புச் சம்பவங்களின் உள்சிடுக்குகளை மிகவும் எளிமையான முறையில் வாசகர்களுக்கு உணர்த்துவது அவரது எழுத்தின் சிறப்பு. அதே நிறுவனத்திலிருந்து வெளிவந்த காமிக்ஸ் பத்திரிகைகளுக்கும் கதைகள் எழுதினார். சென்னை வானொலிக்கு அவர் எழுதிய நாடகங்களும் தனித் தொகுப்புகளாக வெளிவந்திருக்கின்றன.
ஓர் இதழாளராகத் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்குள் தனிமுத்திரை பதித்த அ.மா.சாமி, இறுதிக் காலத்தில் இதழியல் துறை சார்ந்து பல்வேறு புத்தகங்களை எழுதிக் குவித்தார். பெரியார் திடல் நூலகத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஆய்வாளர்களில் அவரும் ஒருவர். அந்நூலகம் அவர் பணிபுரிந்த பத்திரிகை அலுவலகத்துக்கு அடுத்த வளாகத்திலேயே அமைந்திருந்தது அவருக்கு வசதியாகப் போனது. குறிப்பாக, 19-ம் நூற்றாண்டு இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், இந்து சமய இதழ்கள், தமிழ் இஸ்லாமிய இதழ்கள், தமிழ் கிறிஸ்தவ இதழ்கள் என்று பல்வேறு தலைப்புகளில் தமிழ் இதழியல் வரலாற்றைப் பதிவுசெய்தார். வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி இதழியல் துறை மாணவர்களுக்கும் அவை ஓர் அரும்பெரும் தகவல் சுரங்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT