Published : 19 Apr 2020 08:01 AM
Last Updated : 19 Apr 2020 08:01 AM
வைக்கம் முகம்மது பஷீரின் ‘பால்யகால சகி’ மிக முக்கியமான நாவல். இளம்பருவத்துக் காதலைச் சொன்ன நாவல்களில் இதற்குத் தனியிடம் உண்டு. முதற்காதலின் நினைவுகள் ஒருபோதும் அழியாது. அறியாப் பருவத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பும் அந்த நட்பின் மிகுதி காதலாவதும் எத்தனை அற்புதமான அனுபவம். அந்த நாட்களில் பதின்வயதுப் பையனோ பெண்ணோ கற்பனையிலே வாழ்கிறார்கள். கனவுகளில் சஞ்சரிக்கிறார்கள். பதின்வயதின் காதல் முதன்மையாக ஏக்கத்தையே தருகிறது. பேசுவதற்கு, சந்தித்துக்கொள்வதற்கு, கைகளைப் பற்றிக்கொள்வதற்கு என எத்தனை எத்தனை ஏக்கங்கள், ஆசைகள். தயக்கமும் அச்சமும் துணிச்சலும் கொண்டதுதானே முதற்காதல்!
முதற்காதலை இலக்கியம் கொண்டாடியிருக்கிறது. குறிப்பாக, இவான் துர்கனேவின் ‘முதற்காதல்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான காதல் கதை. ஏன் இந்தியாவின் காதல் அடையாளமாகக் கருதப்படும் ‘தேவதாஸ்’, பால்யகால சிநேகத்தையும் காதலையும்தானே பேசுகிறது! ‘தேவதாஸ்’ இந்திய சினிமாவில் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து ஒரு அழியாத பிம்பம். காதலைப் பற்றிய எல்லா உரையாடல்களிலும் தேவதாஸைப் பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாதது.
வங்க நாவல்கள் ஐம்பது வருடங்களுக்கு முன்பாகவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தீவிரமாக வாசிக்கப்பட்டிருக்கின்றன. தமிழில் வெற்றி பெற்ற ‘பாகப்பிரிவினை’, ‘படித்தால் மட்டும் போதுமா?’ போன்ற ‘பா’ வரிசைப் படங்கள் பெரும்பாலும் வங்கத் திரைப்படங்களின் தமிழ் வடிவமே. வெற்றி பெற்ற வங்கத் திரைப்படங்களின் உரிமையை வாங்குவதற்காகவே தங்களது ஒரு ஏஜென்டைத் தமிழக ஸ்டுடியோக்கள் கல்கத்தாவில் வீடு எடுத்துத்தந்து தங்க வைத்திருந்தன.
பாரு என்ற பார்வதிதான் தேவதாஸின் அகத்தை உருவாக்குகிறாள். அவனைப் புரிந்துகொள்ளவும் அவனது முரட்டுத்தனத்தின் பின்னால் பகிர்ந்துகொள்ளப்படாத அன்பு இருப்பதையும் அடையாளம் கண்டுகொள்கிறாள். அதை தேவதாஸ் தன் வாழ்நாளின் இறுதியில்தான் அடையாளம் காண்கிறான். தேவதாஸின் கோபத்தை பார்வதி ஏற்றுக்கொள்கிறாள். பார்வதியைப் பிரிந்து கல்கத்தாவுக்குப் படிக்கப்போன தேவதாஸ் அவளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. நினைத்து ஏங்கவே இல்லை. அவளை மறந்து நகரவாசியாகி உல்லாசமும் அலங்காரமுமாகத் தன்னை உருமாற்றிக்கொண்டுவிடுகிறான். ஆனால், பார்வதி அவனைக் காதலிக்கிறாள். பிரிவால் வேதனைப்படுகிறாள். பார்வதிக்கு தேவதாஸைப் பற்றி நினைத்துக்கொண்டே இருப்பதுதான் அன்றாட வேலை.
பார்வதியை தேவதாஸ் காதலித்தை விடவும் தேவதாஸை பார்வதி காதலித்தது அதிகம். அவள் தேவதாஸ் முன்னால் அடக்கமான பெண்ணில்லை. மாறாக, காதலின் உன்மத்தம் பிடித்தவள். சரத் சந்திரரின் நாவலில் வரும் பார்வதிக்கு வயது பதிமூன்று. தேவதாஸின் வயது பத்தொன்பது. நிறைய நேரங்களில் இது சிலப்பதிகாரத்தை நினைவூட்டுகிறது.
பார்வதியை நினைத்து நினைத்துப் போதையில் தன்னை அழித்துக்கொள்ளும் தேவதாஸ் ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பெத்தாபுரம் என்ற ரயில் நிலையத்தின் பெயரைக் கேட்டமாத்திரம் பார்வதியின் நினைவு கொப்பளிக்க அவள் வீட்டைத் தேடிப்போகிறான். அவளைச் சந்திக்கவில்லை. ஆனால், அவள் வீட்டின் முன்பாக மயங்கி விழுகிறான். வாழ்வின் கடைசி நிமிடம் வரை காதலே அவனை வழிநடத்துகிறது.
பால்யகாலக் காதலின் விசித்திரத்தை இப்படி எவ்வளவு சொன்னாலும் பேசித் தீராது. தமிழில் பால்யகாலக் காதல் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் சித்தரிக்கப்பட்டுக் கடந்துபோய்விடும். ஆனால், எழுத்தாளரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான தங்கர்பச்சான் ‘அழகி’ என்ற திரைப்படத்தின் மூலம் பால்யகாலக் காதலை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார். ‘அழகி’போல யதார்த்தமான, தனித்துவமான அழகியலோடு இளம்பருவத்தின் காதலைச் சொன்ன படம் இல்லை.
பலாப்பழத்திலிருந்தே பத்ரக்கோட்டை பள்ளிக்கூடம் காட்டப்படுகிறது. தலையைக் கவிழ்ந்து கவிழ்ந்து மாணவர்கள் கணக்கை மனப்பாடம் செய்யும் காட்சியும், எந்த அணில் ஜெயிக்கும் எனச் சிறார்கள் போட்டிபோடும் காட்சியும் அவ்வளவு அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் காட்சியில் சிறுவர்கள் முந்திரிக்கொட்டையைப் பந்தயம் கட்டுகிறார்கள். தன் நிலத்தின் முந்திரியை, பலாப்பழத்தை ஒரே காட்சியில் அழகாகப் பதிவுசெய்துவிடுகிறார் தங்கர்பச்சான். இரட்டைச் சடை போட்டு வட்டமான முகத்துடன் பட்டுப் பாவாடை அணிந்து தனலட்சுமி பள்ளிக்கு முதன்முறையாக வரும்போது சண்முகம் மட்டுமில்லை; பார்வையாளர்களும் அவளது அழகில் மயங்கிவிடுகிறார்கள்.
பெரிய பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர்களையும் நினைவுகொள்ளும் சண்முகம் தனது எட்டாம் வகுப்பின் நினைவுகளில் கரைந்துபோகிறான். ஆசைப்படும் பெண்ணின் பெயரைக் கள்ளிச் செடியில் எழுதுவதும், வகுப்பில் சினிமா கதை சொல்லும் பிச்சாண்டி வாத்தியார் ‘அன்னக்கிளி’ சினிமா நோட்டீஸ் ஒட்டிக் கிழிந்துபோகும் அந்தக் காட்சியும் மிக அழகாக உருவாக்கப்பட்ட காட்சிகள். தனலட்சுமியின் கணவன் கோதண்டத்தின் மீது சண்முகம் அன்பு செலுத்துவது தனத்தின் மீதுள்ள மாளாத அன்பால்தானே. அதுவும் அவள் கணவனுக்குப் பென்சிலால் எழுதிய கடிதத்தில் தன்னைப் பற்றியும் எழுதியிருக்கிறாள் என்பதில்தான் அவனுக்கு எத்தனை சந்தோஷம்.
ஏழ்மையில் நாதியற்ற நிலையில் தனத்தைச் சந்திக்கும் சண்முகத்தின் முகத்தில் வெளிப்படும் வேதனை அழுத்தமானது. பார்த்திபன் மிகச் சிறப்பாக நடித்திருப்பார். குறைவான சொற்களில் அழுத்தமான உணர்ச்சி வெளிப்பாட்டில் அவரது நடிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது. தனலட்சுமியின் மூன்று வயதுக்கும் மிகப் பொருத்தமான நடிகைகள். அதிலும், நந்திதா தாஸின் அற்புதமான நடிப்பானது படத்தின் தனிச்சிறப்பு என்பேன். தேவயானியும் தனது கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தி நடித்திருக்கிறார். ‘அழகி’ படத்தை உன்னதமாக்கியது இளையராஜாவின் இசை. ‘ஒளியிலே தெரிவது தேவதையா… உன் குத்தமா என் குத்தமா’ பாடல்கள் மறக்க முடியாதவை.
‘காசாபிளாங்கா’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நெருக்கடியான நிலையில் கணவன் உயிரைக் காப்பாற்றும் விசாவுக்காகத் தனது பழைய காதலனைத் தேடிவருகிறாள் இல்சா. காதலின் நினைவால் ரிக் செய்யும் உதவிகள் அந்தப் படத்தை ஹாலிவுட்டின் நிகரற்ற காதல் காவியமாக இன்றும் கொண்டாடச் செய்கிறது. ‘அழகி’யின் பிற்பாதியும் அது போன்றதே. அழியாக் காதலின் நினைவுகளை ‘அழகி’யின் வழியே உண்மையாகப் பதிவுசெய்த தங்கர்பச்சான் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
தனலட்சுமி, சண்முகம் என்பது பெயர்களில்லை; முதற்காதலின் அடையாளம். உங்களுக்குள் இருக்கும் தனலட்சுமியை, சண்முகத்தை நீங்கள் ஒருபோதும் மறக்கவே முடியாது.
- எஸ்.ராமகிருஷ்ணன், ‘சஞ்சாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writerramki@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT