Published : 15 Aug 2015 11:54 AM
Last Updated : 15 Aug 2015 11:54 AM

வாசிப்பைக் கொண்டாடும் கோவை!

கோவையில் புத்தகக் காட்சிகள் இப்போதுதான் நடைபோட ஆரம்பித்திருந்தாலும் சில விஷயங்களில் கோவை புத்தகக் காட்சி தனித்துத் தெரிகிறது. கோவையின் புத்தகப் பசிக்குத் தீனிபோட வந்திருக்கும் இந்தப் புத்தகக் காட்சியின் தனித்தன்மைகளை இங்கே காணலாம்.

இலவச பேருந்து வசதிகள்.

புத்தகத் திருவிழா நடக்கும் கொடீசியா அரங்கம், கோவை ரயில்வே ஸ்டேஷனிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் புத்தக விற்பனையாளர்கள் தங்குவதற்கான விடுதி வசதி மட்டமல்லாமல் வாகன வசதிகள் போன்றவற்றுக்கும் பொறுப்பேற்றுள்ளது கொடீசியா. அவிநாசி சாலையிலிருந்து கொடீசியாவுக்கு வரும் வாசகர்களையும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரையும் அழைத்து வந்து, திரும்பக் கொண்டுபோய் விட கொடீசியாவே பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை புத்தகக் காட்சியிலும் இதைப் பின்பற்றலாமே!

இலக்கு இரண்டு கோடி

கோவை புத்தகத் திருவிழாவில் குறைவான அளவிலேயே ஸ்டால்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. கோவை நகரத்துக்கு வெளியே அமைந்திருக்கும் கொடீசியாவில் திடீர் ஏற்பாடாகச் செய்யப்பட்டதே காரணம். இரண்டு கோடி ரூபாய் விற்பனை இலக்கு வைத்திருக்கிறார்கள். இந்த இலக்கை நிறைவுசெய்தாலே போதும், விற்பனையாளர்களுக்குக் கையைக் கடிக்காது. இரண்டு கோடி ரூபாய் வசூலைக் கடந்தால் அடுத்த ஆண்டும் கோவையில் கண்காட்சி நிச்சயம். கோவை வாசகர்கள் மனது வைத்தால் இரண்டு கோடி எம்மாத்திரம்!

கலாமுக்கு மவுசு

அப்துல் கலாம் எழுதிய நூல்களுக்கு, அதிலும் ‘அக்னிச் சிறகுகள்’ புத்தகத்துக்கு, பயங்கரத் தட்டுப்பாடு. மறுபதிப்பு வரவில்லை என்று வாசகர்களுக்கு பதில் சொல்லியே அலுத்துப்போகிறது விற்பனையாளர்களுக்கு.

பவனி வரும் பசுமைப் புத்தகங்கள்

இயற்கை ஆர்வலர் முகம்மது அலி எழுதிய ‘அதோ அந்த பறவை போல’, வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய ‘மன்னார் கண்ணீர் கடல்’, ‘ராமேஸ்வரத் தீவு மீனவர்கள்’ ஆகிய இரண்டு நூல்களையும் வாசகர்கள் அதிகம் வாங்கிக்கொண்டு போகிறார்கள். கோவை சதாசிவம் எழுதிய ‘ஆதியில் யானைகள் இருந்தன’ என்ற புத்தகமும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.

தென்னிந்தியாவில் முதன்முறையாக இ-ரீடர்ஸ்

‘பீப் எக்ஸ்பீரியன்ஸ் மேனேஜ்மென்ட்’ எனப்படுகிற நிறுவனத்தின் அரங்கு நம்மை ஈர்க்கிறது. கிண்டில் இ-ரீடர்ஸில், லட்சக் கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை மின்நூல்களாகவே (இ-புக்ஸ்) இவர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். வை-ஃபை, 3ஜி வசதியுள்ளவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் டவுன்லோடு செய்துதரப்படும். அதை எப்படிப் பெறுவது என்ற செயல்விளக்கத்தில் ஈடுபட்டிருந்தார்கள் இந்த பதிப்பகத்தினர். தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக கோவை புத்தகக் காட்சியில்தான் இவர்கள் அரங்கு அமைத்திருக்கிறார்கள். ரூ.6,000-க்கு மின்நூல்கள் வாங்கினால் ரூ.1,000 தள்ளுபடி கொடுக்கிறார்கள். ‘இதுபோல தமிழ்ப் புத்தகங்கள் எப்போ சார் வரும்?’ என்று கேட்டால் ‘நிர்வாகத் தரப்பில் முடிவு செய்ய வேண்டிய விஷயம் அது!’ என்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x