Published : 29 Aug 2015 12:05 PM
Last Updated : 29 Aug 2015 12:05 PM
இப்பொழுதுதான் நடந்ததுபோல் இருக்கிறது ஆனால் பத்தாண்டுகளைத் தொட்டுவிட்டது. த.உதயச்சந்திரன் மதுரையின் ஆட்சியராக இருந்தபோது நண்பர்கள் சிலருடன் இணைந்து செயல்பட்டு மதுரையில் புத்தகக் கண்காட்சி துவக்கப்பட்டது.
சென்னைக்குக் கீழே தமிழகத்தின் பிற மாவட்டங்கள் இருக்கிறது என்றுதான் அதிகாரத்தில் இருக்கும் பலரும் நினைக்கிறார்கள். வரைபடத்தைச் சுவற்றில் தொங்கவிடாமல் மேஜையில் விரித்துப் பாருங்கள், தமிழகத்தின் எல்லைப்புற மாவட்டங்களில் ஒன்று சென்னை. ஆனால் தலைநகர் என்பதன் பொருட்டுக் கடந்த அரை நூற்றாண்டாக இங்கு நிகழ்ந்துள்ள பாரபட்சங்கள் அளவிடற்கரியது. இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து புத்தகக் கண்காட்சி நடத்துபவர்களும் தப்பவில்லை.
“சென்னையைத் தவிரப் பிற மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சியை நடத்தினால் அது எடுபடாது சார்”, என்று பல ஆண்டுகள் பேசிக்கொண்டிருந்தார்கள். உரிய முறையில் நடத்தினால் அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதைச் செயல்படுத்திக்காட்டி அனைவரையும் ஏற்கவைத்தோம்.
எந்தப் பெயரில் நடத்துவது, என்ற விவாதத்தினூடே உருவானதுதான் “மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன்” என்ற வாசகம். புத்தக விற்பனை என்பது வெறும் பொருள் விற்பனை அல்ல, அரசு நிர்வாகம், பதிப்பாளர்கள், படைப்பாளர்கள், வாசகர்கள் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டிய பண்பாட்டு இயக்கம். இன்று தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகள் இத்தகைய கூட்டியக்கத்தின் வெவ்வேறு வடிவங்கள்தான். இது கூடல் மாநகர் கொடுத்த கொடை. நல்ல விஷயங்கள் சத்தமில்லாமல் பரவுவது சந்தோஷம் அளிக்கிறது.
தமிழ் நிலத்தில் எழுத்தறிவு ஒரு பேரியக்கமாகச் சங்க காலத்தில் இருந்துள்ளது. மன்னர்கள், செல்வந்தர்களிடம் மட்டுமோ அல்லது குறிப்பிட்ட குழு அல்லது சாதியிடம் மட்டுமோ மொழியறிவும், எழுத்தறிவும் சுருங்கிவிடாமல் வெகுமக்களின் பொதுவறிவாக மொழி அறிவு இருந்திருக்கிறது.
இந்த எழுத்தறிவியக்கத்தின் மையமாக இருந்தது மதுரை. அதனால்தான் மதுரையைத் ‘தமிழ் மதுரை’ என்றும், வைகையைத் ‘தமிழ் வைகை’ என்றும் சங்க இலக்கியங்கள் போற்றுகின்றன. எழுத்தும், மொழியும் அது சார்ந்த அடையாளங்களும் இந்நகரின் இயக்கத்தோடு இரண்டறக் கலந்தவை. வஜ்ரநதியின் சங்கம் துவங்கி எண்ணற்ற சங்கத்தினரால் இந்த மரபு காலங்காலமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நெடிய மரபின் நவீன காலத்தின் அடையாளமாக அமைந்தவர் பாலவநத்தம் ஜமீன் வள்ளல் பாண்டித்துரை தேவர். அவர் மதுரையில் உருவாக்கிய நான்காம் தமிழ்ச் சங்கம் எண்ணிலடங்காப் புத்தகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் பதிப்பித்த புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை ஆகிய இரண்டு நூற்களை வெளியிடுவதற்கு பாண்டித்துரை தேவர் செய்த உதவிகளை, உ.வே.சா. மணிமேகலை நூலுக்கு எழுதிய முகவுரையில் விரிவாகக் குறிப்பிடுகிறார்.
இன்றளவும் தமிழின் பொக்கி ஷங்களில் ஒன்றாக விளங்கும் நூல் ‘அபிதான சிந்தாமணி’. அந்நூலைச், சென்னை பச்சை யப்பன் கல்லூரி தமிழாசிரியர் வித்வான் சிங்காரவேலு முதலியார் நெடுங்காலமாக எழுதித் தொகுத்து வைத்திருந்த நிலையில், பாண்டித்துரை தேவர் சென்னைக்குச் சென்று, அவரிடமிருந்த கைப்பிரதியை மதுரைக்கு வாங்கிவந்து, பலரைக் கொண்டு சிறப்பாகப் படியெடுத்து, அச்சிட்டு வெளியிட்டதை நூலின் முகவு ரையில் சிங்காரவேலு முதலியார் சிறப்பாகப் பதிவு செய்கிறார். யாழ்ப்பாணம் கதிர்வேற்பிள்ளை ‘தமிழகராதி’, ‘வில்லிபாரதம்’ போன்ற பல நூற்களை வெளியிட்டார். புதிய, புதிய புத்தகங்கள் எழுதப்பட்டு, வாசகர்களுக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த தீவிரம் நம்மை இன்றளவும் ஆச்சரியப்படுத்துகிறது.
ஸ்காட் துரை என்ற ஆங்கிலோ - இந்தியர் அவர் வள்ளுவரின் திருக்குறளில் பல இடங்களில் எதுகை, மோனை இல்லை எனச் சொல்லி அவற்றையெல்லாம் திருத்தி புதிய குறள் புத்தகமொன்றை நல்ல தாளில் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். புத்தகத்தின் தலைப்பில் “சுகாத்தியரால் திருத்தியும், புதுக்கியும், பதிப்பிக்கப்பட்ட குறள்” என்று அச்சிட்டிருந்திருக்கிறார். அதனைக் கொண்டுவந்து பாண்டித்துரை தேவரிடம் கொடுத்திருக்கிறார். முதற் குறளே
“அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி
உகர முதற்றே உலகு”
என்று அச்சிடப்பட்டிருந்திருக்கிறது. அதனைப் பார்த்தவர், “எத்தனை பிரதி அச்சிட்டீர்கள்? எனக் கேட்டிருக்கிறார். “ஐநூறு பிரதி அச்சிட்டு அதில் இருநூறு பிரதி வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டேன், மீதி முந்நூறு பிரதிகள் விலையாகவில்லை” என்று ஸ்காட் துரை சொல்லியிருக்கிறார். உடனே அவர் அந்த முந்நூறு பிரதிகளையும் நானே வாங்கிக்கொள்கிறேன் எனச் சொல்லி, அவற்றை மொத்தமாக வாங்கி, அது பிறரிடம் பரவாமல் பாதுகாத்திருக்கிறார்.தன்னிடம்கூட அப்பிரதிகள் பாதுகாக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். தமிழை அறிந்துகொள்ளும் பொருட்டும், தமிழ் அழியாமல் இருக்கும் பொருட்டும் புத்தகம் வாங்கும் மரபு மதுரைக்கு உண்டு.
உங்கள் குழந்தை ஒரு புத்தகத்தைக் கையில் ஏந்திச் செல்வது, தனது அலகால் நெல்மணிகளைக் கொத்திச் செல்லும் பறவையைப் போன்றதே. இறுக்கங்களைத் தகர்க்கவும், புதிய சக்தியாய் மேலெழவும் அதனால் முடியும்.
தேவதைகளுக்குச் சிறகுகள் இருப்பதாகப் படித்திருப் பீர்கள். அது புத்தகத்தை வாங்கிச் செல்லும் உங்கள் குழந்தையைப் பற்றிய சித்திரம்தான் என்பதை உணரும் தருணங்களை புத்தகக் கண்காட்சிகள் உருவாக்குகின்றன.
-சு.வெங்கடேசன், எழுத்தாளர்,
‘காவல் கோட்டம்’ நாவல் ஆசிரியர்,
தொடர்புக்கு: suvetpk@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT