Published : 26 Sep 2020 07:55 AM
Last Updated : 26 Sep 2020 07:55 AM
குளிர்மலை
ஹான்ஷான்
தமிழில்: சசிகலா பாபு
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002.
தொடர்புக்கு:
99425 11302
விலை: ரூ.130
மகாயான பெளத்தத்தின் பிரிவான ஜென் தத்துவம், சீனாவில் பிறந்தபோது இருந்த தாங் பேரரசைச் சேர்ந்த ஹான்ஷான் எழுதிய நூறு கவிதைகள்தான் ‘குளிர்மலை'. ஹான்ஷான் என்ற பெயரின் அர்த்தம் குளிர்மலை என்று பொருள். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஜென் துறவியும் கவிஞருமான ஹான்ஷானின் கவிதைகளைப் படிக்கும்போது, வழக்கமாக நாம் படிக்கும் தாவோயிய, ஜென் கவிதைகளிலிருந்து வித்தியாசமாக இருப்பதுதான் அதன் தனித்தன்மையாக உள்ளது.
இயற்கையோடு பேதப்படாத மனத்தின் ஏகாந்தம், வாழ்க்கை குறித்த பூரண ஞானம், தெளிவு, சலனமின்மை போன்ற குணங்கள் ஹான்ஷானிடம் இல்லை. ஹான்ஷானின் கவிதைகளில் ஒரு அறிவாளியும் ஏழைக் குடியானவனும் சேர்ந்த ஒரு ஆளுமை தென்படுகிறான். அவன் முகமிலி அல்ல. புறவாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், ஏழ்மை சார்ந்து அனுபவிக்கும் பாகுபாடுகள் விரக்தியுடனும் சஞ்சலத்துடனும் இந்தக் கவிதைகளில் பதிவாகின்றன. ஹான்ஷான் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கங்கள், மனிதர்கள், உயர்குடிகள், புழங்குபொருட்கள், நம்பிக்கைகள், பழங்கதைகள் எல்லாம் இந்தக் கவிதைகளில் இடம்பெறுகின்றன. அதனால்தான், ஹான்ஷானை நவீனத்தோடு அடையாளம் காண முடிகிறது. அதே வேளையில் இல்லாமை, பேதங்கள், நிராசை எல்லாவற்றையும் தாண்டி அனுபவங்களை ஒரு தொலைவிலிருந்து பார்க்கும் ஒரு குரல் தணிந்த அமைதி உணர்வை இந்தக் கவிதைகள் எழுப்புகின்றன. எல்லாக் காலங்களிலும் எல்லாப் பின்னணிகளிலும் எல்லாப் பண்பாடுகளிலும் மனிதர்களைப் பிணைக்கும் மாறாத அம்சத்தைத் தொட்டு மீள்வதால் இதைப் பழங்கவிதை என்ற அந்தஸ்துடன் படிக்கத் தேவையில்லை.
மகிழ்ச்சி, இளமை, புகழின் நிலையாமை, அதிருப்தி, தாபம், அங்கீகாரமின்மை, பொருளில்லாதவருக்கு இந்த உலகம் இல்லை என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் உணர்வுகள், திரும்பத் திரும்ப இந்தக் கவிதைகளில் வேறு வேறு பின்னணிகளில் இடம்பிடிக்கின்றன. விளக்குகள் அதிக எண்ணிக்கையில் ஏற்றப்பட்ட விருந்தில் இருட்டான பகுதிக்குத் தள்ளப்படும் ஏழை ஒருவன், அதிகப்படியான ஒளிக்கீற்றைப் பெற்றுக்கொள்ளக்கூட சினம் கொள்கிறீரே என்று கேட்கிறான்.
இத்தனை சங்கடங்களையும் மீறி, கவிஞனும் கவிதைகளும் தேவதாரு மரங்களில், ஓடைகளில், மலர்களில், ஒளிரும் செர்ரிப் பழங்களில் மாண்டரின் வாத்துகளில் ஞானமென்றும் மோனமென்றும் விளக்க இயலக்கூடிய குளிர்மலையில் இளைப்பாறுகின்றன. இவ்வுலகம் அளிக்கும் வேதனைகளைத் துளையிட்டுப் பிளக்கும் சிட்டுக்குருவியின் கொம்பைப் போல ஹான்ஷானின் கவிதைகள் விடுதலையைச் சில தருணங்களில் கெக்கலிக்கின்றன. ஒரு தூர தேசத்தையும், தியான்-டாய் என்னும் பெயரையும், அங்கே ஒரு கனவு வீட்டையும் அமைக்கிறார் கவிஞர். அந்த வீடோ, தேவதாரு மரத்தின் இலைகளால் கட்டப்பட்ட வீடு என்கிறார். தற்போது உலகின் உதவியுடன் அவர் வாழக் கற்றுக்கொண்டேன் என்கிறார். அந்த இலைகளால் ஆன வீடு எதுவென ஹான்ஷானின் கவிதைகளை முழுக்கப் படிக்கும் வாசகர் தெரிந்துகொள்வார்.
மனிதனின் ஆயுள் நூறு ஆண்டுகள்தான் அதிகபட்சம்; ஆனால், அவன் ஆயிரமாண்டு இன்னல்களைச் சுமக்கிறான் என்னும் கவிஞர், வண்டிச் சக்கரம் உண்டாக்கிய தடத்தில் சிக்கிய மீனைக் காப்பாற்றுவதற்கு ஒரு அகப்பை நீரை ஊற்ற நாதியில்லை என்கிறார். மனித உயிரின் வேதனையும்தான் அது. இவ்வுலகம் தரும் இன்னல்களிலிருந்து தற்காலிகமாகவேனும் இளைப்பாறுவதற்கு அடைக்கலம் கொள்வதற்கு உலகியற்கைக்குப் பின்னால் இருக்கும் அறிவு அவருக்குக் குளிர்மலையாகத் தென்படுகிறது.
புத்தப் பிரபஞ்சத்தின் நடுவில் ஓங்கியுயர்ந்து நிற்கும் மாபெரும் மலையாக சுமேரு மலை இந்தக் கவிதைகளில் ஒன்றில் குறிப்பிடப்படுகிறது. அதைத் தூரத்திலிருந்து ஒரு சிறிய கவண் கல்லைப் போலப் பார்ப்பதாகச் சொல்லும் குடியானவன் ஹான்ஷான் ஆக இருக்கக்கூடும். அந்தக் கவிதை கொள்ளும் அடக்கத்தில்தான் ‘குளிர்மலை’ கவிதைகள் இப்போது, இங்கு நமது கவிதைகளாகவும் மாறுகின்றன. மொழிபெயர்ப்பாளர் சசிகலா பாபு அந்த த்வனியை தமிழில் பெயர்க்க முயன்றிருக்கிறார். தொகுப்புக்கு முன்னுரை எழுதியுள்ள போகன் சங்கர், பாஷோ போன்ற ஓரிரண்டு பெயர்களே தமிழில் ஜென் கவிதைகள் சார்ந்து அறிமுகமாகியுள்ளன என்று போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார். எனது ஞாபகத்திலிருந்தே, எம்.யுவன் சந்திரசேகர் பெருந்தொகையாக ‘பெயரற்ற யாத்ரீகன்’ என்ற பெயரில் குறிப்பிடத்தக்க அளவில் ஜென் கவிதைகளை இதற்கு முன்னர் மொழிபெயர்த்திருக்கிறார். சீனா சார்ந்து ‘தாவோ தேஜிங்’ என்ற மூலப்படைப்பை சி.மணியும், சீனக் கவிதைகளை சுந்தர ராமசாமியும், கொரியக் கவிதைகளை ப.கல்பனாவும், பா.இரவிக்குமார் போன்றோரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் தொடர்ந்தும் தமிழில் நிகழ்ந்துவருகின்றன.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT