Published : 22 Aug 2020 07:39 AM
Last Updated : 22 Aug 2020 07:39 AM
கு.ப.ரா.வின் கதைகளில் அடங்கின தொனியில் வெளிப்படும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்களும் பெண் பாத்திரங்களும் தி.ஜானகிராமனின் கதைகளில் இயல்புணர்ச்சியின் சாகசத்தோடும் பெரும் அழகியலோடும் சித்தரிக்கப்படுகின்றன. இவ்விரண்டு போக்குகளின் இழைகளும், அதிகமும் பின்னவரின் அழகியலில், வண்ணதாசன் கதைகளில் தென்படுகின்றன. கூடுதலாக, 1970-களின் தொடக்க ஆண்டுகளில் உருவான, சிறுபத்திரிகைக் கதைகளின் போக்குக்கு மாறான, திராவிட இயக்க, இடதுசாரி இலக்கியப் பண்புகளான யதார்த்தம், பழசுக்கான ஏக்கம், சினிமாப் பாடல்கள், பிரதேசப் பிணைப்பு, கவிதை நடையில் கதை எழுதுதல் போன்றவையும் சேர்ந்துகொள்ள உருவானவை அவர் கதைகள். கு.ப.ரா.வின் ‘பெண் மனம்’, ‘திரை’ ஆகிய கதைகளை வண்ணதாசனின் ‘ஒருபோதும் தேயாத பென்சில்’, ‘ஒரு சிறு இசை’ ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். கேதரின் மேன்ஸ்ஃபீல்டின் ‘எ கப் ஆஃப் டீ’ (A Cup of Tea) கூடுதல் பரிமாணத்தைத் தரும். ஒரே சூழலில் மனித சுபாவங்களின் விசித்திரக் கோலங்களை அறியலாம்.
பூக்களாலும் மழையாலும் நீர்க்கோலங்களாலும் நிலவாலும் நிரம்பியது வண்ணதாசனின் கதையுலகம். அன்பும் பரிவும் அழகுணர்வும் கொண்ட எளியவர்கள் அதன் மக்கள். ஆனாலும், முற்றிலும் மனோகரமான உலகமல்ல அது. இரக்கமும் புரிதலும் காதலும் பிரியமும் இருக்கும் அதே உலகில், கீழ்மையும் உதாசீனமும் ‘படுக்காளித்தன’மும் இருக்கத்தான் செய்கின்றன. முன்னவை கூடுதலாகவும் பின்னவை குறைவாகவும் இருக்கும் உலகம் அவருடையது. அது அவர் பார்க்கும், பங்கேற்கும் உலகம். அன்பு மனிதனைக் காக்கும் என்பது அவர் எழுத்தின் சாரம். ஒரு சிறு பிரதேசமே கதைக் களமாக இருந்தும் இந்த சாரம் இடையறாமல் விரிவுகொள்கிறது.
பேரன்பு இந்தக் கதையுலகத்தை இயக்கும் விசை. தெரிந்தவர், தெரியாதவர் என்று யார் மீது வேண்டுமானாலும் அது படரும். அது உண்மையான அன்பின் விதி. ஏற்கெனவே மனதில் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கும் பிரியம் வழிந்து பாய ஒரு சிறு சம்பவம் போதும். ‘எல்லோரும் பாருங்கள், நான் அன்பு செலுத்துகிறேன்’ என்று பிரகடனம் செய்யாது அந்த அன்புயிரி. உலகத்திலேயே அதுதான் ஆகச் சிறந்த சாதாரணம் என்பதுபோலத் தொழிற்படும். அன்பை வெளிப்படுத்தும் உடல்மொழியின் நுணுக்கங்களை, சொல்லும் வார்த்தைகளைத் தவறவிடாமல் கைப்பற்றி பிரதியன்பு காட்டுபவர்கள் இந்தக் கதை மாந்தர்கள். சம வயதுள்ள பிரிய சிநேகிதியின் மடியில் படுத்து, “எங்க அம்மை” என்று கட்டிக்கொள்ளும் பெண், அந்த வார்த்தைக்குப் புது அர்த்தம் கொடுக்கிறாள். தங்களுக்கு நல்ல பழங்களைப் பொறுக்கித் தரும் அந்நியர், பஸ்ஸில் திருட முயன்றதைப் பார்த்திருக்கிறேன் என்று ரகசியமாக அப்பாவுக்குத் தெரியப்படுத்துகிறாள் மகள். “அவரு கொய்யாப்பழம் வாங்க வந்திருக்காரு. நாம் மாதுளை வாங்க வந்திருக்கோம். அவ்வளவுதாம்மா” என்று விஷயத்தை முடிக்கிறார் அப்பா. தேடித்தேடிக் காதலி ஜோதிக்குக் கொலுசு வாங்குகிறான் காதலன். ‘வாழ்க்கையால் கசக்கி எறியப்பட்ட’ இளைஞன் ஒருவன், தன் வெள்ளிக்கோப்பையை விற்கக் கடைக்கு வருகிறான். ‘உலகத்தில் அந்தப் பையனும் இருக்கிறான். ஜோதியும் இருக்கிறாள். நானும் இருக்க வேண்டியதிருக்கிறது’ என்று குற்றவுணர்வோடு வெளியேறுகிறான் காதலன்.
பெண்களுக்கே உரிய உயிர்ப் பண்புகளான உள்ளுணர்வும் முதிர்ச்சியும் குறும்பும் கொண்ட பாத்திரங்கள் இந்தக் கதையுலகை ஆள்கிறார்கள். கல்யாணத்துக்கு வந்தவன் மீது ‘கையில் இருக்கிற தாம்பாளத்திலிருந்து சந்தனத்தை ஒரு விரலால் தொட்டுச் சுண்டிவிட்டு’ப் போவதோடு அவனைக் கேலிசெய்யும் கல்யாணமான பெண்; தன் கணவன் தன் அக்காவைக் கட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்று – ‘அது எதனால் என்று தெரியாது. ஆனால், அப்படித்தான் அது’ – விரும்பும், கணவனை மிகவும் நேசிக்கும் மனைவி; சூம்பிய கால்களோடு பிறந்த கன்றுக்குட்டியை எல்லோரும் அவநம்பிக்கையில் கைவிட, அதன் முகத்தைத் தடவிக் கொடுத்து, உடம்பை நீவிவிட்டு, கால்களை உருவிவிடும், தொங்கிப்போன கால்கள் கொண்ட குழந்தையின் தாயவள், பூக்காரி; பதினாறு வயதில் விதவையாகி, தன் கணவனின் சந்தன நிற சட்டையை முகர்ந்து பார்க்கும் சகோதரியைக் கோபிக்காமல் கட்டிக்கொண்டு அழுபவளும், அவளின் அழகான ஃபோட்டோவைத் தன் பெட்டிக்குள் கணவனின் சட்டையின் மேல் வைத்துவிட்டு இறந்துபோனவளுமான அம்மாச்சி; ருக்மணி ஸ்ரீ என்ற தன் பெயரை ‘ருக்கி அம்மா’ என்று அலுவலகப் பணிப் பெண் சொல்வதாலேயே அவள் மீது பிரியம் கொண்டு, அவளைச் சிநேகிதியாக்கி பல உதவிகளையும் செய்யும் அலுவலர் என்று பல வார்ப்புகள்.
மென்மையான மனிதர்களுக்கு மென்மையான மொழிதானே பொருந்தும்? உரைநடைப் புனைவை கவிதைரீதியில் எழுதும் வண்ணதாசனின் சித்தரிப்பில் நுண்ணியக் காட்சிகள் சரளமாகக் கண்ணில் விழும். ‘கண்கள் கலங்கும்போது எதையாவது அசையாமல் பார்க்கத்தானே தோன்றும்’, ‘யார் இப்படி நிலவை ஏறிட்டுப் பார்த்தாலும் அவர்களுடைய முகம் அழகாகிவிடும்போல’, ‘பிரயத்தனம் இல்லை, அலட்டல் இல்லை, செடி அசைவது மாதிரி, பறவை இடம்பெயர்வது மாதிரி தன்னிச்சையாக இருந்தது எல்லாம்’ என்பவைபோல. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு, சொல்ல வந்ததிலிருந்து அவ்வப்போது விலகி, நகரும் எழுத்தில் திளைப்பது அவர் பாணி. வீட்டுக்கு வந்த சிநேகிதியை இழுத்துச் சேர்த்துப் பிடிக்கிறாள் தோழி. “பாருங்க அணில் குஞ்சு மாதிரியே தோள்ல தொத்த ஆரம்பிச்சுட்டா” என்று தோழியின் கணவனிடம் சிநேகிதி சொல்கிறாள். உடனே அணில் தொடர்பான கனவு, அது உண்ணும் விதம் என்று தொடங்கி, கணினித் திரையில் பச்சைக்கிளிகள், சத்தம் கேட்காமல் சுழலும் இசைத்தட்டு, தோழியும் சிநேகிதியும் அவரும் வாத்திய இசை ஒலிக்கும் சச்சதுர லிஃப்ட்டில் ஒன்றாக நிற்பதான கற்பனை, சிநேகிதியின் புடவை டிசைனில் இருக்கும் வளையங்கள் கிளர்த்தும் வளையல் கடை, வளையல் அடுக்குகள், அவை உருண்டால் பிடிக்கத் தயாராக இருத்தல் என்று ஒரு படிமத் தொடர், கதைப் போக்கில் அவர் மனதில் உருவாகிறது. இந்தப் படிம நெரிசலால் கதையின் அழுத்தம் குறைகிறது, வாசகனின் இணை படைப்புச்செயல் மட்டுப்படுகிறது என்பதையும் சொல்ல வேண்டியிருக்கிறது.
- ஆர்.சிவகுமார், ‘வசைமண்’ உள்ளிட்ட நாவல்களின் மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புக்கு: sivaranjan51@yahoo.co.in
ஆகஸ்ட் 22: வண்ணதாசனின் 75-வது பிறந்த நாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT