Published : 13 Sep 2020 07:52 AM
Last Updated : 13 Sep 2020 07:52 AM
சென்ற நூற்றாண்டில் தமிழில் பிரதானப் போக்காக இருந்த நவீன நாவல் வடிவம், நவீன எழுத்துகளோடு சேர்த்துப் பார்க்க முடியாத தனித்துவமான எழுத்து ப.சிங்காரத்துடையது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தொன்மை கொண்ட தமிழர் வரலாறு, மெய்யியல், பண்பாடு, வாழ்க்கைப் பார்வை, மொழி மரபின் குணங்கள் சேர்ந்த வெளிப்பாடு ப.சிங்காரம். உலகப் போரின் பின்னணியில் தென்கிழக்காசிய நாடுகளின் ஒரு காலகட்டத்து அரசியல், வெகுஜனப் பண்பாட்டை விரிவாகவும் நுட்பமாகவும் அவர் தனது இரண்டு நாவல்களிலும் படைத்துள்ளார். அதிலும், ‘புயலில் ஒரு தோணி’ நாவலானது லியோ டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ போன்ற பெரும் படைப்பை நோக்கி தமிழ் படைப்பாளி ஒருவர் கண்ட கனவு என்றே சொல்லலாம்!
சரித்திரத்தின் கதியில் தோன்றி மறையும், சுடர்ந்து அவியும், கரைந்து தேயும் மானுடர் வாழ்வுதான் ப.சிங்காரத்தின் கவனம். அந்த வகையில் குடும்பம் என்ற மையத்திலேயே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்த தமிழ் நாவல்களின் மந்தைப் போக்கிலிருந்து விலகிய படைப்பு இது. வீடுகளின் தாழ்வாரத்துக்குள்கூட எட்டிப் பார்க்காத இந்த நாவலில் விதிவாதம், கடவுளின் கைகள் கட்டுப்படுத்தாத ஒரு அசலான நவீனத் தமிழ் தனிமனிதர்களின் வாழ்க்கைகளைப் பார்க்கிறோம்.
மதுரை என்னும் தொன்ம நிலத்தை, கடலுக்கு அப்பால் வெகு தொலைவிலிருந்து பார்க்கும் படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. இலக்கியம், பண்பாடு, அரசாட்சி சார்ந்து தமிழரிடம் நிலவும் பழம்பெருமைகளையும் பெருமிதங்களையும் இந்நாவலின் பிரதானப் பாத்திரமான பாண்டியனும் அவனது நண்பர்களும் முற்றிலுமாக விமர்சித்துக் கேள்விக்குள்ளாக்குகின்ற்னர். ஈசனின் முகத்திலும் நெஞ்சிலும் பொற்பிரம்பால் விளையாடிய அரிமர்த்தனப் பாண்டியனின் நவீன உருவாகவே பாண்டியனை ப.சிங்காரம் படைத்திருக்கிறார்.
மெடானில் இருந்தாலும் பினாங்கில் இருந்தாலும் மதுரை சார்ந்து சின்னமங்கலம் சார்ந்து ஒலிக்கும் பல்வேறு குரல்கள் வழியாகக் கடைவீதிகளையும் பாலியல் தொழிலாளர்கள் குடியிருக்கும் சந்துகளையும் சிறுவர்கள் விளையாடும் மைதானங்களையும் ஊர் பொதுவிடங்களையும் குரல்கள், பேச்சுகள், நினைவின் எதிரொலிகள் வழியாகவே ப.சிங்காரம் இணைத்திருக்கிறார். தமிழ் வெகுமக்களிடையே நிலவிய பல்வேறு விதமான பேச்சுவழக்குகளைப் பரந்த அளவில் ரசமாகப் பதிவுசெய்திருக்கும் பிறிதொரு நாவல் தமிழில் இல்லை. அத்தனை மொழிகள், அத்தனை வழக்காறுகள், அத்தனை நையாண்டிகள், பகடிப்பாட்டுகள், கதைகளெல்லாம் கனவாய்ப் பழங்கதையாய் வெறும் இரைச்சல்களாக மாறி மறைந்துவிடும் என்பதைச் சொல்வதற்குத்தான் இத்தனை உரையாடல்களைத் தன் நாவலில் மறுபடைப்பு செய்திருக்கிறார்.
தமிழ் மரபும், தமிழர் வரலாற்றுணர்வும், சமகால வாழ்க்கை நம் முன்னர் பரத்திய புதிய தெருக்காட்சிகளும் வழக்காறுகளும் சேர்ந்த மொழி சிங்காரத்தினுடையது. சிலப்பதிகாரம், மணிமேகலை, பட்டினத்தார், தாயுமானவர் தொடங்கி முத்துக்குட்டிப் புலவரின் தெம்மாங்கு, பெரிய எழுத்துக் கதை, தமிழ் சினிமாவின் ஆரம்பக் கால சலனங்கள், மலேசிய, சீன, இஸ்லாமியப் பேச்சுவழக்குகள் எல்லாவற்றையும் கேட்க முடியும் ஒரு பெருநகரத்தின் சந்தையைப் போல் அது உள்ளது.
எத்தனையோ வீழ்ச்சிகளுக்குப் பின்னரும் தமிழ்ச் சமூகத்தை நீடிக்கச்செய்யும் பண்பு குறித்த ஆழமான கேள்வியை நம்மிடம் நாவல் எழுப்புகிறது. உண்மையிலேயே பழையவை மகத்துவமாகவே இருந்தாலும் இப்போது நமது நிலை என்ன என்றும் அது கேட்கிறது.
உலகம் முழுக்க பேரரசுகள் எழுந்து நிலைத்து மடிந்த கதை பேசப்படுகிறது. நகரங்களின் செழிப்பும் சிதைவும் விவரிக்கப்படுகிறது. மனிதன், கீர்த்தி என்று நம்பி அவன் அடைந்த அத்தனை வெற்றிகளுக்கும் பொருள் என்னவென்று பாண்டியன் விசாரிக்கிறான்.
அதே நேரத்தில், அத்தனை பயனின்மைக்கும் கசப்புக்கும் பரிகசிப்புக்கும் இடையில் மனிதனைப் பார்த்து, இப்போது இந்தக் கணத்தில் ஏதாவது செய், கடவுள் இல்லை, பழைய மகத்துவங்களுக்கும் பொருள் இல்லை. அதனால் வேறு வழியும் இல்லை என்றும் கிசுகிசுப்பதுபோல் உள்ளது. இது இன்றைய மனிதனுக்கும் முக்கியமான செய்திதான்.
தேய்ந்து கரைகிறது, கரைந்து தேய்கிறது, கரைந்து தேய்ந்து மறைகிறது என்பதுதான் ‘புயலிலே ஒரு தோணி’ எனக்குத் தரும் சித்திரம். யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும் வாழ்க்கையில் சாதிப்பதற்கு ஏதும் உண்டென்றால் நல்லதோ தீயதோ, செயலைத் தவிர மனிதனுக்கு வேறு நிவர்த்தி இல்லை என்கிறாரோ சிங்காரம்?
– ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT