Last Updated : 31 May, 2020 07:00 AM

 

Published : 31 May 2020 07:00 AM
Last Updated : 31 May 2020 07:00 AM

கொள்ளைநோய் தந்த இலக்கியம்

பெரிய அனுபவமான கொள்ளைநோய்கள் இருக்கும்போதும், அவை நம்மைக் கடந்த பிறகும் சில பண்பாட்டு விளைவுகள் வருவது இயல்பு. நல்லது, கெட்டது பற்றிய நம் தெளிவு குலைவது உண்டு. மக்களின் அனுபவம் ஆழமாகி இலக்கியங்களும் உருவாகியுள்ளன.

கதைக்குள் வரும் கதைகளாக ‘டெக்கமரான்’ என்று பெயரிட்டு ஒரு கதைத் தொகுப்பு எழுதினார் பதினான்காம் நூற்றாண்டு இத்தாலியக் கவிஞர் ஜொவான்னி பொக்காச்சோ. ஒட்டுவாரையெல்லாம் ஒட்டிக்கொண்டு ஃப்ளாரண்டைன் நகர மக்களில் பாதிக்கும் மேல் வாரிக்கொண்டுபோன பிளேக் தொற்று அவர்களின் அன்றாட நெறிகளை என்ன செய்தது என்று அவர் விவரிக்கிறார். தொற்றுக் கிலியில் மனித உறவின் பிணைப்புகள் இற்றுப்போனதாம்: “உடன்பிறந்தவர்கள் ஒருவரை ஒருவர் கைவிட்டனர். மாமன் மருமகனைக் கைவிட்டார். குழந்தைகளைப் பராமரிக்கப் பெற்றோர்களே மறுத்தனர்.” நெறியிலிருந்து உலகம் தடம்புரண்ட அடையாளம் இது. ஆனாலும், அப்போது ஆறுதல் தேடி அது கிடைக்கப்பெற்றவர்கள் பின்னாளில் துயரத்தில் இருப்பவர்களைக் கண்டால் மிகுந்த பரிவு காட்டினார்களாம்.

கரோனா எப்படி வருகிறது, ஏன் வருகிறது என்று நாம் ஆராய்வது போன்ற அவசியம் பொக்காச்சோ காலத்தவருக்குத் துளிகூட இருக்கவில்லை. வானத்தில் கோள்களின் இயக்கம் காரணமாக பிளேக் வந்திருக்கலாம்; நம் அட்டூழியங்களால் ஆண்டவனுக்கு வந்த நியாயமான ஆத்திரம் நம்மைத் திருத்துவதற்காக இதை அனுப்பியிருக்கலாம் என்று நினைக்கிறார்கள். நோயிலிருந்து தப்பிக்க ஃப்ளாரண்டைன் நகரிலிருந்து வெளியேறியவர்களை பொக்காச்சோ கேலிசெய்கிறார். அந்தந்தக் காலத்துக்கு அதனதன் ஞானத் தெளிவு. பிளேக் தொற்றைப் பற்றி பொக்காச்சோவுக்கு ஒரு நிச்சய அறிவு. எதையும் நிச்சயமாக அறிந்துகொள்வது மனிதர்களுக்குச் சாத்தியமா என்று நாம் என்றைக்கும் கேட்க மாட்டோம். அறிவின் நிச்சயத்தன்மைக்கு நாம் இப்படிப் பழகிக்கொண்டதால், ஆல்பெர் காம்யு எழுதிய ‘கொள்ளைநோய்’ என்ற பிரெஞ்சு நாவல் எதையும் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்று கூறுவது நம்மை அதிரவைக்கும்.

காம்யுவின் நாவலில் வரும் மனிதர்களும் நிகழ்வுகளும் அவர் தத்துவம் எடுத்துக்கொள்ளும் உருவங்கள். கொள்ளைநோய் தொற்றிக்கொள்ளும் ஓரான் நகரத்தில் மக்கள் செக்குமாடுபோல் உழைக்கிறார்கள், காதலிக்கிறார்கள், செத்துப்போகிறார்கள். அவரவரே அவ்வப்போது முடிவெடுத்துச் செய்வதுபோல் அல்லாமல் எதையும் பழக்கமாகவே வளர்த்துக்கொள்கிறார்கள். எல்லாம் பழக்கமாகப் படிந்துவிட்டால் வாழ்க்கையில் மனக் கிளர்ச்சிக்கான புதுமை இருக்காதுதான். ஆனால், சமூகப் பதற்றமும் கிளர்ச்சியும் இருக்காதல்லவா!

ஓரான் நகரின் சாதாரணத் தன்மைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத பெரிய நிகழ்வாகக் கொள்ளைநோய் வருகிறது. இது வருமோ என்று எதிர்பார்த்து அஞ்சுவதற்கு அப்போது காரணமே இல்லை. இந்த விநோத நிகழ்வின் முழு வீச்சைக் கணிக்க முடியவில்லை. இது எப்படித் தோன்றியது என்று யாரும் கண்டறியவில்லை. அப்போதைய உண்மையான துயரத்தைச் சொல்லிக்கொள்ள, எப்போதோ உருவாகியிருந்த சராசரிச் சொற்களைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டியிருந்தது. தனிநபர்கள் அனுபவிக்கும் விதியாக எதுவும் இருக்கவில்லை. எல்லாமே சமூகத்தின் ஒட்டுமொத்தத் தலைவிதியாக இருந்தது. ஒரு நிரவலைச் செய்து, அவையும் அவையுமாக இருந்த தனித்த தன்மையை பிளேக் அழித்துவிட்டது. தொற்றைத் தாங்கள் அறிந்த வகையை மருத்துவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: ‘‘இருக்கலாம்; எதுவாகவும் இருக்கலாம். இப்போது எதையும் நிச்சயமாகச் சொல்ல இயலாது.” இந்தக் குழப்பம் ஓரான் நகர மக்களுக்கு மனக்கலவரமாகி, அது பீதியாக மாறி, பின்னர் ஆழ்ந்த சிந்தனையாகிறது.

கதை எழுதுபவர் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்பவர்களுக்கு காம்யு என்ன பதில் சொல்கிறார்? ‘‘இப்படி ஒரு சீமை நோய் நம் நகருக்கு வரும் என்று மக்கள் நம்பவில்லை. சிலர் இதெல்லாம் இயற்கைதான் என்று ஏற்கிறார்கள். கதைசொல்லி இந்தக் கருத்து வேறுபாடுகளைக் கவனிக்க முடியாது. உண்மையில் அப்படித்தான் நடந்தது என்று அவருக்குத் தெரிந்ததால், அது அப்படித்தான் நடந்தது” - வரலாறுகளின் உண்மையை இப்படி விமர்சிக்கும் காம்யு, “மனிதனுக்கு எல்லாமே சாத்தியம் என்று எல்லோரையும்போலவே நம்பும் ஓரான் நகர மக்களால் கொள்ளைநோய் சாத்தியம் என்று நம்ப முடியாது” என்று தன் பதிலை முடிக்கிறார்.

நிச்சயமில்லாத சூழலில் நிற்பவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாவலின் ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்கிறது: “இதை பிளேக் என்று எடுத்துக்கொண்டு நாம் செயல்பட வேண்டும். அப்படிச் செயல்படும்போது அந்த முடிவுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும்.” உலகத்தில் மனிதனின் நிலைமை பற்றியும், நாம் செய்யக்கூடியது பற்றியும் காம்யு இதையேதான் சொல்கிறார். நாம் செய்ய வேண்டிய முடிவுக்கு நமக்கு வெளியே ஒரு வழிகாட்டி இல்லை. மறைகளை, நெறிகளை, இறைவனையெல்லாம் நம் முடிவுக்குப் பொறுப்பாக்க முடியாது. எல்லாவற்றையும் தீர்மானித்துக்கொண்டிருந்த இறைவன் இருந்த இடம் இப்போது வெற்றிடம். நம் செயல் வழியாக நாமே தீர்மானிப்பதுதான் உண்மையாக வாழ்வதாகும். மரித்தவர்கள் கொள்ளைநோய்க்கும் வாழ்வுக்கும் இடையேயான போட்டியில் தோற்றிருப்பார்கள். பிழைத்தவர்கள் எதை வென்றிருப்பார்கள்? காம்யு இப்படிப் பதில் சொல்கிறார்: “பிளேக் நோயைத் தெரிந்துகொண்ட அனுபவத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை; அந்த அனுபவத்தை நினைத்துக்கொள்ளலாம். நட்பைத் தெரிந்துகொண்ட அனுபவத்தை அவர்கள் அடைந்திருப்பார்கள்; அதை நினைத்துக்கொள்ளலாம். அன்பைத் தெரிந்து கொண்ட அனுபவத்தை அடைந்திருப்பார்கள்; அதையும் ஒருநாள் நினைத்துக்கொள்ள அவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும்.”

கரோனா காலத்தில் உலகம் முழுதும் மக்கள் மறுவாசிப்பு செய்யும் நாவல் காம்யுவின் ‘கொள்ளைநோய்’. கதைக்காக அல்ல, காம்யுவின் தத்துவ மரபுக்காக அந்த நாவலை மீண்டும் வாசிக்கிறார்கள். கரோனாவால் ஆழப்பட்ட மக்களின் அனுபவத்துக்கு காம்யுவின் நாவல் இப்போதும் ஒரு உருவம் கொடுத்து உதவியிருக்கும்.

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x