Published : 06 Sep 2015 01:11 PM
Last Updated : 06 Sep 2015 01:11 PM

விடுபூக்கள்: தமிழ்ப் பதிப்பகத்துக்கு அங்கீகாரம்

கதை சொல்லும் நிகழ்வு

திருவண்ணாமலையில் உள்ள `குவா வாடிஸ்' பல்சமய உரையாடல் மையத்தில் எழுத்தாளர் பவா செல்லதுரை தான் படித்த எழுதிய கதைகளில்இருந்து 3 கதைகளைச் சொல்கிறார். 15 நாட்களுக்கு ஒருமுறை வெள்ளிக்கிழமைகளில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். இந்நிகழ்வை இரண்டு வருடங்கள் தொடர்ந்து நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் பதிப்பகத்துக்கு அங்கீகாரம்

`பப்ளிஷிங் நெக்ஸ்ட்' என்ற பதிப்பாளர் கருத்தரங்கு கடந்த 5 ஆண்டுகளாக கோவாவில் நடந்துவருகிறது. பதிப்பாளர் உலகம் தொடர்பான பிரச்சினை களை விவாதிக்கும் நிகழ்ச்சி இது. செப்டம்பர் மாதம் 2 நாட்கள் நடை பெறும் இந்தக் கருத்தரங்கில், சர்வதேச அளவில் பிரபலமான பதிப்பாளர்கள், பதிப்புத் தொழிலில் தொடர்புடையவர்கள் கூடி விவாதிக்கிறார்கள். கடந்த ஆண்டு முதல் ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ சார்பில் சிறந்த பதிப்பாளர், சிறந்த நூல், சிறந்த வடிவமைப்பு எனப் பல விருதுகள் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் நிபுணர் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சிறந்த பதிப்பாளர் விருதுக்கான குறும்பட்டியல் இப்போது அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் `காலச்சுவடு' பதிப்பகம் இடம்பெற்றுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய மொழிப் பதிப்பகம் காலச்சுவடு ஆகும்.

மாயத்தன்மை கொண்ட பெண்ணுடனான காதல்

சல்மான் ருஷ்டியின் அடுத்த நாவல் செப்டம்பர் 8 அன்று வெளிவர உள்ளது.

`டூ இயர்ஸ் எய்ட் மன்த்ஸ் அண்ட் ட்வெண்டி எய்ட் நைட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நாவலின் பிரதானக் கதாபாத்திரம் நிலத்துக்கு மேலே காற்றில் மிதக்கிறது. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த `இப்ன் ரூஸ்ட்' என்னும் தத்துவியலாளரை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதாபாத்திரத்தை ருஷ்டி சிருஷ்டித்துள்ளார். இப்ன் ரூஸ்ட்டின் படைப்புகள் மீது ருஷ்டியின் தந்தைக்கு அதீத பிரமை இருந்திருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் தொடங்குகிறது நாவல். துனியா என்னும் பெண் மீது அந்தத் தத்துவவியலாளருக்கு அன்னிச்சையாக ஏற்படும் காதலே நாவலாக விரிகிறது. உண்மையில் துனியா என்பவர் பெண்ணல்ல; பெண்ணாக வேடமிட்டிருக்கும் வேதாளம். இப்படி சுவாரசியமாகப் பயணப்படுகிறது நாவல்.

கவிஞர் ரவிசுப்ரமணியனுக்கு சிற்பி விருது

இந்த ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருது கவிஞரும் ஆவணப்பட இயக்குநருமான ரவிசுப்ர மணியத்துக்கு வழங்கப் பட்டுள்ளது. 90களில் இருந்து கவிதைகள் எழுதிவரும் கவிஞர் ரவிசுப்ரமணியம் ‘ஒப்பனை முகங்கள்’, ‘காத்திருப்பு', ‘காலாதீத இடைவெளியில்', ‘சீம்பாலில் அருந்திய நஞ்சு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிடுள்ளார். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, எம்.வி. வெங்கட்ராம், மா. அரங்கநாதன் ஆகியோர் குறித்த ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். ரவி சுப்ரமணியன் இசை ஞானம் உள்ளவர். பாரதி, கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான கவிஞர்கள் பலரின் கவிதைகளை இசையமைத்துப் பாடியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x