Published : 24 Sep 2015 11:41 AM
Last Updated : 24 Sep 2015 11:41 AM
உடலில் விழும் அடியைவிட மனதில் விழும் அடி வலி மிகுந்தது. அதுவும் சின்னஞ்சிறு வயதில் யாராவது மிக மோசமாக திட்டிவிட்டால், அது மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். எத்தனை வயதானாலும் அந்த வலி மறப்பதே இல்லை. அப்படிதான் மேரி மெக்லியோட் பெத்யூனுக்கும் நடந்தது.
அமெரிக்காவில் 125 ஆண்டுகளுக்கு முன்பாக கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வாக்கு உரிமை, சொத்து உரிமை, கல்வி உரிமை எதுவும் கிடையாது. திருமணம் செய்துகொள்வது கூட எஜமானர் அனு மதித்தால் மட்டுமே நடக்கும். குடும்பமே பண்ணை முதலாளிக்கு அடிமைப் பணி செய்ய வேண்டிய கட்டாயம். எதிர்த்துப் பேசினால் பட்டினி போட்டு அடித்து வதைப்பார்கள். தப்பி ஓடினால் பிடித்து வந்து சிறையில் அடைத்து கொடுமைப் படுத்துவார்கள். அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் கை கால்களில் விலங்கோடு தான் வாழ வேண்டியிருக்கும்.
புளோரிடாவில் உள்ள ஒரு பண்ணை உரிமையாளரிடம் அடிமையாக வாழ்ந்து வந்த கருப்பினக் குடும்பத்தில்தான் மேரி மெக்லியோட் பிறந்தார். பருத்தி தோட்டத்தில் வேலை செய்து வந்தது அவர்களின் குடும்பம்.
ஒரு நாள் மேரி தன் வயதையொத்த வெள்ளைக்கார சிறுமி ஒருத்தி விளையாட அழைத்ததால், ஆசையாக அவளது வீட்டுக்குப் போனாள். அங்கு இருந்த ஒரு மேஜையில் அழகாக பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் ஒன்று இருந்தது. ஆசையாக மேரி அதை கையில் எடுத்து புரட்டியபோது, அந்த வெள்ளைக்கார சிறுமி வேகமாகப் பிடுங்கியபடியே சொன்னாள்: ‘புத்தகத் தைத் தொடாதே உனக்குப் படிக்கத் தெரியாது’’ என்று.
மேரிக்கு அவள் சொன்னது புரிய வில்லை. ‘‘சும்மா புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டுத் தருகிறேனே’’ என்றாள் மேரி. ஆனால், அந்த வெள்ளைக்கார சிறுமி ஏளனத்துடன், ‘‘கருப்பின மக்களுக்குப் படிக்க உரிமை கிடையாது’’ என்று சொல்லியபடியே புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டுவிட்டாள்.
அந்த சம்பவம் மேரியின் மனதை வெகுவாக பாதித்தது. ‘கருப்பின மக்கள் அடிமைகளாக இருப்பதற்கு, அவர் களுக்குக் கல்வி கிடைக்காததே முக்கிய காரணம். எழுதப் படிக்கத் தெரியாதவர் கள் என்பதால்தான் ஏமாற்றப்படுகிறார் கள்’ என அவள் மனம் கவலைகொள்ள தொடங்கியது.
‘நான் படிக்க வேண் டும்; எப்படியாவது படிக்க வேண்டும்…’ என தனக் குத் தானே சொல்லிக் கொண்டாள். தன் கையில் இருந்த புத்தகம் பிடுங் கப்பட்ட நிகழ்வை, மேரி யால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியவில்லை. அந்தப் புத்தகம் அவளை கனவிலும் துரத்திக் கொண்டேயிருந்தது.
‘எப்படியாவது கல்வி பெற்று, தான் புத்தகம் படித்த பெண்ணாக உரு மாற வேண்டும்’ என மேரி விரும் பினாள். அதன்படியே ஸ்காட்டியா செமினரியில் சேர்ந்து கல்வி பெற்று வாழ்வில் உயர்ந்ததோடு, தன்னைப் போன்ற கருப்பின மக்களுக்கான பள்ளி ஒன்றையும் நிறுவினார் மேரி மெக்லியோட் பெத்யூன்.
அவரது வாழ்க்கை வரலாற்றை சுவை பட, உணர்ச்சிபூர்வமான மொழியில் எழுதியிருக்கிறார் கமலாலயன். ‘உனக் குப் படிக்கத் தெரியாது’ என்ற இந்தப் புத்தகத்தை மதுரையில் உள்ள வாசல் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
கருப்பினப் பெண்ணான மேரி மேக்லி யோட் பெத்யூன் கல்வி கற்பதற்கு என்னென்ன தடைகளை சந்தித் தார்? அதை எப்படிக் கடந்து சென்று சாதனை நிகழ்த்தினார்? தான் விரும்பிய படி ஒரு பள்ளியை உருவாக்க எவ்வளவு சிரமப்பட்டார் என்பதையெல்லாம் நெகிழ் வுடன் விவரிக்கிறார் கமலாலயன்.
இந்தப் புத்தகம் மேரியின் வாழ்க்கை வரலாறு மட்டுமில்லை; கருப்பின மக் களுக்குக் கல்வி எவ்வாறு கிடைத்தது என்ற சமூக ஆவணம் ஆகும்.
ஒருமுறை தந்தை தன்னைக் கடைக்கு அழைத்துக் கொண்டுபோய் ‘‘என்ன வேண்டும்?’’ என கேட்டபோது, ‘‘எழுதுவதற்குப் பயன்படுகிற வகையில் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுங்கள்’’ எனக் கேட்டாள் மேரி.
மேரிக்கு அவரது தந்தை சிலேட்டும் சாக்பீஸ் ஒன்றும் வாங்கிக் கொடுத்தார். அதுதான் அவள் வாழ்வில் பெற்ற மிகச் சிறந்தப் பரிசு. அந்த சிலேட்டை எப்போதும் கூடவே வைத்திருந்தாள் மேரி. அதில் படம் வரை வாள், எழுதுவாள், கை ஒயும் வரை எழுதிக்கொண்டே யிருப்பாள். தான் கற்றுக் கொண்டதைத் தனது சகோ தரிகளுக்கும் சொல்லித் தரு வாள். மேரியின் பள்ளி வாழ்க்கை மிக எளிமையாக மிஸ் வில்ஸன் என்ற ஆசி ரியை வீட்டில் தொடங்கியது.
அதன் பிறகு ஸ்காட்டியா செமினரியில் சேர்ந்து படிக்க ஆரம் பித்தார் மேரி. அங்கே வெள்ளைக் கார ஆசிரியர்கள் அன்புடன் மேரியை நடத்தினார்கள். ‘எல்லா வெள்ளைக்காரர் களும் இனவெறி கொண்டவர்கள் கிடையாது’ என்பது அப்போதுதான் மேரிக்குத் தெரியவந்தது.
ஸ்காட்டியாவில் பயிலும்போது அமெரிக்க கருப்பின மக்களின் வரலாறு சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார் மேரி. குறிப்பாக, ‘டாம் மாமா’ எழுதிய ‘குடிசை’ அவருக்கு மிக பிடித்த மான புத்தகமாகும். கோடை காலத்தில் ஊருக்குப் போக பணமில்லாமல் வீட்டு வேலைகள் செய்தார். பின்பு ஜியார்ஜியாவில் ஆசிரியராக தன் முதல் பணியைத் தொடங்கினார் மேரி.
அவரது கனவில் அப்போதும் புத்தகங் கள்தான் துரத்திக் கொண்டேயிருந்தன. ‘கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளுக் கெல்லாம் கல்வி கற்றுத் தரவேண்டும்’ என்பதில் உறுதியாக இருந்தார்.
ஐந்து சிறுமியர் படிக்கும் சிறிய பள்ளி ஒன்றைத் தொடங்கினார் மேரி. அந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்கள் மட்டுமல்ல; பழகும்விதம், வீட்டை பராமரிப்பது, போன்றவற்றையும் கற்று தந்தார் மேரி.
தனது பள்ளியில் படிக்கும் மாணவர் களுக்கு உணவு அளிப்பதற்காக கடன் வாங்கினாள். பள்ளிக்கு வருமானம் இல்லை என்பதால் அதை நடத்துவது பெரிய போராட்டமாக இருந்தது. வீடு வீடாகப் போய் அழைப்பு மணியை அடித்து யாசகம் கேட்பார் மேரி. எதுவு மில்லை என்று சொல்லித் துரத்துபவர் களிடம் கூட, ‘உங்கள் நேரத்தை ஒதுக்கி என் பேச்சை கேட்டதற்கு நன்றி’ எனக் கூறி விடைபெறுவார்.
1907-ல் மேரியினுடைய பள்ளியின் முதல் கட்டிடம் திறக்கப்பட்டது. நான்கு ஆசிரியர்கள் அவருடன் பள்ளியில் பணி யாற்றினார்கள். 1908-ல் அந்தப் பள்ளிக்கு ‘தாய்தோனா’ தொழிற் பயிற்சிப் பள்ளி எனப் பெயரிடப்பட்டது. அந்த ஆண்டில் அந்தப் பள்ளியை புக்கர் டி. வாஷிங்டன் பார்வையிட்டுப் பாராட்டினார்.
அந்தப் பள்ளி வளரத் தொடங்கியது. அதன் முதல் பட்டமளிப்பு விழாவுக்குத் தனது தாயை அழைத்திருந்தார் மேரி. அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘‘இவர்கள் எனது குழந்தைகள். 400 குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன் நான்’’ எனக் கண்ணீர் மல்கினார் மேரி மெக்லியோட் பெத்யூன்.
கருப்பின மக்களுக்கான அந்தப் பள்ளியை தீவைத்து எரிக்கப் போவதாக மிரட்டல்கள் வந்தன. ஆசிரியர்களும் மிரட்டப்பட்டார்கள்.
35 ஆண்டுகள் பணியாற்றி ‘பெத்யூன் குக்மேன்’ கல்லூரியாக அதை வளர்த்து எடுத்தார். நீண்டகாலமாக அவரை வாட்டிய ஆஸ்த்துமா நோய்க்காக சிறிய அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அப்போதும் ‘ஒரு கருப்பின மருத்துவர் தான் தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று அவர் வேண்டுகோள் வைத்தார். வாழ்நாள் முழுவதும் கருப் பின மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றிய மேரி மேக்லியோட் பெத்யூன் 1955-ல் காலமானார்.
அவரது வாழ்க்கைக் கல்வி மறுக்கபட்ட சமூகத்தின் அடையாளக் குரலாக இன்றும் தொடர்ந்து ஒலிக்கிறது.
- இன்னும் வாசிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmial.com
முந்தைய அத்தியாயம்: >வீடில்லாப் புத்தகங்கள் 50: வான் தொடும் குரல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT