Published : 23 Jul 2020 04:43 PM
Last Updated : 23 Jul 2020 04:43 PM
வயலின் மேதை லால்குடி ஜெயராமனால் 1979 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது லால்குடி அறக்கட்டளை. பாரம்பரியமான வயலின் தயாரிக்கும் கலைஞர்களை இந்திய இசை உலகத்தின் மைல்கல்லாக உருவாக்கியிருக்கிறது லால்குடி அறக்கட்டளை. அதன் முக்கியமான தருணங்களைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார் லால்குடி அறக்கட்டளையின் நிறுவனரும் வயலின் வித்வானுமான லால்குடி கிருஷ்ணன்.
“மும்மூர்த்திகளின் காலத்திலேயே நம்முடைய இசைப் பாரம்பரியத்தில் வயலின் வந்துவிட்டது. அதற்கு முன் வீணை, புல்லாங்குழல்தான் வழக்கத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் வயலின் நம்மிடையே வந்தது.
வராகப்பய்யர், முத்துசாமி தீட்சிதரின் தம்பி பாலசாமி தீட்சிதர், தஞ்சை நால்வரில் இளையவரான வடிவேலு, தியாகராஜரின் சீடரான கிருஷ்ணசாமி பாகவதர் ஆகியோரின் முயற்சியால்தான் நம்முடைய கர்னாடக இசைக்கு வயலின் வந்தது.
வயலினில் ஏதாவது கோளாறு ஏற்பட்டுவிட்டால் அதை இங்கே சரிசெய்வதற்கு சரியான ஆள் இல்லை. நாங்கள் வாசிக்கும் வயலினில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், வெளிநாட்டில் கச்சேரி வாசிக்கப் போகும்போது, பழுதடைந்த வயலினையும் சரிசெய்துவருவோம். கர்னாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் தேவைப்படும் இசைக் கருவியாக வயலின் இருந்தாலும், அதைப் பழுது பார்ப்பதற்கு இங்கு சரியான ஆட்கள் இல்லை என்பதே உண்மை. இதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் என் மனத்தில் அவ்வப்போது தோன்றி மறைந்த வண்ணம் இருந்தது.
அமெரிக்காவில் ஒரு கச்சேரிக்கு நான் சென்றபோது, அங்கே, சான்டா பார்பராவில் இருக்கும் என்னுடைய சீடன் சரவணன் ப்ரியன் மூலமாக வயலின் கலைஞரும் பாரம்பரியமான முறையில் வயலினைத் தயாரிக்கும் கைவினைக் கலைஞருமான ஜேம்ஸ் விம்மரின் அறிமுகம் கிடைத்தது.
விம்மரின் தேடல்
ஜேம்ஸ் விம்மரின் வீட்டுக்கு நான் சென்றிருந்த போது, அப்பா (லால்குடி ஜெயராமன்) வாசித்த ஒரு ‘கம்போசிஸனை’ அவர் கேட்டுக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஜேம்ஸ் இந்தியாவில் காசிக்கு வந்து ஒருவரிடம் கர்னாடக இசைப் பயிற்சி பெற்றுச் சென்றிருப்பதையும் கூறினார்.
ஓர் அமெரிக்கரான ஜேம்ஸ் விம்மர் வயலின் மீதுள்ள காதலால் அதைத் தயாரிக்கும் பாரம்பரிய ஜெர்மானியக் கலைஞர்களை நாடிச் சென்றிருக்கிறார். ஜெர்மனியில் தலைமுறை தலைமுறையாக அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் வயலின் தயாரிக்கும் கலையைக் கற்றுக் கொடுத்துவந்து வயலின் தயாரிக்கும் மேதையான ஒல்ஃப்கங் யபல் என்பவரிடத்தில் இந்தக் கலையைப் பெரும் இன்னல்களுக்கு இடையில் கற்றுத் தேறியிருக்கிறார். ஒல்ஃப்கங் யபல் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்று, ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் அங்கேயே தங்கியிருந்து அந்தக் கலையை ஜேம்ஸ் கற்றிருக்கிறார்.
அவரின் செலவுக்கு ஜெர்மனியின் வீதிகளில் வயலின் வாசித்து, அதில் வரும் வருமானத்தில் காலத்தைக் கழித்திருக்கிறார். பல நாடுகளில் பல மேடைகளில் வயலின் வாசித்திருக்கும் ஜேம்ஸ் ஒரு கட்டத்தில் வயலின் வாசிப்பதையே நிறுத்திவிட்டு, வயலின் பழுது பார்ப்பதிலும் பாரம்பரியமான வயலின் தயாரிப்பதிலுமே கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவர் தங்கியிருந்த கலிபோர்னியாவின் சான்டா பார்பராவிலேயே வயலினில் ஏற்படும் பழுதுகளை நீக்குதல் மற்றும் வயலின் தயாரிக்கும் கடையை நடத்திவந்தார்.
விடையான விம்மர்!
ஜெர்மனியின் பாரம்பரியமான வயலின் தயாரிக்கும் கலையை அறிந்திருந்த ஜேம்ஸ் விம்மரிடம், “எங்கள் இந்தியாவுக்கும் நீங்கள் இந்தக் கலையைச் சொல்லித்தருவீர்களா, இந்தியாவுக்கு வரமுடியுமா?” என்று கேட்டேன்.
விம்மர் மகிழ்ச்சியோடு, ‘இந்தியாவுக்கு வருகிறேன்’ என்றார். இப்படித்தான் அந்த மகத்தான கலைஞரை இந்தியாவுக்கு அழைத்துவந்து பாரம்பரியமான வயலின் தயாரிப்பு பயிற்சிப் பட்டறைகளை ஐந்து ஆண்டுகள் நடத்தினோம். 2013, 2015, 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வயலின் தயாரிப்புப் பட்டறைகள் நடந்தன. இரண்டு ஆண்டுகள் கலாஷேத்ராவுடன் இணைந்து லால்குடி அறக்கட்டளை இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. சார்ட்டட் அக்கவுண்டட் விக்ரம், ரெஸிடென்ஸி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரவி அப்பாசாமி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஆகியோர் இந்த மகத்தான பணிக்குப் பெரும் உதவிகளைச் செய்தனர்.
தடைக்கற்களைப் படிக்கற்களாக்கினோம்!
2013-ல் லால்குடி ஜெயராமன் அறக்கட்டளை சார்பாக இந்தப் பயிற்சிப் பட்டறையைத் தொடங்கிவைத்த என்னுடைய அன்னை மறைந்தார்.
சோகம் நிறைந்திருந்தாலும் பயிற்சிப் பட்டறையை அவர் விருப்பம் போலவே தொடர்ந்து நடத்திமுடித்தோம். 2015-ல் பயிற்சிப் பட்டறையை முடித்து ஜேம்ஸ் விம்மர் புறப்படவிருந்த நேரத்தில், நகரை வெள்ளம் சூழ்ந்தது. பதற்றத்தில் அவருக்கு ஏற்பட்ட பார்வைக் கோளாறையும் சங்கர நேத்ராலயாவில் சரிசெய்து அவரை அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தோம்.
அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் அவருடைய இருப்பிடத்தை வேறு இடத்துக்கு மாற்றிய சூழ்நிலையில் அந்த ஆண்டு அவரால் இந்தியாவில் பயிற்சிப் பட்டறையை நடத்தமுடியாமல் போனது. இப்படிப் பல வித இன்னல்களை நாங்கள் எதிர்கொண்டு, ஆர்.முரளி, வினய் முரளி, ரெஞ்சித் லீலா சந்திரன், சத்தியநாராயணா ஆகிய நான்கு பாரம்பரியமான வயலின் தயாரிக்கும் கலைஞர்களை இந்தியாவுக்குப் பொக்கிஷங்களாகக் கொண்டுவந்துள்ளோம்.
விருட்சமாகுமா விதைகள்?
லால்குடி அறக்கட்டளை சார்பாக 2013-ல் இருந்து இந்தப் பயிற்சிப் பட்டறையில் பங்கெடுத்தவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் உதவித் தொகையையும் வழங்கினோம்.
இத்தாலி போன்ற நாடுகளில் மட்டுமே விளையும் மேப்பில் மரத்தில்தான் பாரம்பரியமான வயலின் வாத்தியங்கள் ஜெர்மனியில் உருவாக்கப்படுகின்றன. ஆகவே, ஜெர்மனியின் பாரம்பரியமான கைவினைக் கலைஞர்கள் பயன்படுத்தும் மேப்பில் மரத் துண்டுகள், வயலின் செய்வதற்குத் தேவையான பிரத்யேகமாக ஜெர்மனியில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், வயலினைச் செய்வதற்கு உதவும் கருவிகளுடன்கூடிய ‘ஒர்க்-பென்ச்’ என்று சொல்லப்படும் சிறிய தொழிற்கூடம் போன்ற ஒரு அமைப்பையும், நூற்றுக்கணக்கான மாணவர்களிலிருந்து இறுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பேருக்கு லால்குடி அறக்கட்டளையின் சான்றிதழுடன் வழங்கினோம்.
அரசுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி!
இந்த நால்வரும் ஜெர்மனியில் மட்டுமே செய்யப்படும் பாரம்பரியமான வயலினை இந்தியாவிலும் உருவாக்கக் கூடிய விதைகள். ஆனால், இந்தியாவுக்கு இந்த நான்கு பேர் போதுமா? அரசின் பார்வை இவர்கள் மீது விழுந்தால், இவர்களால் இந்தக் கலையைப் பலருக்கும் சொல்லித் தர முடியும். பாரம்பரியமான வயலின் தயாரிப்பில் இந்தியாவின் நேர்த்தியை உலக நாடுகளுக்குப் புரியவைக்க முடியும்.
அரசு இந்தக் கலைஞர்களுக்கும் லால்குடி அறக்கட்டளைக்கும் வயலின் தயாரிப்புக்கு வேண்டிய மரம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வதற்கு உதவிகளைச் செய்தால், ஜெர்மனியில் தயாரிக்கப்படும் பாரம்பரியமான வயலினின் தரத்தில் நம்மாலும் தயாரிக்கமுடியும். அத்தகைய வயலினின் விலை, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளில் 9 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது. நாம் அதற்கான பொருட்களை மட்டும் தருவித்து, இந்தியாவிலேயே அதற்கு இணையான வயலினைத் தயாரித்து அதைவிடக் குறைந்த விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதியே செய்யமுடியும். இதன் மூலம் நாட்டுக்குக் கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியும் கிடைக்கும். இதற்கு அரசாங்கம், இந்தக் கலைஞர்களுக்கு வட்டியில்லாக் கடன் உதவி அளிக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்காமல் இருப்பது போன்றவற்றைச் செய்யலாம். தரமான வயலின் தயாரிப்புகளால் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் பரவும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT