Published : 01 Aug 2020 09:31 AM
Last Updated : 01 Aug 2020 09:31 AM

பிறமொழி நூலகம்: மனிதர்களை நம்புங்கள்

ஹ்யூமன்கைண்ட்: அ ஹோப்ஃபுல் ஹிஸ்ட்ரி
ருட்கர் ப்ரெக்மன்
ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் வெளியீடு
விலை: ரூ. 699

மனித குல வரலாற்றைப் பேசும்போது படையெடுப்பு, போர் போன்ற மனிதனின் அதிகாரவேட்கையும் வன்முறை குணமும் வெளிப்படும் நிகழ்வுகள்தான் முதன்மைப்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே, மனிதன் இயல்பிலேயே வன்முறையாளன் என்றும், சுயநலமிக்கவன் என்றும் கூறப்படுகிறது. நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும்போது மனிதனின் உள்ளார்ந்த தீக்குணங்கள் விழித்துக்கொள்கின்றன என்பதே போர், இன அழிப்பு, கலவரம் போன்ற மானுட அழிவு நிகழ்வுகளின் மீதான வரலாற்றுப் பார்வையாகப் பொதுவாக இருக்கிறது. மனிதனின் உளவியல் சார்ந்து சென்ற நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் மனிதன் இயல்பிலே தீக்குணம் மிக்கவன் என்பதை உறுதிசெய்யக்கூடியதாக இருக்கின்றன.

இது உண்மை அல்ல என்கிறது சமீபத்தில் வெளிவந்த ‘ஹ்யூமன்கைண்ட்: அ ஹோப்ஃபுல் ஹிஸ்ட்ரி’ புத்தகம்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் சிந்தனையாளரான ருட்கர் ப்ரெக்மனின் இந்தப் புத்தகம், மனிதனின் ஆதார குணம் குறித்து இதுவரை முன்வைக்கப்பட்ட பார்வைகளைக் கேள்விக்குட்படுத்துகிறது. ‘அடிப்படையிலேயே மனிதன் மிகவும் நல்லவன். பேரழிவுக் காலகட்டத்தில் மனிதனின் அடிப்படை குணமான மனிதமே முன்னின்றிருக்கிறது. மனிதனைத் தீங்கானவனாகக் காட்டும் அனைத்து ஆய்வுகளும் புத்தகங்களும் தவறான கண்ணோட்டத்துடன் மட்டுமல்லாமல், முன்முடிவுகளுடன் அணுகுகின்றன. அதன் வெளிப்பாடாகவே மனித குலம் மீதான நம்பிக்கையற்ற பார்வை உருவாகியிருக்கிறது’ என்று புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ப்ரெக்மன். மனிதனின் உளவியல் சார்ந்து கடந்த நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை எடுத்துக்கொண்டு அந்த ஆய்வு உருவாக்கத்தில் இருக்கும் பிழைகளையும் உள்நோக்கங்களையும் ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டுகிறார்.

மனிதன் அடிப்படையில் நல்லவன் எனில் போர், வதை முகாம் எல்லாம் எப்படி உருவாகின? வன்முறை, கலவரங்களில் பங்கேற்க எவை உந்தித்தள்ளுகின்றன? சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய மானுட அழிவான ஆஷ்விட்ச் வதைமுகாமில் யூதர்களைச் சித்ரவதைக்கு உட்படுத்தியது ஜெர்மனியின் சாதாரண மக்கள்தான். ஆசிரியராக, மருத்துவராக, சுகாதாரப் பணியாளராக இருந்தவர்கள் சக மக்களை அழிக்கும் நிலைக்கு எப்படிச் சென்றனர்? ஜெர்மானிய மக்கள் தாங்கள் செய்யும் செயல் நாட்டுக்கானது என்று நம்பவைக்கப்பட்டனர். அதை ஏற்கும் மனநிலை படிப்படியாக உருவாக்கப்பட்டது. அவர்கள் அந்த அழிவை நல்ல நோக்கத்துக்குச் செய்வதாக உறுதியாக நம்பினர். அந்த நிகழ்வு ஒட்டுமொத்த ஜெர்மானியர்கள் குறித்தும் எதிர்மறையான பிம்பத்தைத் தோற்றுவித்தது. ஆனால், யதார்த்தம் வேறு. இரண்டாம் உலகப் போரில் 20%-க்கும் குறைவான வீரர்களே தங்கள் துப்பாக்கிகளை வெடிக்கச் செய்தனர். மற்றவர்கள் தங்கள் எதிரியாக அடையாளப்படுத்தப்பட்டவர்களை நேருக்கு நேர் பார்த்தபோது சுட முடியாமல் திணறினர். மிகக் குறைந்த விகிதத்தினரே அதிகாரத்துக்காக அழிவின் எல்லைக்கும் செல்கிறார்கள். பெரும்பான்மையோர் தங்கள் செயல் குறித்த சந்தேகத்தைக் கொண்டிருக்கின்றனர். ப்ரெக்மனின் இந்த வாதம் புதிய பார்வைக்கு உதவுகிறது.

சக மனிதனின் நடத்தை எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் அவனை நீங்கள் கண்ணியமாக நடத்தி தார்மீகமாக உரையாடினால் அவன் மனமாற்றம் அடைவான். அதுவே மனிதனின் அடிப்படை இயல்பு. அதற்கு காந்தியையும் நெல்சன் மண்டேலாவையும் உதாரணம் காட்டுகிறார். நடப்பு உதாரணமாக, அமெரிக்காவின் சிறைச்சாலை அமைப்பையும், நார்வேயின் சிறைச்சாலை அமைப்பையும் ஒப்பிடுகிறார். நட்சத்திர விடுதி போன்று இருக்கிறது நார்வே சிறை அறை. அங்கு சிறைக் கைதிகள் மிகுந்த மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படுகிறார்கள். காவலர்களும் கைதிகளும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறார்கள். அமெரிக்கச் சிறைச்சாலைகளில் நிலை நேர்எதிர். அங்கு கைதிகள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தப்படுகின்றனர். விளைவாக, அமெரிக்கக் கைதிகள் வெளியே வந்ததும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். நார்வேயில் கைதிகள் குற்ற மனநிலையிலிருந்து விடுபடுகிறார்கள்.

‘சேப்பியன்ஸ்’ புத்தகத்தில் யுவால் நோவல் ஹராரி மனித குல வரலாற்றைக் கழுகுப் பார்வையில் விவரித்துச் செல்கிறார். அதில் மனித குலத்தின் இயங்கியலைப் பதிவுசெய்யும் அவர், மனிதம் என்பதைக் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல, பொதுவாகவே மனித குல வரலாற்றைத் தொகுத்துச் சொல்லும் படைப்புகள் பலவும் மனிதத்தைப் பொருட்படுத்துவதில்லை. இந்தப் பார்வைக்கு மாற்றாக வந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

ஒட்டுமொத்தமாக, மனித அழிவுகளாக நிலைநிறுத்தப்பட்ட வரலாற்று நிகழ்வுகளுக்குப் புதிய அர்த்தம் வழங்குகிறது இந்தப் புத்தகம். நாம் அவநம்பிக்கையின் வழியே அல்ல, நம்பிக்கையின் வழியே மனித குல வரலாற்றை மீள் வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x