Published : 08 Aug 2020 07:43 AM
Last Updated : 08 Aug 2020 07:43 AM
ரோமானியர்கள் காலத்திலிருந்தே இந்தியாவின் நறுமணப் பொருட்களும் துணி ஆடைகளும் மேற்கத்திய உலகத்தின் கவனத்தை ஈர்த்தபடி இருந்துவந்துள்ளன. ஸ்பானிய, போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு, டச்சு கடல் வணிகர்களுக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனி, ஔரங்கசீப் காலத்தில் இந்தியாவில் கால் பதித்தது; படிப்படியாக ஒட்டுமொத்த நாட்டையே கபளீகரம் செய்தது. மொகலாயர் கால ஆட்சி குறித்துப் பல நூல்களை எழுதியுள்ள வில்லியம் டால்ரிம்பிளின் இந்நூல், கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவின் வளத்தைச் சுரண்டி பிரிட்டனின் முன்னேற்றத்துக்கு அதை எவ்வாறு அடியுரமாக மாற்றியது என்பதை விரிவாக விவரிக்கிறது.
கிழக்கிந்திய கம்பெனி 1599-ல் ஒரு பங்கு வர்த்தக நிறுவனமாக இங்கிலாந்து அரச முத்திரையுடன் அன்றைய மொகலாய அரசர் ஔரங்கசீப் அனுமதி பெற்று, சூரத் நகரில் தனது வர்த்தக மையத்தைத் தொடங்கியது. பின்பு மசூலிப்பட்டினம், மதராஸ், கல்கத்தா என வர்த்தக மையங்களைப் படிப்படியாகக் கட்டியெழுப்பியது. இந்தியாவின் நறுமணப் பொருட்கள், துணி ஆகியவற்றைக் கொள்முதல் செய்து, பங்குதாரர்களுக்கு லாபம் ஈட்டிவந்தது. இன்னொரு புறம், தனக்குப் போட்டியாக இங்கு வணிகம் செய்துவந்த பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, டச்சு வணிக நிறுவனங்களுடன் ஆயுதங்களைக் கொண்டு போரிட்டுத் தனது இருப்பை நிலைநாட்ட வேண்டியிருந்தது.
இந்த கம்பெனியில் ஓர் எழுத்தராக அன்றைய மதராஸில் கால்பதித்த ராபர்ட் கிளைவ், மிக விரைவிலேயே தனது சிறப்பான போர்த் தந்திரங்களின் மூலம் பிரெஞ்சு கம்பெனியைப் புதுச்சேரியோடு ஒடுங்கியிருக்கும் நிலைக்கு ஆழ்த்தினார். கல்கத்தாவில் இருந்த அதன் செயலகமான வில்லியம் கோட்டையை வங்க நவாப் சிராஜ் உத்தவ்லா தாக்கி அழித்தபோது, மீட்பு நடவடிக்கைக்காக கல்கத்தா சென்றார் கிளைவ். அங்கிருந்த நிதி வர்த்தகர்களின் உதவியுடன் 1757-ல் ப்ளாசி போரில் நவாப்பைத் தோற்கடித்து வங்கத்தைத் தன் கைக்குள் கொண்டுவந்ததில்தான் கம்பெனியின் வளமான எதிர்காலத்துக்கான அடித்தளம் இடப்பட்டது. அதன் பிறகு, இங்கிருந்த குறுநில மன்னர்கள், மொகலாய ஆட்சியில் ஜகத் சேத் என்ற பட்டம்பெற்ற நிதி வர்த்தகர்கள் ஆகியோர் ஒவ்வொரு கட்டத்திலும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எல்லா வகையிலும் உதவினார்கள். படிப்படியாக நாடு முழுவதிலும் அது தன் அதிகாரத்தை நிலைநாட்ட வழிவகுத்தனர். இதை இந்நூல் விரிவாக விவரிக்கிறது. 1818-ல் முடிவடைந்த மூன்றாவது ஆங்கிலேய-மராத்தியப் போருக்குப் பிறகு இந்தியாவின் அனைத்துப் பகுதிகளும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்குள் வந்துசேர்ந்தன. அப்போது கம்பெனிப் படையினரின் எண்ணிக்கை 2,00,000. இது அன்றைய பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த படைவீரர்களைப் போல் இரண்டு மடங்கு. ஐரோப்பியர்களின் எண்ணிக்கையோ மிகவும் சொற்பம். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்றும், சிப்பாய் கலகம் என்றும் அழைக்கப்படும் 1857 எழுச்சியின்போது கம்பெனியிடம் 3,00,000 இந்தியச் சிப்பாய்களும் 50,000 ஐரோப்பிய வீரர்களும் இருந்தனர். பின்னர், பிரிட்டிஷ் அரசி விக்டோரியா இந்தியாவின் நேரடிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், இந்தப் படைகள் பிரிட்டிஷ் அரசுப் படைகளாக நிலைபெற்று இந்திய மக்களின்மீது மேலும் 90 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தின.
இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்தியா வந்த வணிக நிறுவனம், எப்படிப்பட்ட கட்டமைப்பைக் கொண்டது தெரியுமா? லண்டன் நகரில் வெறும் ஐந்து ஜன்னல்கள் அகலம் மட்டுமேயுள்ள ஒரு சிறு கட்டிடத்திலிருந்து செயல்பட்டுவந்த கம்பெனி அது. அதுதான் அன்றைய மொகலாய ஆட்சியின் படிப்படியான சரிவைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, இமயமலை அடிவாரத்திலிருந்து இந்தியப் பெருங்கடல் முனை வரை தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தது. இந்த அசாத்தியமான வரலாற்றைச் சுவாரஸ்யமாகப் பேசுகிறது இந்நூல்.
பிரிட்டன் என்ற சிறியதொரு நாட்டை ஏகாதிபத்திய நாடாக மாற்றுவதற்குப் பேருதவி புரிந்த கிழக்கிந்திய கம்பெனி, இந்திய மக்களைக் கொடூரமாகச் சுரண்டியது. அதே நேரத்தில், தனது கொடுங்கோல் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நியாயப்படுத்தும் வகையில் அதன் உறுப்பினர்களின் மீதும் செல்வாக்கு செலுத்தியது. இதை வரலாற்றுத் தரவுகளுடன் கூறியுள்ளார் வில்லியம் டால்ரிம்பிள். இன்றைய பன்னாட்டு நிறுவனங்களின் அளப்பரிய செல்வாக்கை நமக்கு நினைவுபடுத்தும் வகையிலும் அவற்றை நம் முன் வைத்துள்ளார். காலந்தோறும் அரசுகள், வர்த்தக நிறுவனங்கள், இயற்கை வளங்கள் மனித இனத்தைப் பேரழிவை நோக்கி இழுத்துச் செல்கின்றன என்ற பின்னணியில் ஆழ்ந்து படிக்க வேண்டிய நூல் இது.
- வீ.பா.கணேசன், தொடர்புக்கு: vbganesan@gmail.com
தி அனார்க்கி வில்லியம் டால்ரிம்பிள் ப்ளூம்ஸ்பரி வெளியீடு விலை: ரூ.699 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT