Published : 12 Sep 2020 07:56 AM
Last Updated : 12 Sep 2020 07:56 AM
ஹாலந்தைச் சேர்ந்த வரலாற்றாய்வாளரும் எழுத்தாளருமான ரட்கர் ப்ரெக்மன், ஐரோப்பாவின் இளம் சிந்தனையாளர்களில் ஒருவர். ‘ஹியூமன்கைண்ட்’ இவரது சமீபத்திய நூல். மனித உயிர்கள் இயற்கையில் சுயநலமும் தீங்கும் உள்ளவை என்ற கருதுகோள் நம்மில் பெரும்பாலானவர்களிடம் இருக்கிறது. அதை இந்தப் புத்தகத்தில் கேள்விக்குட்படுத்துகிறார். மனிதர்கள் அடிப்படையில் நல்லுணர்வு கொண்டவர்கள் என்று நினைத்துக்கொள்வது எதார்த்தமானதும் பயனுள்ளதாகவும் இருக்கிறது என்று இவர் பொதுப்புத்திக்கு எதிராக வாதிடுகிறார்.
மனித நாகரிகம் என்பது ஒரு சிறிய அழுத்தத்தில் விரிசலுற்றுவிடும் மென்பலகை போன்றது என்ற கருதுகோளை உங்கள் நூல் கேள்விக்குட்படுத்துகிறது. உங்களது நம்பிக்கைவாதத்துக்கு வரலாற்றிலிருந்து ஒரு உதாரணத்தை அளிக்க முடியுமா?
நூற்றுக்கணக்கான உதாரணங்களை அளிக்க முடியும். 1960-களிலிருந்து இயற்கைப் பேரிடர்களுக்குப் பின்னர் நிகழ்பவை குறித்து 700-க்கு மேலான ஆய்வுகளை சமூகவியலாளர்கள் செய்துள்ளனர். சூறாவளி, சுனாமி, நிலநடுக்கம் என எல்லா நிகழ்வுகளிலும் கூட்டுணர்வு வெடித்தெழுகிறது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள் வரை, பணக்காரரிலிருந்து ஏழை வரை, இளைஞர்கள் முதல் முதியோர் வரை சேர்ந்து போராடுகின்றனர். உண்மையில் நடப்பது ஹாலிவுட் சினிமாவிலும் செய்திகளிலும் சொல்லப்படுவதற்கு நேரெதிரானது.
பேரிடருக்குப் பின்னர் மேட்டுக்குடியினருக்கு ஏற்படும் பீதி குறித்து காத்ரீனா சூறாவளி பற்றிய தனது புத்தகத்தில் ரெபக்கா சோல்னிட் பேசுகிறாரே? அதைப் பற்றி விளக்க முடியுமா?
மேல்தட்டு மக்கள் மனித இயல்பென்று பேசும்போது கண்ணாடியில் தங்களைப் பார்ப்பதுபோலத்தான் பார்த்துக்கொள்கின்றனர். தங்களைப் போலவே பெரும்பான்மை மக்களும் சுயநலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று கருதுகின்றனர். பேரிடர்கள் வரும்போது மக்கள் திருடவும் கொள்ளையடிக்கவும் செய்வார்களென்று அதனாலேயே அவர்கள் நம்புகின்றனர். அவர்கள் அதனாலேயே பீதிகொள்கிறார்கள்; காவல் துறையினரை வரவழைக்கிறார்கள். காத்ரீனா புயலின்போது, இரண்டாவது பேரிடராகக் காவல் துறையினர் அப்பாவிகள் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. பெரும்பாலான மேல்தட்டு மக்களின் உலகப்பார்வை தலைகீழானது. அவர்கள் தாங்கள்தான் தீர்வென்று கருதுகின்றனர். ஆனால், அவர்கள்தான் உண்மையில் பிரச்சினை.
மனித நடத்தையில் மோசமானதையே நாம் பெரும்பாலும் எதிர்பார்க்கிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இதற்குக் காரணமாக ஊடகங்களையும் எதிர்மறையான செய்திகளையும் கூடுதலாகப் பொறுப்பாக்குகிறீர்களே?
மோசமான சம்பவங்கள் மீதே கவனம் குவிக்கும் பரபரப்புச் செய்திகள் நமக்கு எந்த விதத்திலும் நல்லதில்லை. நம்மை ஆயாசம் கொள்ள வைத்து, அவநம்பிக்கையும் மன அழுத்தமும் கொண்டவர்களாகவே நம்மை ஆக்கும். உலகத்தை இழிந்ததாகப் பார்க்கும் குறைபாடு என்று இதை உளவியலாளர்கள் கூறுகின்றனர். ஆக்கபூர்வமான இதழியல் என்பது அதிகாரத்திடம் உண்மையைப் பேசுவது, உலகத்தைப் புரிந்துகொள்ள உதவுவது, வரலாறு மற்றும் இயற்கை குறித்த உண்மையான பார்வையை நமக்கு அளிப்பது.
‘முதல் பாவம்’ சார்ந்த கிறிஸ்தவக் கருதுகோள் மனித குலம் குறித்த அவநம்பிக்கை கொண்டிருக்கிறது. மேற்கத்திய தத்துவத்தின் இந்த எதிர்மறை நோக்கை நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். இதற்கு மாறான தத்துவப் போக்குகளை நீங்கள் காண்கிறீர்களா?
மக்கள் அடிப்படையில் சுயநலமானவர்கள் என்ற கருத்து மேற்குலகக் கலாச்சாரத்தில் வலுவான தாக்கத்தைச் செலுத்துகிறது. அதில் சில விதிவிலக்குகளும் இருந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அராஜகவாதக் கோட்பாட்டாளர் பீட்டர் க்ரோபாட்கின், மனித குலத்தின் நல்ல தன்மையில் நம்பிக்கை வைத்தவர். அந்த மனிதர்கள், அந்த அபாயகரமான கருதுகோளுக்காகவே தண்டிக்கப்பட்டார்கள். ஏனெனில், மனித இயல்பு குறித்துக் கூடுதலான நம்பிக்கைவாதம் எப்படிப்பட்டதென்று மேலே இருப்பவர்களுக்குத் தெரியும். அதனால், மனித குலத்தின் நல்ல தன்மையை நம்புவது புரட்சிகரமான செயல்பாடு.
ஹோமோ பப்பி என்ற பெயரில் உயிரியலில் பிரபலமாக இருக்கும் சோதனை பற்றிக் கூறுங்களேன்...
வளர்ப்புப் பசுக்களையும் வளர்ப்புப் பன்றிகளையும்போலவே பழக்கப்படுத்தப்பட்ட குரங்குகள்தான் மனிதர்கள் என்பதை வலுவான சாட்சியங்களோடு சொல்லும் உயிரியல் ஆய்வு இது. ஒல்லியான எலும்புகள், சிறிய மூளைகள் எனப் பழக்கப்படுத்தப்பட்ட உயிரினங்களுக்கென பொதுவான அம்சங்கள் காணப்படுகின்றன. பழக்கப்படுத்தப்பட்ட உயிரிகள், தங்கள் மூர்க்கமான மூதாதையர்களைவிட குழந்தைத்தன்மையோடும், முதிராத்தன்மையுடனும் இருக்கின்றன. இதைத்தான் மனித உயிர்களிடம் காண்கிறோம். பத்தாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம், நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மனித எலும்புக்கூடுகளை ஒப்பிடும்போது, மனித குலம் தற்போது வளர்ப்பு நாய்த்தன்மையை அடைந்துள்ளது. நாம் ஹோமோ பப்பியாக உள்ளோம். உயிரியலாளர்கள், நட்பாக உள்ளதே பிழைக்கும் என்று சொல்லத் தொடங்கியுள்ளனர். நட்பார்ந்தவர்களாக இருக்கும் மனித உயிர்கள்தான், தங்களது மரபணுவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மிகப் பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளன.
மேற்கத்திய பாணி தனிநபர் வாதத்துக்கு எதிராக உங்கள் புத்தகம் பேசுவதுபோலவும், மரபான முறையில் நீடித்திருக்கும் சமூகங்களின் அமைப்புக்கு ஆதரவாகப் பேசுவதும் போன்ற தொனி இருக்கிறதே...
மரபான என்பதன் மூலம் நாடோடி வேட்டுவ/உணவுச் சேகரிப்பு சமூகங்களை நீங்கள் குறிப்பிட்டால் அது சரிதான். தொல்லியல்ரீதியான, மானுடவியல்ரீதியான சாட்சியங்களும் நமது வரலாற்றில் பெரும் பகுதியை, சமத்துவமான, ஆதி பெண்ணிய சமூகங்களாகத்தான் நாம் வாழ்ந்திருப்பதைச் சொல்கின்றன. நாம் உணவுக்காக ஏங்குவதைப் போலவே தொடர்புக்காகவும் ஏங்குகிறோம். தனிமை என்பது நம்மை நோயுறச் செய்கிறது. சமீபத்திய ஆய்வின்படி தனிமையில் இருப்பதென்பது ஒரு நாளில் 15 சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமம். கெட்டிப்பட்ட அதிகாரப் படிநிலைகளும் ஆண்மைய மரபும் மிகச் சமீபத்தியதுதான். நாகரிகம் என்று நாம் அழைப்பது மிகப் பெரிய இடர். நாகரிகம்தான் போர்கள், அடிமை முறை, தொற்றுநோய்கள், நீண்ட வேலை நேரங்களை ஏற்படுத்தியது. மிகச் சமீபத்தில்தான் கொஞ்சம்போல விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 1980-களிலிருந்து உலகளவில் வறுமையும் குழந்தைகள் இறப்பும் குறைந்துள்ளது. ‘நாகரிகம்’ என்று சொல்வது எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கக் கூடியது என்பதே கேள்வி. பருவநிலை மாறுதல், பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துவருதல் போன்ற நிகழ்வுகளை யோசித்துப் பாருங்கள்.
நகரங்களில் உள்ளதை நாகரிகம் என்று சொல்ல முடியாது என்கிறீர்கள். இந்த மாற்றங்களிலிருந்தெல்லாம் திரும்ப ஆதிக்குச் செல்வதைப் பற்றி யோசிப்பது ரொம்பவும் வெள்ளந்தியானது இல்லையா?
நிச்சயமாக, நம்மால் பின்னால் செல்ல முடியாது. இயன்றாலும்கூட அப்படிச் செல்லக் கூடாது என்பேன். ஆனால், நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம் என்பதை அறிந்துகொள்வது முக்கியமானது. ரொம்ப காலமாக, மேற்கத்தியர்கள் தங்களது நிறுவனங்களைத் தவறாகவும், மனித இயற்கை சார்ந்த அபாயகரமான பார்வையுடனும் சேர்த்து உருவாக்கி, அதை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தும்விட்டனர். உயிரிகளாக நாம் எப்படி இருக்கிறோம் என்பது குறித்த எதார்த்தமான நோக்கு அவசியம்.
சமூகத்தின் மனிதத்துவத்தை எப்படி அணிதிரட்டுவதென்று உங்களிடம் யோசனை உள்ளதா?
மற்றவர்களைப் பற்றி நீங்கள் எதை உத்தேசிக்கிறீர்களோ அதைத்தான் பெறுவீர்கள். மிக நீண்ட காலமாக மக்கள் மோசமானவர்கள் என்ற உத்தேசத்தின் அடிப்படையிலேயே நாம் பள்ளிகள், வேலையிடங்கள், சிறைகளை உருவாக்கியிருக்கிறோம். மானுடவியலாளர்கள், சமூகவியலாளர்கள், உளவியலாளர்களிடம் புதிய, எதார்த்தமான பார்வை ஒன்று உருவாகியுள்ளது. சமூகத்தைப் பற்றி மறுயோசனையும் மறுவடிவமைப்பும் செய்யலாம் என்பதுதான் அந்தப் பார்வை. அந்தச் செயல் வெள்ளந்தியான யோசனையிலிருந்து வருவதென்று இன்று புறக்கணிக்கப்படலாம். அடிமை முறை ஒழிப்பைப் பற்றியும், ஜனநாயகத்தின் எழுச்சியையும் யோசித்துப் பாருங்கள். அவை நிகழும் வரை அசாத்தியமானதாகவே இருந்தது. ஆஸ்கர் வைல்ட் சொன்னதுபோல, முன்னேற்றம் என்பது கனவுலகம் (உடோபியா) நனவாவதுதான்.
© தி இந்து, தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT