Published : 15 Aug 2020 07:21 AM
Last Updated : 15 Aug 2020 07:21 AM
இந்தியாவின் இருண்ட காலம்
சசி தரூர்
தமிழில்: ஜே.கே.இராஜசேகரன்
கிழக்குப் பதிப்பகம்
ராயப்பேட்டை, சென்னை–14.
தொடர்புக்கு: 044 – 42009603
விலை: ரூ.500
இன்று இந்தியா விடுதலை பெற்ற 74-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். 1757-ல் பிளாசிப் போரில் தொடங்கி 1818-ல் மூன்றாம் மராத்தா போர் வரை தொடர்ந்து பல்வேறு போர்களின் மூலம் இந்தியாவை முழுமையாகக் கைப்பற்றிய கிழக்கிந்திய கம்பெனி முடிவற்ற சுரண்டலைத் தொடர்ந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1947-ல் இந்தியா விடுதலை பெற்றது. இடைப்பட்ட காலத்தில் இந்திய மண்ணின் வளங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் செழுமைக்கு வித்திட்டதும் வரலாற்று உண்மை.
இந்தப் பின்னணியில்தான் 2015 மே இறுதியில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் சார்பில் ‘தனது முன்னாள் காலனி நாடுகளுக்கு இழப்பீடு தர வேண்டிய கடமை பிரிட்டனுக்கு உள்ளதா... இல்லையா?’ என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற்றது. பிரிட்டனின் முன்னாள் காலனி நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஒருபுறமும், பிரிட்டனைச் சேர்ந்த அறிஞர்கள் ஒருபுறமும் என இந்த விவாதம் சூடாக நடைபெற்றது. இந்தியாவின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் பங்கேற்று “200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் வளத்தை அபரிமிதமாகக் கொள்ளையடித்தது பிரிட்டன். ஜாலியன் வாலா பாக் சம்பவத்துக்காக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதன் முடிவற்ற 200 வருடச் சுரண்டலுக்கு ஓர் அடையாள இழப்பீடாக ஆண்டொன்றுக்கு ஒரு பவுண்ட் என்ற விகிதத்தில் தொடர்ந்து 200 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு வழங்க வேண்டும்” என்று வாதிட்டார். அந்த விவாத அரங்கில் பிரிட்டிஷ் காலனி நாடுகள் முன்வைத்த வாதமே இறுதியில் வென்றது.
இந்த நிகழ்வின் காணொளிக் காட்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சசி தரூருக்கு அனுப்பி வைத்தபோது அதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் பதிவு இணைய உலகில் வைரலானது. காணொளியில் பார்த்த அன்றைய நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அரசு நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூரைப் பாராட்டினார். பிரதமர் மோடியும் “சரியான இடத்தில் சரியான விஷயங்களை முன்வைத்து இந்தியாவின் குரலை எதிரொலித்திருக்கிறீர்கள்” என்று பாராட்டினார். இதைத் தொடர்ந்து, காலனி ஆதிக்கத்தின் கொடுமைகள் குறித்த விவாதம் இணையத்தில் சூடாக நடைபெற்றது. பின்னர், பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளியான சசி தரூரின் பேட்டிகள் மேலும் இந்த விஷயத்துக்கு மெருகூட்டின.
இந்நிலையில், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்துத் தனியொரு நூலாக சசி தரூர் எழுதியதுதான் ‘இந்தியாவின் இருண்ட காலம்’. ஜே.கே.இராஜசேகரன் மொழியாக்கத்தில் ‘கிழக்கு’ பதிப்பகம் தமிழுக்குக் கொண்டுவந்தது. இந்நூல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் விரிவான பதிலை ஆதாரங்களோடு முன்வைக்கிறது. மேற்கத்தியக் கல்வி, ஜனநாயகம், முதலாளித்துவம் ஆகிய புதிய அம்சங்களைக் காலனி ஆட்சி இந்தியாவுக்குக் கொடையாக வழங்கியது போன்ற வாதங்களைத் தவிடுபொடியாக்குகிறது.
இந்தியாவின் வளங்களைச் சுரண்ட வழியமைத்துத் தந்த எண்ணற்ற சிற்றரசர்கள், பண முதலைகள் ஆகியோரின் சுயநல நடவடிக்கைகள் எவ்வாறு கிழக்கிந்திய கம்பெனியும், அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசும் ஆதிக்கம் செலுத்த வழியமைத்துத் தந்தன என்பதை விரிவாக எடுத்துக்கூறுகிறது. நம் நாடு இன்று எதிர்நோக்கும் இன்னல்களுக்குத் தீர்வுகாண நமது கடந்த காலத் தவறுகளை மீண்டும் அசைபோட்டு, ஆய்வுசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்நூல் நம் முன் வைக்கிறது.
190 வருடக் காலனி ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் தொடர்ந்து பல ஆண்டுகள் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டன. பஞ்சமும் வறட்சியும் ஏற்படும் ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கில் மக்கள் மடிந்துபோயினர். இதற்கெல்லாம் அன்றைய ஆட்சியாளர்களின் இரக்கமற்ற வியாபார நோக்கமே அடித்தளமாக இருந்தன என்பதை ஆழமாகவும் விரிவாகவும் இந்நூல் எடுத்துக்கூறுகிறது. கடந்த காலத்தை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அது சமகாலத்தை அணுகுவதற்கான பார்வையையும் வழங்குகிறது. அதன் வழியாக, இன்றைய நெருக்கடியான தருணத்தின் ஆணிவேராகத் திகழும் ஏகபோக வர்த்தகத்தின் விளைவு எவ்வாறாக இருக்கும் என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.
- வீ.பா.கணேசன், தொடர்புக்கு: vbganesan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT