Published : 03 Sep 2015 10:48 AM
Last Updated : 03 Sep 2015 10:48 AM

வீடில்லாப் புத்தகங்கள் 48: ரத்த சாட்சியம்!

இந்திய பாகிஸ்தான் பிரிவினை யின்போது ஏற்பட்ட வன்முறை, துயரங்கள், குரூரங்கள் குறித்து எழுதியவர்களில் சதத் ஹசன் மண்டோ வும் கர்த்தார் சிங் துக்கலும் முக்கிய மானவர்கள். உருது இலக்கியம் பிரிவினையின் துயர நிகழ்வுகள்குறித்த சிறப்பான படைப்புகளைக் கொண் டுள்ளது.

பிரிவினை குறித்து காந்தியடிகள் ‘‘என் பிரேதத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்பட வேண்டும்” எனக் கூறினார். ஆனால், அவரது வேண்டு கோள் யாராலும் கண்டுகொள்ளப்படவே இல்லை.

பிரிவினையின்போது ஏற்பட்ட மதக் கலவரங்களால் அதிகம் பாதிக்கப்பட்டது லாகூர், அமிர்தசரஸ், பஞ்சாப் பகுதி களே. லட்சக்கணக்கில் மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறினார்கள். எல்லையைக் கடந்துசெல்ல மாட்டுவண்டிகளிலும், கால்நடையாகவும் கையில் கிடைத்த வற்றைத் தூக்கிக்கொண்டு நடந்தார்கள். பிரிவினையின்போது கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்தில் இருந்து 10 லட்சத்துக்கும் அதிகமாக கணக்கிடப்பட்டன. சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோட்டைக் கடந்து இருபுறமும் சென்றார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மதக் கலவரத்தின்போது பெண் களுக்கு மிக மோசமான வன்கொடுமை கள் இழைக்கப்பட்டன. தங்கள் வீட்டுப் பெண்களைப் பிற மதத் தினர் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக, தாங்களே கொன்று குவித்தத் துயர நிகழ்வுகளும் நிறைய நடந்துள்ளன.

ரத்தக் கறைப் படிந்த இந்த வர லாற்றை இலக்கியம் மிக துல்லிய மாகப் பதிவுசெய்துள்ளது. உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோ வின் ‘டோபா டேக் சிங்’ என்ற சிறுகதை இதற்கு ஓர் உதாரணம்.

பிரிவினைக்குப் பிறகு இந்தியா வுக்கும் பாகிஸ்தானுக்கும் தங்கள் வசமுள்ள பைத்தியக்காரர்களையும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று ஓர் எண்ணம் ஏற்பட்டது.

அதாவது இந்தியாவில் உள்ள பைத்தியக்கார விடுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப் பப்படவேண்டும். பாகிஸ்தானில் உள்ள இந்து மற்றும் சீக்கியப் பைத்தியக்காரர்களை இந்தியா வசம் ஒப்படைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு நாள் குறிக்கப் பட்டது.

லாகூரில் இருந்த ஒரு பைத்தியக்கார விடுதியில் ஒரு சீக்கியர் மனநலம் குன்றியிருந்தார். அவரது உண்மையான பெயர் ‘பிஷன் சிங்’. ஆனால், அவரை ‘டோபா டேக் சிங்’ என்று கேலியாக அழைத்தார்கள். அதற்குக் காரணம் ‘டோபா டேக் சிங்’ என்பது அவரது சொந்த ஊர். அது பஞ்சாப் மாநிலத்தின் சின்னஞ்சிறிய கிராமம்.

பிரிவினையின்போது அந்தக் கிரா மம் இந்தியாவில் உள்ளதா அல்லது பாகிஸ்தானில் உள்ளதா என்று அந்த மனநல விடுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை.

15 ஆண்டுகளாக ‘டோபா டேக் சிங்’ ஒருநாள்கூட தூங்கியதே இல்லை. சதா நின்று கொண்டு தனக்குத் தானே புலம்பிக்கொண்டிருப்பார். பைத்தியங் களைப் பரிமாற்றிக் கொள்ளும் நாளில், இரண்டு தேசங்களும் அவரை ‘தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் இல்லை’ என வெளியே அனுப்ப முயன்றன. எங்கே போவது எனப் தெரியாமல் அவர் அலறினார். செய்வது அறியாமல் இரவெல்லாம் எல்லையிலேயே நின்று கொண்டிருந்தார்.

விடிகாலையில் அவர் தரையில் தலைகுப்புற சரிந்து விழுந்து கிடந்தார். அவரது தலை இந்தியாவை நோக்கியும் பாதங்கள் பாகிஸ்தான் அமைந்த திசையிலும் அசையாது கிடந்தன. அவரது முகம் புதைந்திருந்த துண்டு நிலத்துக்கு எந்தப் பெயரும் இல்லை என கதை முடிகிறது.

பஞ்சாபி இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளர் கர்த்தார் சிங் துக்கல் (Kartar Singh Duggal). சாகித்ய அகாடமி பரிசுப் பெற்றவர். இந்தியப் பிரிவினைக் குறித்து முக்கியமான கதை களை எழுதியிருக்கிற இவரது குறிப்பிடத் தகுந்த நாவல் ‘இருமுறை பிறந்து, இரு முறை இறந்து’ என்பதாகும்.

துக்கலின் ‘பவுர்ணமி இரவு’ மற்றும் சில கதைத் தொகுப்பினை சாகித்ய அகாடமி வெளியிட்டுள்ளது. லதா ராமகிருஷ்ணன் இந்தக் கதை களை சிறப்பாக மொழியாக்கம் செய் திருக்கிறார்.

இவற்றில் ‘குல்ஸீம்’ என்ற துக்கலின் சிறுகதை மறக்க முடியாதது.

மதக் கலவரத்தின்போது கிடைத்த ஓர் இளம்பெண்ணைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான் ஒரு கிழவன். அந்தப் பெண்ணை பள்ளி ஆசிரியராக உள்ள தனது எஜமானனுக்குப் பரிசாகத் தருகிறான்.

தூக்கிவரப்பட்டப் பெண்ணின் பெயர் குல்ஸீம். பள்ளி ஆசிரியன் ஓர் இளைஞன். தூக்கிவரப்பட்டப் பெண்ணை அனு பவித்துக்கொள்ளும்படி அந்தக் கிழவன் ஆசிரியரின் குடிசைக்குள் விட்டுச் சென்றவுடன், அந்த ஆசிரிய னுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தயக்கத்துடன் அவளை அணுகு கிறான். அவளோ கைகூப்பியபடியே தன்னை விட்டுவிடும்படிக் கெஞ்சுகிறாள். இளைஞனின் காமம் அவனை மூர்க்கமடைய செய்கிறது.

அவள் நடுங்கியபடியே, ‘‘என்னை அடைய வேண்டுமானால் என்னை திருமணம் செய்துகொள். நான் உன் குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருப்பேன்…’’ என்று மன்றாடுகிறாள்.

ஆனாலும் அந்த இளைஞன் அவளது கையைப் பிடித்து பலவந்தமாக இழுக்கிறான்.

அவள் கண்ணீர் மல்க, ‘‘எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. உன் வயதையொத்த ஒருவன்தான் மாப்பிள்ளை. ஆனால் மதக் கல வரத்தின்போது ஒரு கும்பல் அவனை சுற்றிவளைத்து வெட்டிக் கொன்று விட்டது. என்னுடைய பெற் றோரும் கொல்லப்பட்டுவிட்டார்கள். நான் மட்டும் உயிர் பிழைத்து தப்பியோடியபோதுதான் இந்தக் கிழவன் கையில் மாட்டிக்கொண்டேன். நான் என்னை உனக்குத் தருகிறேன். எனக்கு வாழ்க்கைக் கொடு’’ என்று கெஞ்சுகிறாள்.

பள்ளி ஆசிரியன் குழம்பிப் போய் விடுகிறான். கண்ணீர்விடும் இவளை எப்படி அடைவது எனப் புரியாமல் வெறுத்துப் போய், அந்த குடிசையை விட்டு வெளியே வருகிறான்.

வாசலில் சணல்கயிறு திரித்துக் கொண்டிருந்த கிழவன் ஆத்திரத்துடன் உள்ளே போகிறான். கதவை அறைந்து சாத்துகிறான்.

‘‘கல்யாணம் கேட்கிறதா சிறுக்கி உனக்கு?’’ எனக் கத்தியபடியே அவளை அடித்து வீழ்த்துகிறான். உடைகளைக் கிழிக்கிறான். அவளை வன்புணர்ச்சி செய்கிறான். பிறகு தனது லுங்கியை கட்டிக்கொண்டு குடிசைக்கு வெளியே வந்து நின்று, ‘‘எஜமான்… இனிமேல் அவள் உங்களுக்கு ஒத்துழைப்பாள்’’ என்கிறான்.

பள்ளி ஆசிரியன் உள்ளே போகிறான். கூந்தல் கலைந்து, நெற்றியிலும் கன்னத்திலும் வியர்வை வழிந்தோட அந்தப் பெண் கட்டிலில் கிடக்கிறாள். அவளது மேலாடை நழுவி கிடக்கிறது.

‘குஸ்லீம்’ என்று அவள் பெயரை சொல்லி அழைக்கிறான் பள்ளி ஆசிரியன்.

மூன்று நிமிஷம் முன்பு வரை அன்புக்காக அவனிடம் மன்றாடியவள், இப்போது எதுவும் கூறவில்லை. கல்லைப் போல அசைவற்று கிடந்தாள்.

இனி அவனுக்கு எதிர்ப் பில்லை. அந்தக் குடிசையை இருள் சூழ்ந்தது என்பதுடன் கதை நிறைவு பெறுகிறது.

இந்தியப் பிரிவினையின்போது இப்படி எத்தனையோ ஆயிரம் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டார்கள். அதனால் ஏற்பட்ட கர்ப்பத்தை சுமந் தார்கள். கருக்கலைப்பு செய்து கொண்டார்கள். இந்தியப் பிரிவினையின் ரத்த சாட்சியமாக அமைந்துள்ளது இச்சிறுகதை.

துக்கலின் சாகித்ய அகாடமி பரிசுப் பெற்ற இந்தச் சிறுகதை தொகுப்பு இளம்வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்.

- இன்னும் வாசிக்கலாம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x